கொரிய வளர்ச்சிக்கும் ஜப்பானிற்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ !!!!! KOREAN HISTORY- A GLIMPSE
கொரிய தம்பதிகளின் குழந்தையின்மை சதவீதமும், விவாகரத்து சதவீதமும் அதிகரித்து வருவதாகவும், தென்கொரிய இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மாணவ பருவத்தில் சிறந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற பெற்றொர்களின் திணிப்பும், கல்லூரி படிப்பை முடித்து வேலை செய்யும் இளைஞர்களுக்கு வேலையிடங்களில் தரப்படும் நெருக்கடிகளும் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாவதற்கான முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. அதை சரி செய்ய தற்போது தென் கொரிய அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. கொரியன்களுக்கு கட்டாய சனி, ஞாயிறு விடுமுறை அதில் குறிப்பிடத்தக்க ஒன்று.
கொரிய திரைப்படங்களும், சிரீஸ்களும் உலகமெங்கும் பிரபலமாகிக் கொண்டிருக்க, நம்ம ஊரு "3 இடியட்ஸ்" கொரியாவில் மிகப் பிரபலம். பள்ளிகளில் பெற்றோர்களை அழைத்து இப்படத்தை திரையிட்டு காண்பிப்பதாக கூறுகிறார்கள். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மேல்குறிப்பிட்ட நெருக்கடிகள் தராமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு.
வயதானவர்கள் ஒரு சிலர் தற்கொலை செய்வதற்கான முக்கிய காரணமாக கலாச்சாரம் வேறுபட்டு, வருமானம் இழந்த பெற்றொர்களை பிள்ளைகள் கவனிப்பாரன்றி விடுவது ஒன்றாக கூறப்படுகிறது. இதன் காரணத்தை ஆராய்ந்தோமானால், தென் கொரியா வளர்ந்த நாடாக பரிணமித்தது கடைசி நாற்பது ஆண்டுகளில் தான். அதனால் அதற்கு முந்தைய தலைமுறையினர் ஐடி மற்றும் இதர துறைகளில், தங்களை வளர்த்து வருமானம் பெருக்கிக் கொள்ள வாய்ப்பில்லாதது புலப்படுகிறது. இதைப் போக்கும் ஒரு முயற்சியாக தென் கொரிய கவர்மெண்ட் டாக்ஸி ஓட்டும் முன்னுரிமையை 60 வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுப்பது பாராட்டுக்குரியதே..... மேலும் கொரிய மக்கள் உற்சாகப் படுத்த குறிப்பிட்ட இடைவெளிகளில் அனைத்து வகை excercise machineகள் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அதை பெரும்பாலும் உபயோகப்படுத்துவது 60 வயதிற்கு மேலுள்ளவர்களாகத்தான் இருக்கும்.
குழந்தை பிறப்பு சதவீதம் குறைந்ததன் காரணமாக, கொரியன்களில் வயதான மக்களின் எண்ணிக்கையே அதிகம். நம் தமிழ்நாடும் 2050ல் இந்த நிலையை எட்டக்கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கிறது. ஜப்பானிய அரசு கொரியாவை அடிமைப்படுத்தி விடுவித்த காலத்தில் இருந்து(1910-1945), தாமும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக திகழ வேண்டும் என்ற முனைப்பும் வெறியும் அரசாங்கம், மக்கள் அனைவருக்கும் ஒன்று சேர்ந்து இருக்க, 1948ல் மிகவும் பின் தங்கியிருந்த கொரிய பொருளாதாரம், பின் வந்த ராணுவ ஆட்சியின் தொடக்கத்திலேயே கடகடவென ஏறத் தொடங்கி, 20 வருடங்களிலேயே வல்லரசாக மாறி இருக்கிறது. அமெரிக்கா கொடுத்த பல ஆயிரம் கோடி நிதிஉதவியும், அதை கொரிய வளர்ச்சிக்காக விதைத்த CHAEBOL என்றழைக்கப்படும் பணக்கார குடும்பமும்(குழுமம்) முக்கிய காரணமாக கூறப்படுகிறது. LG, SAMSUNG, HYUNDAI மற்றும் LOTTE இக்குழுமத்தின் வேர்களாக அன்று தொடங்கி இன்று முதல் கோலோச்சி படர்ந்திருக்கிறது. 1944லேயே தொடங்கப்பட்ட KIA நிறுவனமும் 1997ல் இருந்து Hyundaiன் கீழ் தான் நிர்வகிக்கப்படுகிறது. நாம் நினைப்பது போல samsung என்றால் phone தயாரிப்பதற்கு மட்டும், hyundai என்றால் கார் தயாரிக்கும் கம்பெனி என்பது அல்ல. இந்நிறுவனங்கள் கொரியாவில் கால் வைக்காத துறைகளே இருக்காது எனலாம். துபாயில் உள்ள புகழ்பெற்ற BURJ khalifa கட்டமைப்பில் முதன்மை கான்ட்ராக்டர் SAMSUNG தான் என்கிறார்கள்.
