கொரியாவின் கொசுறுகள்- பார்ட் 4
தெருவுடன் சேர்த்து நாய்களை மட்டுமே சொல்லி பழக்கமுள்ள நமக்கு, தெரு மாடுகள், தெருப்பன்றிகள் என்று சொன்னாலே வித்தியாசமாக இருக்கும். ஆனால், தெரு நாய்களே பார்க்க முடியாத ஊரில் தெருப்பூனைகள் அதிகம் திரிவதை காணலாம். Persian பூனைகள் எனப்படும் அவைகள், உடல் வாகே அப்படியா அல்ல வாக்காக நல்ல சாப்பிட்டு வளர்த்த உடம்பா என்று நின்று யோசித்து கடந்து செல்ல தோன்றும் அளவுக்கு குண்டு குண்டு பூனைகள்.. தெருநாய்கள் தான் கிடையாதே தவிர, பொம்மை தான் என்று அடித்து கூறும் அளவுக்கு அழகான உள்ளங்கை அளவு கூட உள்ள வீட்டு நாய்கள் ஏராளம். அதற்கு செய்யப்படும் பணிவிடை, நம் நாட்டு மாமியார் மாமனார்களுக்கு கிடைக்கிறதா என்பது சந்தேகம் தான். விதவிதமான விலையுயர்ந்த strollerகளில் அழைத்து வருவது குழந்தையை அல்ல, நாய்க்குட்டிகளை என்பது எட்டிப்பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். பல முறை கையில் தூக்கி வருவது பொம்மை என்று நினைத்து பார்க்க, திடீரென அதன் தலையை வெடுக்கென திருப்ப, அய்யயோ உயிர் இருக்கு என பதறியிருக்கிறேன். குழந்தை இல்லாத தம்பதியர்கள் நாய்களையே அவர்களின் பிள்ளைகளாக வளர்ப்பதாக கூறுகிறார்கள்.
வந்து சில மாதங்களே ஆனதாலும், எல்லாமே வீட்டின் அருகில் ஒரு காத தூரத்தில் இருப்பதாலும், சொந்தமாக கார் வாங்கவில்லை. சமயங்களில் டாக்ஸியிலும் பயணம் செய்வதால், சில துறுதுறு தாத்தாக்களிடம் கொரிய மொழி கற்ற அனுபவம் உண்டு. ஆஸ்பத்திரிக்கு ப்ப்பியங்வான் என்று ஒரு தாத்தா, மாஸ்க்கை அவிழ்த்து 'ப்பை' கொஞ்சம் இல்லை நிறையவே எச்சில் தெளிக்க, அழுத்தி சொல்லிக் கொடுத்தது மட்டுமல்லாமல் , நானும் அதேபோல் எச்சில் துப்பி 'ப்ப்பியங்வான்னை(peongwon)' சொல்லும் வரை அவர் விடாததும் சுவாரசியமான அனுபவம். டாக்ஸியின் முன் பகுதியில் சிவப்பு விளக்கு எரிந்தால், கையசைத்து அழைத்ததும் ஏற்றி செல்ல ஏற்றது என்பதும், ஊதா நிற விளக்கு ஆன்லைனில் புக் செய்தவர்களை அழைக்க வந்து கொண்டிருக்கிறது என்பதையும் காட்டுகிறது. St.Mary's என்ற ஆங்கில பெயரை அப்படியே கூறப்போய், டாக்ஸி காரர் வேறு திசை நோக்கி அழைத்துச் செல்ல, உடனே கூகுளை தட்டி கொரிய மொழியில் மொழிபெயர்த்து 'சங்க்மோ' என்றதும் தான் திருப்பி சரியான பாதையில் சென்றார். இப்போதெல்லாம் ஏறும்போதும் இறங்கும்போதும், 'அன்யங்கசேயோவும்(annyangaseyo)"- hello "கம்சனிதாவும்(hamsanida)"- thanku you சொல்லாமல் இறங்கினால், மரியாதை செய்யாமல் இறங்கிவிட்டோமே என்று நமக்கே குற்றவுணர்ச்சியாகி விடும் அளவுக்கு பழகிவிட்டது. டாக்ஸியில் மட்டுமல்ல, வெளியே எந்த கடைக்குச் சென்றாலும், யாரிடம் பேசினாலும் வணக்கம் செலுத்துவது நான் அவர்களுடன் சேர்ந்து பழகிய நல்ல பண்புகளில் ஒன்று.
