கொரிய பயணம் - Part 2


இனி கதவை திறந்து வெளியே செல்ல முடியாது,14 நாள் குவாரண்டைன் என்பதால். முழு நீள பாதரசம் பூசாத கண்ணாடி கதவு கொண்ட பால்கனி வழியாக தெருவும், போய் வருபவர்களும் தெரிந்தது, மனதை லேசாக வருடியது. பால்கனியை திறந்தால், கைக்கு எட்டியது ஓர் கனி கொண்ட மரம். சமைக்க சாப்பிட சில பாத்திரங்களும், வரும் முன்னரே கொடுக்கப்பட்ட மளிகை சாமான் லிஸ்டில் இருந்து தேர்ந்தெடுத்திருந்த அத்தனை சாமான்களும், சோப், சாம்பு, டிஷ்வாஷிங் லிக்விட், டிடெர்ஜெண்ட் லிக்விட், பேஸ்ட், டவல் என அனைத்து சானிட்டரி ஐட்டங்களும், கொரியா வந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்று வரை தீராத அளவிற்கு, யுனிவர்சிடி செலவில்  பக்காவாக வீட்டில் முன்னரே வைக்கப்பட்டிருந்தது. டின்னர் மட்டும் அவர்கள் தருவதாக கூறியிருந்தார்கள். பன்றி இறைச்சியும், மாட்டுக்கறியும் டின்னர் மெனுவில் இருந்ததால், வெஜிடேரியன் தேர்ந்தெடுத்தோம். வெஜிடேரியனில் மெனு எதுவும் குறிப்பிடப்படவில்லை. வைத்திருந்த மளிகை சாமானில் நம்மூர் மஞ்சள் பொடி, வத்தல் பொடி எதுவும் கிடையாது. நாங்கள் வந்தது வந்தே பாரத் மிஷன் fலைட் என்பதால், ஆளுக்கு 7 கிலோ மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. நாங்களும் எடுத்து வரவில்லை. பால், முட்டை, ஜாம், ப்ரெட், வாழைப்பழம், காய்கறிகள் சில, பூண்டு, மறுபடியும் எங்கள் மூதாதையர் செய்த புண்ணியம் அரிசி, மசூர் தால் இருந்தது. இன்னும் இரண்டு முறை இந்த 14 நாட்களில் இதே அயிட்டங்களை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். ஒட்டோகி(OTTOGI) என்ற பெரிய கொரிய மசாலா பாக்கெட் இருந்தது. இன்று வரை சப்பாத்திக்கு அவசர கூட்டு வைப்பதாக இருந்தால், அதைப் போட்டு வைத்து விடுவேன். சுவையாகத்தான் இருக்கும். Disclaimer: சுவையைக் குறித்து கணவரிடம் க்ராஸ் வெரிபிகேஷன் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. என் சொந்த மூளையை ஆழமாக கசக்கி, அதே மசாலாவை போட்டு கட்டியாக குழம்பும், கொஞ்சம் தண்ணியாக கொரிய ரசமும் வைக்க கற்றுக்கொண்டு விட்டேன், வந்த இரண்டு நாளில். ரசமும், அதன் பெயரும் நான் வைத்தது. கூகுளில் தேடினால் கிடைக்காது. E-mail idஐ கமெண்ட் செய்தால், ரெசிபி மெயிலில் அனுப்பப்படும். 