கணிம வளங்கள் ஏதுமற்ற கொரியா, விவசாயம் மட்டுமே நம்பி வாழ்ந்த கொரியா, ஜப்பானின் அடக்குமுறை ஆட்சியின் முடிவில் அனைத்து அத்தியாவசிய தேவைக்கும் ஜப்பானையே நம்பும் நிலைக்கு தள்ளப்பட்ட கொரியா, ஒரு கட்டத்தில் தொழில் துறையில் கால் வைத்தால் மட்டுமே அவர்களின் தரம் உயரும் என்ற மந்திரத்தை உணர்ந்த கொரியா, எடுத்தது அதன் வளர்ச்சி நோக்கிய பணிகளை. பரப்பளவில் தமிழ்நாட்டை விட குறைந்த அளவே உள்ள கொரியா, 20 வருடத்தில் உலகம் போற்றும் அசுர வளர்ச்சி, 40 வருடங்கள் கடந்து இன்றும் தகர்க்க முடியாத அளவில். நடந்தாலே எரியும் ஆட்டோமேட்டட் விளக்குகள், தானே திறக்கும் கதவுகள், நொடியில் சொய்ஙென்று நம்மை கடந்து விடும் ஹை-பவர் ஈ-ஸ்கூட்டர்கள், அதற்கேற்ற ரோடுகள், எதைத் தொட்டாலும் ஆட்டோமேட்டட் என்று வளர்ந்த நாடுகளில் உள்ள எதுவும் இங்கில்லாமல் இல்லை.
கொரியாவில் எனக்கு மிகவும் பிடித்த one-wheel scooters. |
போலீஸ் நிலையங்களில் தவிர போலீஸ்களை வேறு எங்கும் அனாவசியமாக பார்க்க முடியாது. டிராபிக் போலீஸ் கிடையாது. மக்களே ஒழுக்கமாக இருந்து கொள்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் பண்டைய மதக் கோட்பாடுகளாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். மதம் என்பது ஒருவனிடமிருந்து மற்றொருவனை வேறுபடுத்தி காட்ட அல்ல. தனிமனித ஒழுக்கத்தை கற்று தன்னை நெறிபடுத்திக் கொள்ள என்ற உண்மையான அர்த்தம் உணர்த்தும் 'confucianism’ என்ற மதமே நாடு முழுவதும் பின்பற்றப்பட்டிருக்கிறது முந்தைய காலங்களில். பின்னர் அன்னிய நாட்டு மக்கள் பிரவேசத்தால், கிறித்துவமும் பௌத்தமும் பரவ தொடங்கி Confucianism காணாமலே போய் விட்டது. தெருவிற்கு ஒரு சர்ச்சும், எங்காவது சில பௌத்த கோவில்களும் பார்க்க முடிகிறது. தூங்கி எழுந்ததில் இருந்து படுக்கச் செல்லும் வரை, ஒரு மனிதன் செய்யும் காரியங்களை ஒழுக்கமாக செய்ய கற்றுக் கொடுப்பதே Confucianism. எப்படி சாப்பிட வேண்டும், எப்படி பெரியவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அனைத்தையும் உள்ளடக்கியதே. இப்போ தெரிஞ்சுக்கோங்க! மதம் ஏன்? எதற்காக? உருவாக்கப்பட்டது என்று........ இது தெரியாம ஜாதி, மதத்த கட்டி அழுறானுவ.......
நம்மூரைப் போல முன்னர் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததாகவும், தற்போது இளைய தலைமுறையினர் அதை விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது. கொரியர்கள் மிகவும் உழைப்பாளிகள். தாத்தா பாட்டிகள் கூட ஓய்வின்றி ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். உழைக்கத் தெம்பில்லாதவர்கள் ஆங்காங்கே கிடைக்கும் அட்டைப்பெட்டிகளை ஒரு தள்ளு வண்டி வைத்துக் கொண்டு சேகரித்து மொத்தமாக காயிலாங்கடையில் கொடுத்து காசு வாங்கிச் செல்வார்கள். அவர்கள் உழைப்பது போல் அடுத்தவர்களிடம் இருந்தும் எதிர்பார்ப்பார்கள். Samsung, Hyundai போன்ற கார்ப்பரேட்களில் வேலை செய்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. கொடுக்கும் சம்பளத்திற்கு தகுந்த வேலை வாங்க தவற மாட்டார்கள். அது போல ஆசிரியர் வேலை செய்பவர்களை பெரிதும் மதிப்பார்கள். ஆசிரியர் என்று தெரிந்ததும் எழுந்து நின்று பணிவுடன் அவர்கள் கொடுக்கும் மரியாதையே தனிதான். எப்பேற்பட்ட நிறுவனமாக இருந்தாலும் கொரியன்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இதற்கெல்லாம் காரணம் கீழே விரிவாக அலசப்பட்டுள்ளது.
