அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!
எப்பவாச்சும் யாராச்சும் உதவினு கேட்டு நோ சொல்லி இருக்கீங்களா? ஒரு தடவ சொல்லி பாருங்க. அப்புறம் உங்களுக்கு தெரியவரும் உங்களோட வட்டத்தில் இருக்கிற நண்பர்கள், சொந்தக்காரர்கள், சுற்றம் உற்றம் எல்லாம் எப்படி ரியாக்ட் பண்றாங்கனு. நீங்க “நோ” சொன்ன பின்னும் அவர்களின் பழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லையென்றால், அந்த உறவு உங்களுக்கானது. நீ நீயா இருனு சொல்வாங்க. அந்த மாதிரி உங்களை உங்களயா பார்க்கிற சில உறவுகள் இருக்கும். அது சொந்தக்காரங்க மட்டும் அல்ல, உங்க பக்கத்து வீட்டுக்காரங்க, கூட வேலை பார்க்கிறவங்க, உங்க நண்பர்கள் என யாராகவும் இருக்கலாம். உதவின்னு கேட்டு, நீங்க நோ சொன்னால், அதில் ஒரு அர்த்தம் இருக்கும், முடிஞ்சிருந்தா கண்டிப்பா நாம கேட்ட உதவியை செய்திருப்பார், ஏதோ ஒரு சூழ்நிலை அதனால் தான் இவர் கேட்ட உதவிக்கு நோ சொல்லியிருக்கிறார் என்று நினைக்கும் அந்த உறவு தான் நமக்கு ஏற்ற உறவு. நீங்க நோ சொல்லிய பின்னும் இந்த உறவுகள் எந்த ஒரு மனக்கசப்பும் இல்லாமல் எப்பவும் போல உங்களிடம் பழகும்.
என்ன சொல்ல வர்றேன்னா, உதாரணத்திற்கு, உங்க சித்தப்பா மகள் ஏதோ ஒரு உதவி கேட்க, சில சூழ்நிலை காரணமா நீங்க உதவ முடியவில்லை, அதனால நோ சொல்லிட்டிங்க. “பெரியப்பா மக உதவினு கேட்டா உடனே செய்வான், நாமலாம் அவன் கண்ணுக்கு மனுஷியா தெரியமாட்டோம்”, “இப்பலாம் அவன் கண்ணை துட்டு மறச்சுட்டு”, இப்படி உங்க சித்தப்பா மகள் சொல்வாரேயானால், நீங்க சொன்ன “நோ”வை அவர்களின் தனிப்பட்ட “நோ”வாக எடுத்துவிட்டார் என்று அர்த்தம். என்ன இவா இப்படி நினைச்சுட்டாளேனு ஒரு குற்ற உணர்ச்சியினால் எப்படியாச்சும் அந்த உதவிய செய்து கொடுக்க முயன்றால், நீங்க “நோ” சொல்றதுக்கு இந்த பதிவு உங்களை தயார் செய்யும்.
என்ன இப்படி சொல்கிறேன் என்று தோனுகிறதா? உதவி செய்யணும், கண்டிப்பா அது ஒரு நல்ல குணம். ஆனா நாம செய்கின்ற உதவியை சிலர் அவர்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளும் போது, கேட்கிற உதவிக்கு “நோ” சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, உங்க பக்கத்து வீட்டுக்காரர் “அண்ணே கடைக்குதானே போறீங்க, போற வழியில குழந்தையை ஸ்கூல்ல கொஞ்சம் இறக்கி விட்ருங்களேன்” னு கேட்டா, அந்த உதவியை செய்வது தப்பு இல்லை. ஆனால் அவரு வீட்டுல சும்மா இருந்துட்டு தினமும் அந்த வேலையை நம்ம தலையில கட்டுவதுபோல உங்களுக்கு தெரிந்தால், அவர்கிட்ட நோ சொல்வதில் எந்த தப்பும் இல்லை. எதற்காக நான் இதைக் கூறுகிறேன் என்றால், ஒரு சிறு குழந்தையை இருசக்கர வாகனத்தில் ஏற்றி செல்லும் போது மிக கவனமாக செல்ல வேண்டும். ஏற்கனவே தொழிலுக்கு போகும்போது, இன்னைக்கு தொழில் எப்படி இருக்கும், வருமானம் எப்படி இருக்கும், மழை பெய்கிறதே கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவார்களா? மாட்டார்களா? என்று பல விஷயங்கள் மண்டையில ஓடிட்டு இருக்குற நேரத்துல, நீங்க குழந்தையை இறக்கி விடும் பொறுப்பை எடுத்துக் கொண்டு இடையில் ஏதோ ஒரு சிறு தவறு நடந்தால் கூட அது உங்களுக்கு பாதகமாக முடிந்துவிடும். அதனால நீங்க நோ சொல்வதில் எந்த தப்பும் இல்ல. உதவி செய்யலாம், ஆனா அந்த உதவியை ஒருவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் போது, அடுத்த முறை அந்த உதவிக்கு ரொம்ப நேர்மையா வெளிப்படையாக எந்த மறைவும் இல்லாமல் “நோ” சொல்லலாம். நான் சொன்னது ஒரு உதாரணம். இத மாதிரி நிறைய உங்க வாழ்க்கையில் சந்தித்திருக்கலாம். அலுவலகத்துல சிலர் தங்களுடைய வேலையை அடுத்தவர்களிடம் கொடுத்து செய்யச் சொல்லிவிட்டு அவங்க ரொம்ப பகுமானமா ஊர் கதை பேசிட்டு இருப்பாங்க. இந்த சூழல் ஒரு அரசாங்க அலுவலகத்தில் ஆரம்பிச்சு, சாதாரண ஐடி கம்பெனி வரைக்கும் இருக்கதான் செய்யுது.
இந்தப் பிறவியே பிறருக்கு உதவி செய்வதற்காக தான் என்று கூறும் தலாய்லாமா முதல், நாம் கடைபிடிக்கும் மதங்கள் அனைத்தும் உதவி செய்ய தான் சொல்கிறது. ஏழ்மையில் இருக்கும் ஒருவனுக்கு தனது சம்பாத்தியத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை தானமாக கொடுக்க வேண்டும்.
பின்னர் எதற்கு நோ? நம்மை பிறர், அவர்களின் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும், அவர்கள் பயன்படுத்துவதை நாம் தெரியாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காகவும். நமது தாழ்வு மனப்பான்மையால் சிலர் கேட்கும் உதவியை நாம் தடையின்றி சரி என்று சொல்வதாலும், நம்மை நம்பி இருப்பவர்களின் சில முக்கியமான தருணங்களை இழந்து விடக் கூடாது என்பதற்காகவும் தான் இந்த பதிவை தருகிறேன்.
காரணத்தோடு நீங்கள் பிறர் கேட்கும் உதவிக்கு நோ சொல்லும்போது, வேறொரு தருணத்தில் அவர்களிடம் நீங்கள் உதவி கேட்கும் போது அதை மனதில் வைத்துக்கொண்டு அவர்களும் உங்களுக்கு நோ சொல்லலாம். இதை நாம் கருத்தில் கொண்டு, இத்தகைய மறுப்பு நம் வாழ்வில் வந்து விடக்கூடாது என்று நம் மனதில் ஒரு பயத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது. இன்னும் சொல்லப் போனால் பிறர் நாம் கேட்கும் உதவிக்கு நோ சொல்லும் போது நம்முடைய தன்னம்பிக்கை கூடும். அதாவது நாம் கேட்கும் உதவியை பிறர் மறுக்கும் நிலையில், அதை எவ்வாறு செய்து முடிக்க வேண்டும் என்று நம் எண்ணங்கள் பல கோணங்களில் சிந்திக்க தொடங்கும். அந்த வேலையை பிறர் உதவியில்லாமல் செய்து முடிக்கும் போது நம் மீது உள்ள தன்னம்பிக்கை தானாகவே கூடும். அதனால் நீங்கள் பிறர் கேட்கும் உதவிக்கு, மீண்டும் சொல்கிறேன் எல்லா உதவிக்கும் அல்ல, சிலர் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் உதவிக்கு நோ சொல்லும்போது கண்டிப்பாக தயங்க வேண்டாம்.
