அண்ணே! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா! Part 2

Why Banks Say NO to Startup Business Loans

 நல்ல உறவுகளை சம்பாதிப்பது மிகவும் கஷ்டம், அதாவது தங்களிடம் உதவி கேட்பதற்கு முன்பே ஒருவர், நாம் கஷ்டப்படுவது அவனுக்கு தெரிந்தால் “அவனே உதவி இருப்பான்” என்று அவர்கள் மனதில் தோன்றும் அளவிற்கு நீங்கள் உறவுகளை சம்பாதித்து இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த உலகில் அப்படி யோசிக்கும் உறவுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றால் விரல் விட்டு எண்ணலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

சிலர் உதவி என்று கேட்க வரும்போதே தங்களை தயார் செய்து கொண்டு வருவார்கள். அதாவது நீங்கள் நோ என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் அவர்கள் வருவதில்லை. இவர் நோ சொன்னால், அடுத்து இந்த உதவியை நாம் யாரிடம் கேட்கலாம் என்று அடுத்த கட்டத் திட்டம் வைத்திருந்தால், அவர்களுக்கு அத்தகைய எண்ணம் தோன்றாது. உங்களையே நம்பி வரும்போது, நீங்கள் சொல்லும் நோ அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. சரிதான். ஆனால் நாம் ஒரு சரியான காரணத்திற்காக நோ என்று சொல்லும்போது அவர்கள் எவ்வாறு அதை எடுத்துக் கொள்வார்கள், அவர்கள் அதை தவறாக எடுத்துக் கொண்டாலும் அதற்கு நாம் பொறுப்பில்லை தானே!! என்று நினைத்துக் கொள்ளுங்கள்.  நாம் வேண்டுமென்றே ஒன்றை மறுப்பதில்லை, ஆனால் நோ என்று சொல்லும்போது அவர்கள் அதை தவறாக எடுத்துக் கொண்டால் அதற்கு நாம் பொறுப்பும் இல்லை. 


நோ சொல்லும் போது, பிறரை ஏமாற்றுவதற்காக எந்த காரணங்களையும் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்லும் காரணங்கள் அவர்கள் மனதை புண்படுத்துவதாக இருந்தாலும் கூட உண்மையைக் கூறுங்கள். ஏனென்றால் நீங்கள் சொன்ன காரணங்கள் பொய் என்று தெரிய வந்தால் உங்கள் மீது உள்ள மதிப்பும் மரியாதையும் குறைந்துவிடும். அதைவிட முக்கியமானது உங்கள் மீது உள்ள நம்பிக்கை குறைந்து விடும். அதனால் நேரடியாக, நேர்மையாக, நோ சொல்வதற்கான காரணங்களை நீங்கள் கூறுவதில் எந்த தவறுமில்லை. உண்மைதான், இதனால் உங்களின் இழப்புகள் அதிகமாகவே இருக்கலாம். ஆனால் காலப்போக்கில் உங்கள் மீது உள்ள நம்பிக்கை கூடும். எந்த ஒரு உதவிக்கும் இவர் தவறான காரணங்கள் கூறி மறுக்க மாட்டார் என்ற நம்பிக்கை கூடும், மதிப்பும் கூடும்.


பிறர் கேட்கும் உதவிக்கு நீங்கள் கூறும் பதில், என்னால் முடியும், ஆனால், நான் இப்போது செய்ய விரும்பவில்லை என்பது போல் இருந்தால் அது உங்களின் தனிமனித அதிகாரத்தை நிலைநிறுத்தும். அதாவது நீங்கள் ஊரில் ஒரு பெரிய புள்ளி. தான் சிக்கி இருக்கும் ஒரு கேஸிலிருந்து விடு பட, “ஏ1 போலீஸ் இன்ஸ்பெக்டர்கிட்ட கொஞ்சம் சொல்லுங்களேனு” ஒருவர் உதவி கேட்டால், ஏப்பா அந்த இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறது ஒன்னும் பெரிய பிரச்சினையில்ல. நான் சொன்னா கண்டிப்பா செஞ்சு தருவாரு. இருந்தாலும், உன் மேல இருக்கிற கேஸ் சரிதானப்பா. இவ்வாறு நீங்கள் மறுக்கும் உதவி, உங்களால் முடியும் ஆனால் அந்த விஷயத்தில் நீங்கள் தலையிட விரும்பவில்லை என்பதை தெரியபடுத்தும். உதவி கேட்பவர்களிடம் உதவியை செய்ய விருப்பமில்லை என்று சொல்லுங்கள், முடியாது என்று சொல்லாதீர்கள். என்னால் முடியும், இருந்தாலும் அதை நான் செய்ய விரும்பவில்லை என்பது போல மறுப்பு தெரிவியுங்கள்.