கடல் வழியாக தென்கொரியாவிலிருந்து மூன்று மணி நேர பயண தூரமே கொண்ட ஜப்பான், கொரியாவை முழுவதுமாக கட்டுக்குள் வைத்திருந்த காலத்தை கொரிய மக்கள் இருண்ட காலமாகவே கருதுகிறார்கள்(1910-1945). அதன் தாக்கம் இன்றும் ஜப்பானை பற்றிய அவர்களின் பேச்சின் தொடக்கத்திலேயே தெள்ளத்தெளிவாக கவனிக்க முடியும். கொரிய மொழி மீதான அவர்களின் பாசவெறி கூட ஜப்பானின் அடக்குமுறை காலங்களில், அவர்களது மொழியை பயன்படுத்த தடை விதித்ததே மிகப்பெரிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் தான், கொரிய மொழி பள்ளிகளில் இலவசக் கல்வி கொள்கையும், ஆங்கில வழி பள்ளிகளில் அநியாயத்திற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதற்கான காரணம். சில சொற்ப மாணவர்களே ஆங்கில வழி கல்வி கூடங்களில் கற்கிறார்கள்.
கொரிய daiso கடைகள் |
இன்றும் கொரியாவிற்கு சொந்தமான சில தீவுகளின் மீது ஜப்பான் சொந்தம் கொண்டாடுவதால், இன்னும் கடுப்பாகிப் போயுள்ளார்கள். ஜப்பானிய நிறுவனங்களுக்கும் பெரிதாக வரவேற்பு கொடுக்கப்படுவதில்லை. ஜப்பானிய நிறுவனமான daisoவிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கொரியாவில் ஆயிரக்கணக்கில் கிளை பரப்பி சகல பொருட்களையும் 5000 wonற்கு கீழ் விற்கும் தென்கொரிய daiso மார்தட்டி கொள்கிறது. அமெரிக்காவின் டாலர் ஸ்டோர் போன்ற, எதுக்கு அவ்ளோ தூரம் போயிகிட்டு, நம்ம ஓரு சரவணா ஸ்தோர் போன்ற daisoவின் பெரும்பாலான பொருட்கள் சீன இறக்குமதியாக இருக்குமே தவிர ஜப்பானின் அடையாளங்கள் எதிலும் இருப்பதில்லை.
ஜப்பானிய DAISO |
நம் நாட்டு கோவில்களை ஆங்கிலேயர்கள் உடைத்தெரிந்தது போல, கொரிய அடையாளங்கள் பல சிதைக்கப்பட்டுள்ளன. 200 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களை நாம் மறந்து உறவு கொண்டாடுகிறோம். வெறும் 35 ஆண்டுகள் கட்டுக்குள் வைத்திருந்த ஜப்பானியர்கள் மீது வெறி கொண்டு, அவர்களே மூக்கின் மீது விரல் வைத்து பார்ப்பது போல் வளர்ந்து காண்பித்து இருக்கிறார்கள் கொரியர்கள்.
கொரியாவில் விண்டர் ஒலிம்பிக்ஸ் நடந்த காலத்தில், கலாச்சாரம், பொருளாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஜப்பானை முன்னுதாரணமாக கொண்டு செயல்படும் தென் கொரியா என்று அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் கருத்து சொல்ல, அவரை உடனே மன்னிப்பு கேட்கச் சொல்லி கொதித்தெழுந்திருக்கின்றனர் தென் கொரியர்கள்.
STATUE FOR RABINDRANATH TAGORE IN SEOUL |
தென்கொரியா அடிமைப்பட்டு இருந்த காலத்தில், ஜப்பானிற்கு சென்றிருந்த நம்ம ஊர் ரபீந்திரனாத் தாகூர், கொரிய சுதந்திர போராட்ட வீரர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், அவர்களுக்காக, "கிழக்கின் விளக்கு" என்ற தலைப்பில் கவிதை ஒன்று எழுதி கொடுத்துள்ளார். அந்த கவிதை இன்றுள்ள பாடப்புத்தகங்களில் இணைக்கப்பட்டிருக்கிறது.. மேலும் தாகூரின் வரிகள், வலியில் இருந்த மக்களின் மனதை அப்போது வருடி விட்டதாக கூறி உணர்ச்சிவசப்படுகிறார்கள்.
ஒவ்வொரு தேசமும் அதன் வாழ்வியலும் அன்னியர்களுக்கு புதிதுதான். தென்கொரியாவின் மக்களைப் பற்றியும் அதன் புதுமையை பற்றியும் மேலும் உங்களுடன் அடுத்த பதிவில் பகிர்கிறேன் ...................
பயணங்கள் தொடரட்டும்...
ReplyDeleteNandraga irunthathu
ReplyDeleteConfucianism..amazing this word itself is new to me..
ReplyDeleteAs usual well written
ReplyDelete