ரயில்வே ஸ்டேஷனில் தொடங்கி, பஸ் ஸ்டாண்ட், பிரபல மால்களான E-mart, ஜப்பானிய கடையான டைசொ அனைத்தும் வீட்டிலிருந்து 4 கிமீ சுற்று வட்டாரத்தில் தான் என்பதால், எங்கு செல்ல வேண்டுமானாலும் நடைராஜா சர்வீஸே! நடந்து செல்ல இன்னொரு முக்கிய காரணம், சாலை குறுகலோ நெடுகலோ, முக்கிய சாலைகளில் கட்டாயம் நடப்பதற்கு என சாலை ஒதுக்கப்பட்டிருக்கும். Pedestrial Crossingற்கும் சிக்னல் கொடுக்கப்படும் குறிப்பிட்ட இடைவெளிகளில். குவாரண்டைன் முடிந்து வெளியே வந்த முதல் நாள், தமிழ் தோழி ஒருவர் கொடுத்த முதல் எச்சரிக்கை, நடப்பதற்கென சிக்னல் கொடுத்த பின்னர் மட்டுமே நடக்க வேண்டும் என்பது.
நிறைய விஷயங்கள் கொரியாவில் எங்கேயோ பாத்த மாதிரியே இருக்கேனு நினைக்கத் தோணும், நம்ம இந்தியர்களுக்கு. குறிப்பா, நம்ம தமிழர்களுக்கு. அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கதா சொல்றாங்க. செம்பவளம் என்கிற ஒரு குமரி மன்னனின் மகள் கடல் வழியா கொரியா சென்ற இடத்துல, கொரிய வாரிச கல்யாணம் பண்ணி, அங்கேயே settle ஆகிவிட, அதனால வந்தது தான் அங்க உள்ள மக்கள் அப்பா அம்மாவ, நம்மள போலவே அப்பா அம்மானே அழைக்குற பழக்கம்னு. அட உண்மையிலேயே அப்படியே நம்மள போலவே தாங்க கூப்பிடுவாங்க. கடைல நிக்கும் போது எதாவது சின்ன பிள்ளைங்க கவனிக்காத அவங்க அப்பா அம்மாவ " எம்மா, எப்பா"னு கூப்பிடுறத கேக்கும் போது கிடைக்கும் ஆனந்தமே ஆனந்தம். முதல் தடவ எதோ நம்ம ஊரு பிள்ள தான் கூப்பிடுதுனு, கணவரிடம் கூறி விட்டு சுத்தி சுத்தி தேடினேன். அப்படி ஒரு realistic கூப்பிடு.
இந்த செம்பவள ராணி கதையை கொரிய குழந்தைகளுக்கே சொல்லிக் கொடுப்பதாக கூறுகிறார்கள். வெறும் கதை என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், கொரிய மொழி கற்றுக்கொள்ள சென்ற இடத்தில், நான்கு நாட்டவர் இருந்த இடத்தில், நான் இந்தியர் அதுவும் தமிழ்நாடு என்று கூற, கிடைத்த மரியாதையே தனிதான். நீங்களும் நாங்களும் அண்ணன் தங்கைகள் போல் என்று அலவலாவ ஆரம்பித்துவிட்டார்கள் பக்கத்தில் இருந்த மற்ற நாட்டவர்களை மறந்து(கொஞ்சம் கெத்தாதான் இருந்துது). அந்த நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் வகித்தவர் ஒரு Scientist. அவர் நேரில் அழைத்து உங்களுடன் மதிய உணவு சாப்பிட விரும்புகிறோம் என்று ஆசைப்பட்டுக்கொண்டது நம்மூரின் விருந்தோம்பலையும் நினைவுப்படுத்தியது.