இல்லைங்க அது சரிப்பட்டு வராது என்று நீங்கள் பிறர் கேட்கும் உதவிக்கு பதில் சொல்லும் போது, உங்களின் காரணங்கள், நீங்கள் சொல்லும் காரணத்தை பிறர் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்ற பயம் உங்களிடத்தில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்குமேயானால், நீங்கள் அதற்கான பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.


யாராச்சும் உங்களிடம் இன்றைக்கு ஒரு நாள் உங்க காரை தாங்களேன், சிறு வேலை இருக்கிறது, பக்கத்து ஊர் வரைக்கும் சென்று வருகிறேன் என்று கேட்டால், அவர்கள் கேட்கும் உதவிக்கான காரணங்கள் சரியானதாக படவில்லை என்றால், தைரியமாக நோ கூறுங்கள். கார் எனக்கு மிகவும் நெருக்கமானவை நான் பிறருக்கு கொடுப்பது இல்லை என்று சொல்லுங்கள். தவறு இல்லை. அதை அவர் எவ்வாறு எடுத்துக்கொள்வார், அல்லது நீங்கள் இப்படி சொல்வதனால், ரொம்ப திமிரா பதில் சொல்கிறான் என்று அவர்கள் நினைத்தாலும் தவறு இல்லை. ஏன் இதை சொல்கிறேன் என்றால், உண்மையிலேயே நீங்கள் உங்களின் காரை ரொம்ப கவனமாக பார்த்துக் கொள்ளும் ஒரு நபராக இருக்கலாம். என்னடா பொருள் மீது இவ்வளவு பற்று வைத்துக்கொள்ள சொல்கிறானே என்று தோன்றுகிறதா? நோ சொல்ல இயலாமல் காரைக் கொடுத்துவிட்டு, அவர்கள் காரை திருப்பித் தரும்வரை நீங்கள் பதைபதைத்து இருப்பதைவிட, கேட்கும்போதே நோ சொல்லி விடுவது எவ்வளவோ மேல். நீங்கள் அந்த ஒருமுறை நோ சொல்லி விட்டால், உங்களிடம் கார் கேட்டவர் பக்கத்து வீடுகளிலும் உங்களைப் பற்றி சொல்லலாம். அது உங்களுக்கு ஒரு தவறான பெயரைக்கூட ஏற்படுத்தி கொடுக்கலாம். ஆனால், அதிலும் ஒரு பயன் இருக்கிறது. அடுத்து உங்களிடம் யாரும் காரை கேட்க மாட்டார்கள். இது ஒரு தவறான வழிகாட்டுதலாக உங்களுக்கு தெரியலாம். ஆனால், எனது அனுபவத்தில் அதில் தவறில்லை என்றுதான் சொல்லுவேன்.