எதிர்பார்ப்புகளோடு தான் இந்த உலகம் சுழல்கிறது. ஒருவர் மீது காண்பிக்கும் பாசம், அது பாசமா இல்லை பாசாங்கா என்று தெரிந்து கொள்ள நாம் நினைத்தால், இந்த உலகில் ஒரு உறவு கூட நமக்கு இருக்காது. ஏதோ ஒரு நெருங்கிய உறவு உங்களிடம் பொருளோ பணமோ கேட்கும்போது, நீங்கள் நோ என்று சொன்னால் அவர்கள் அதை எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை கணிக்கவே முடியாது. இத்தனை நாட்கள் அல்லது இத்தனை வருடங்கள் என்னுடைய நெருங்கிய நண்பராக அல்லது நெருங்கிய உறவாக இருந்த பலர் ஒரு பொருளுக்காக நம்மை உதாசீனப்படுத்தும் போது மனவேதனைக்கு உள்ளாகுவோம்.
சிலர், நம்மளை எமோஷனல் பிளாக்மெயில் பண்ணுவாங்க. அதை ரொம்ப காமெடியா சொல்றதா இருந்தா, வேலாயுதம் படத்தில் சந்தானம் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். விஜய் தனது தங்கை திருமணத்திற்காக நகரத்தில் போட்டு வைத்திருந்த சீட்டு பணத்தை எடுக்க சென்னைக்கு வருவார். அதை தெரிந்து கொண்டு, அந்த பணத்தை எப்படியாவது சுருட்டிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் விஜய்யோடு சுற்றுவார் சந்தானம். எங்காவது விஜய் தனியாக போக முற்படும்போது, “போப்பா, போ, இந்த பொனத்தை தாண்டி போ” என்று கூறுவார். இதை பார்த்ததும் விஜய், சரி நீயும் என்கூட வா என்று அவரை அழைத்துச் செல்வார். இது ஒரு சிறிய உதாரணம் தான். ஆனால் உதவி கேட்கும் சிலரும் இது போல் நம்மை மனரீதியாக குத்திக் காட்டுவார்கள். அவனுக்கு, “இந்த வாழ்க்கை கிடைச்சதே என்ன வச்சு தான், இன்னைக்கு நான் ஒரு உதவினு கேட்டா செய்ய மாட்டேங்குறான்” னு சொல்லுவாங்க. கண்டுக்காதிங்க. அவர்கள் கேட்கும் உதவி உங்களுக்கு சரி என்று தோன்றாவிட்டால், நோ சொல்லி விடுங்கள்.
நல்ல வேலையில் நாம் இருப்போம், நல்லா சம்பாதிப்போம். ஆனால், நமக்கென்று சில பொறுப்புகள் தினந்தோறும் காத்துக் கொண்டிருக்கும். நாம் சம்பாதிப்பது அந்த பொறுப்புகளுக்கு சரியாகி விடும் போது அடுத்தவர்கள் கேட்கும் உதவிக்கு சில நேரம் யோசித்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவோம். ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இவன் நன்றாக சம்பாதிக்கிறான், ஆனால், நாம் கேட்கும் இந்த பத்தாயிரத்திற்கு இவ்வளவு யோசிக்கிறானே என்று நினைப்பார்கள். என்னதான் சம்பாதித்தாலும் அவனுக்கும் ஒரு குடும்பம், பொறுப்புகள் இருக்க தானே செய்யும் என்று உதவி கேட்பவர்கள் நினைத்தால், இத்தகைய சூழலுக்கு இருவரும் தள்ளப்பட மாட்டோம். உதவி கேட்பவர்களையும் நாம் குறை சொல்ல முடியாது. ஏனென்றால், கஷ்டத்தில் இருக்கும் ஒருவர் உதவி என்று கேட்கும்போது, பிறரின் கஷ்டங்கள் அவர்களின் கண்களை மறைத்து விடும். தனது கஷ்டங்கள் மட்டும்தான் பெரிதாக தோன்றும். அப்பொழுது அந்த கஷ்டத்திற்கு எங்காவது தீர்வு கிடைக்காதா என்ற முனைப்போடு அலையும் போது நீங்கள் நோ சொன்னால் அது மிகப்பெரிய விரிசலாக உங்கள் உறவில் அமையவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், எப்படி நோ சொல்லலாம் என்று கற்றுக்கொள்ளுங்கள்.
Superb தத்துவம் much needed to know
ReplyDelete