அவர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் கூட நம்மூர் பொங்கலைத் தான் நினைவுபடுத்தியது. முதல் நாள் காய்கறி, பழங்கள், வாங்க முண்டியடித்து நின்ற கூட்டம், அடுத்த நாள் காலை எழுந்து குளித்து, புத்தாடை உடுத்தி, தாத்தா பாட்டிகளிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி அவர்களையும் அழைத்துக் கொண்டு, மதிய உணவு எடுத்துக் கொண்டு வெளியே செல்வது என அவர்களின் கொண்டாட்டம், பொங்கல் தீபாவளிக்கு ஆச்சி தாத்தாவுடன் கொண்டாடியதை நியாபகப்படுத்திவிட்டது. இரவு ஆனதும், தாத்தா பாட்டிகளை அவரவர் வீட்டில் விட்டுச் செல்வதையும் பார்க்க முடிந்தது. விடுமுறை நாளான அன்று, கடையில் சிக்கன் வாங்க வேண்டும் என்று கணவரையும் அழைத்துக் கொண்டு, கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம், சேபோக் மானி பதாசேயோ(Saebok mani badasiyo) என்று முதல் நாள் இரவு படித்து வைத்த கொரிய மொழி புத்தாண்டு வாழ்த்தை சொன்ன பிறகுதான் மனசு திருப்தியாக இருந்தது.
சென்ற புதிதில் கடையில் கொஞ்சம் அதிகமாக பொருள்கள் வாங்கிவிட்டால், செர்வீஸ் என்று கூறி எதாவது ஒரு பொருளை கூட சேர்த்து வைத்து விலை கூற, இல்லை இது எங்கள் பொருள் இல்லை என்று அவசரமாக தனியாக எடுத்து வைத்து விடுவேன். சில நாட்கள் கழித்து, இவ்வளவு நல்லவர்களா? என்று என்னைப் பார்த்து விழிக்கும் அவர்கள் முழியை கவனிக்க ஆரம்பித்தேன். சர்வீஸ் என்பதை ஏதோ தவறாக புரிந்து கொண்டு விட்டோம் போல என இம்முறை "இகு உல்மாயேய்யோ(இதன் விலையென்ன?)" என்று தெளிவாக கேட்டு விடுவோம் என்று வினவ, அவர்கள் "free free" என்றதும், நெஞ்சு டமார் என்றது. அய்யோ தமிழ்நாட்டுல இருந்து வந்துட்டு freeயா குடுக்கதையா வேண்டாம்னு சொன்னோம் என்று அன்று முதல் எடுத்து வைத்துக் கொண்டேன். அதுமட்டுமல்லாமல், செர்வீஸ்ல் பிடிக்காத பொருள் கொடுத்தாலும், கூச்சப்படாமல் ஆல்டர்னேட்டிவ் கேட்டு வாங்கி அதற்கு ஒகே சொல்லி விடுவேன். இதெல்லாம் உண்மையாவே அன்பா ஒருத்தங்க குடுக்குற பொருள வேண்டாம்னு சொல்லக் கூடாதுங்குற ஒரே காரணத்துக்காக தான்!!!
This comment has been removed by the author.
ReplyDeleteசிறப்பு. நேர்மறையான சிந்தனைகளில் இருந்த வார்த்தை தெளிவு. இரவு பொழுதில் மொழி பரவல் மற்றும் கலாச்சார விஸ்தரிப்பு அதன் சிலாகிப்பு அருமை.
ReplyDeleteAmazing flow.. Enjoyed yr style of writing ... (😀Free).
ReplyDeleteHamsanita😂😂😂🙏