நோ சொல்ல உங்களுக்கு முடியாது, அது எனக்கு மிக கஷ்டமாக இருக்கும் என்று தோன்றினால் காரணங்களை சொல்லி சமாளிப்பது நல்ல வழி தான்.  அதாவது, நாளை காலை ஒரு இடத்துக்கு போக வேண்டும், என்னை உங்க கார்ல டிராப் பண்ணி விடுவீங்களானு உங்க பக்கத்து வீட்டுக்காரர் கேட்டால், அடுத்த நாள் நீங்கள் என்ன பிளான் பண்ணி வைத்திருக்கிறீர்களோ அனைத்தையும் சொல்லுங்கள். சொல்லிவிட்டு எனக்கு நேரம் இருக்காது என்று நினைக்கிறேன் என்று அவர் கேட்கும் உதவியை நீங்கள் நாசூக்காக மறுத்து விடலாம். அந்த பிளான், உங்க குழந்தைய பார்க்குக்கு விளையாட கூட்டிச் செல்வதாக கூட இருக்கலாம். வாரத்தில் ஒரு நாள் உங்களை எதிர் நோக்கி இருக்கும் உங்கள் குழந்தையின் நேரம் மிக முக்கியமானது. உங்களிடம் உதவி கேட்பவருக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறது. அதாவது கேப்(cab) புக் செய்து எளிதாக சென்றுவிடலாம். அன்றைய தினத்தில் அவர் போக வேண்டிய இடத்திற்கான போக்குவரத்து வசதிகள் இல்லாத பட்சத்தில், அவர் கேட்கும் உதவியை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். இல்லை என்றால் நோ சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

அதே நேரத்தில் நீங்கள் அடுத்து ஒரு வாய்ப்பையும் அவருக்கு கொடுக்கலாம். அதாவது மேல் வீட்டுக்காரரிடம் கேட்டுப்பாருங்கள், அவரும் கார் வைத்திருக்கிறார், முடிந்தால் அவர் கூட உங்களை நீங்கள் சொல்லும் இடத்தில் விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அவர் அந்த வழியாகத் தான் வேலைக்குச் செல்வார், அவரிடம் கேட்டுப் பாருங்களேன் என்று நீங்கள், அவர் கேட்ட உதவிக்கு வேரொரு தீர்வையும் கொடுக்கலாம்.


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ஒருவர் உங்களிடம் பணமோ அல்லது உதவியோ கேட்கும்போது, நீங்கள் சொல்லும் நோ அவர்கள் கேட்கும் உதவிக்கும், அவர்கள் கேட்கும் பொருளுக்கும், அவர்கள் கேட்கும் பணத்திற்கும், மட்டுமே!! அவர்களை தனிப்பட்ட முறையில் மனதில் நினைத்துக் கொண்டு நாம் நோ சொல்வதில்லை. அதனால், உங்களிடம் உதவி கேட்பவர் அதை தனிப்பட்டதாக எடுத்துக் கொண்டு உங்களை தவறாக நினைத்தால் அது நம் கையில் இல்லை.


எல்லாரிடமும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக, சிலர், பிறர் கேட்கும் உதவிக்கு நோ சொல்ல தயங்குவார்கள். நாம் நோ சொன்னால் இத்தனை காலம் நாம் சம்பாதித்து வைத்திருந்த பெயர் கெட்டு விடுமே என்று நினைப்பார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, தன்னம்பிக்கை, குறைவாக இருப்பதே. இப்படி இருக்கும் சிலர், அவர்களின் குழந்தைகளையும் இவ்வாறு வளர்க்க முயல்கிறார்கள். அதாவது கூர்ந்து பார்த்தால் குழந்தைப் பருவத்தில், ஒரு குழந்தை தனக்குப் பிடிக்காத ஒரு உணவை தாய் கொடுக்கும் போது, அழுது அதை வேண்டாம் என்று சொல்லிவிடும். ஆனால் அது வளர வளர நாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்கள், அந்த குழந்தையை நோ சொல்ல தயங்க வைக்கிறது. அதாவது பள்ளிக்கூடத்துக்கு செல்லும் குழந்தைகள், ஆசிரியர்கள் ஏதாவது ஒன்றை கேட்டு நோ சொல்ல முற்பட்டால், நாம் குழந்தையிடம், அவர் ஆசிரியர் அல்லவா நீ மறுப்பு தெரிவிக்காமல் சரி என்று சொல்லு என்று கற்பிப்போம். இதுதான் தவறான பாடம். குழந்தைகள் நோ என்று சொன்னால் அது எதற்காக சொல்கிறது என்று சற்று ஆராய்ந்து பாருங்கள். அந்த காரணங்கள் சரியாக இருந்தால், குழந்தையை நோ சொல்ல அனுமதியுங்கள். ஆராயாமல், குழந்தையிடம் நோ சொல்லக்கூடாது என்று கூறாதீர்கள். 


தாத்தா பாட்டியை பார்க்க போன இடத்தில், தாத்தா ஏதோ ஒரு இனிப்பை, உதாரணத்திற்கு, ஒரு ஜிலேபியை குழந்தைகளிடம் கொடுத்து சாப்பிடச் சொல்ல, உங்கள் குழந்தைக்கு அது உண்மையிலேயே பிடிக்காமல் இருக்க, குழந்தை, நோ தாத்தா என்று சொன்னால், நீங்கள் அதை தடுக்காதீர்கள். ஏனென்றால், குழந்தைக்கு பிடிக்கவில்லை அதனால் தாத்தாவிடம் நோ சொல்கிறது. நீங்கள் இடையில் புகுந்து அவங்க பெரியவங்க, அவங்களிடம் அப்படி சொல்லக்கூடாது. தாத்தா பாசமா தாராங்கள்ள, வாங்கிக்கோ என்று நாம் சரியாக பாடம் எடுப்பது போல் குழந்தையை தவறான வழியில் எடுத்துச் செல்கிறோம். இத்தகைய பாடங்கள் அந்த குழந்தைக்கு நோ சொல்வது ஒரு தவறான செயலாக மனதில் பதிந்து விடுகிறது. நீங்கள், உங்க குழந்தைக்கு வேறு விதத்திலும் சொல்லிக் கொடுக்கலாம். அதாவது, தாத்தா தரும் இனிப்பு உனக்கு பிடிக்கவில்லை என்றால் நோ என்று சொல்லாதே. தாத்தாவிடம் எனக்கு இந்த இனிப்பு பிடிக்கவில்லை, வேற இனிப்பு, அதாவது லட்டு இருந்தால் தாருங்கள் நான் கண்டிப்பாக சாப்பிடுகிறேன் என்று சொல்ல கற்றுக் கொடுங்கள். ஆனால் அவர்கள் சொல்லும் நோ தவறானது என்று அவர்களை திருத்த முயலாதீர்கள். 


அடுத்தவங்க கேட்கிற உதவிக்கு சரி சொல்லி, அந்த உதவியை செய்து கொடுக்க வேண்டும், அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் நல்லவர்கள் அல்ல. ஏன் இதை கூறுகிறேன் என்றால், அடுத்தவர்கள் கேட்கும் உதவியை செய்ய துடிக்கும் பலர், தன் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள். தனது சந்தோஷத்தை விட அடுத்தவர்களின் சந்தோஷத்தை பெரிதாக பார்ப்பவர்கள். இது இவர்களின் முற்றும் துறந்த வாழ்க்கையினால் வந்தது அல்ல. அடுத்தவர்களை சந்தோஷப் படுத்தி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும் பலர் தன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்.


தலைவர் கேட்டார் என்பதற்காக நாள் முழுவதும் உழைக்கும் ஒரு தொண்டன், தனது குழந்தை ஒரு மணி நேரம் பக்கத்து பார்க்கில் விளையாட கூப்பிட்டால் நேரமில்லை என்று சொல்லிவிடுகிறான். அதாவது, தலைவனின் நேரத்தை பெரிதாக மதிக்கும் ஒரு தொண்டன், தன் குழந்தை கேட்கும் அந்த ஒரு மணி நேரத்தை அற்பமாக நினைத்து விடுகிறான். இது என்னவென்றால் தனது நேரத்தை விட பிறரின் நேரம் மிக முக்கியமானது என்ற எண்ணங்கள் தலைதூக்குவதால். தலைவர் சொன்னதை செய்து கொடுக்காவிட்டால் தன்னை என்ன நினைப்பார், இத்தனை நாள் சம்பாதித்த பெயரை இழந்து விட கூடாது என்று நினைத்த தொண்டன், அப்பாவாக தன் குழந்தை என்ன நினைப்பாள் என்பதை மறந்து விடுகிறான். 



Comments

Post a Comment

பிரபலமான பதிவுகள்

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

அபுதாபி

நைட்

ஐரிஷ் பஞ்சம்

லாக்டவுன் குமுறல்கள்

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Sapiens: A Brief History of Humankind

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?