 

இரவு வந்தது. 7 மணி இருக்கும். டின்னருக்காக காத்திருந்தோம். மணி 8 ஆனது. என்ன ஒன்றும் வரவில்லை? கதவை திறந்து பார்க்கலாம் என்று பார்த்தால், இரண்டு பார்சல்கள் இருந்தது. எப்போதோ வைத்து விட்டு சென்றிருக்கிறார்கள். வெஜிடேரியன் கொரிய உணவு அப்படி என்னதான் வத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், அடுத்த அதிர்ச்சி. கொப்பும் கொளையும் பூவும் கொண்ட இரண்டு டப்பாக்கள். அதற்கு தொட்டுக் கொள்ள புளித்தண்ணி போல ஒரு சட்னி வேறு. அதில் ஊற்றி சாப்பிட வேண்டும் போல. என் கணவர் அரைத்து தள்ளினார். என் டப்பாவையும் சேர்த்து. புலி பசிச்சாலும் புல்லத் திங்காது பரம்பரை தான் நாங்க. அதுக்காக உண்மையிலேயேவா புல்ல குடுத்து டெஸ்ட் பண்ணுவீங்க என்று கடுப்பாகி, ப்ரெட் போட்டு சாப்பிட்டுக் கொண்டேன். இதில் வேடிக்கை என்னவென்றால், அடுத்த நாளும் அதே டின்னர். அத டின்னர்னு சொல்லாதீங்க என்று கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். இதில் ஊறிலிருந்து வேற என்ன சாப்பிட்ட என்ற வாஞ்சைக் கேள்விகள் கடுப்புகளை கிளப்பியது. 


அத்தனை அலுப்பு இல்லை. இருந்தும் நன்றாக உறங்கி விட்டோம். அடுத்த நாள் கொரோனா டெஸ்டிற்கு கியா கார்னிவலில் யுனிவர்சிடி மக்களே அழைத்துச் சென்றார்கள். ஊரிலிருந்து வரும் முன்னர் எடுத்த கொரோனா டெஸ்ட் போல என்று நினைத்து சென்றால், மூக்கை இரண்டு நிமிடத்திற்கு மேலாக நன்றாக கொடுமையாக நோண்டி கதற கதற கண்ணீர் வரவழைத்து விட்டார்கள். வீட்டிற்கு திரும்ப அழைத்து வந்து விட்டார்கள். 


சிறிது நேரத்தில் பெல் அடித்தது. வீட்டினுள் இருக்கும் கேமராவில் யாரோ என்று தெரிந்தது. திறந்ததும் இரண்டு பெரிய அட்டைபெட்டியை இறக்கி வைத்து விட்டு கையெழுத்து வாங்கி சென்றார்கள். அட்டைப் பெட்டியில் கொரிய ரிலீப் பண்ட் என எழுதியிருந்தது. திறந்து பார்ப்பதற்குள், உடன் வந்த தோழியிடமிருந்து போன் கால் வந்தது. எனக்கு ஒரு டப்பா வந்திருக்கு. உங்களுக்கும் வந்துருக்கா? என்றவுடன் ஆமா! இரண்டு டப்பாக்கள். என்னென்ன இருக்கிறது என்று வரிசைப்படுத்த முடியாத அளவிற்கு அயிட்டங்கள். தெர்மாமீட்டர், அதே சானிட்டரி அயிட்டங்கள்(அடுத்த ஆறு மாத்ததிற்கு ஓடும் போல), கணவருக்கு ரேசரும், எனக்கு சானிட்டரி பேடும் என்று சகலமும். சாப்பிடும் பொருட்களில் Canned Tuna, wafer, crackers, sea weed, என அதுவும் இன்னும் பல. Disposable gloves, masks, Wet wipes, organiser box என எக்ஸ்ட்ரா அயிட்டங்களும். அனைத்தும் இரண்டு பேருக்கும் தனித்தனியாக. இத்தனையும் நமக்கா என்ற ஆச்சர்யம், நமக்கே தான் என்ற சந்தோஷம், இருந்தும் எப்படி, எதற்கு என்ற கேள்வியும் இருந்தது. கோ பேஸஞ்சர் ஆன தமிழ் தோழியிடம் கேட்டேன். குவாரண்டைனில் இருப்பதால், கொரியன் கவர்மெண்டே அனைவருக்கும் கொடுக்கிறது. நீங்கள் புதிதாக வந்திருப்பதால், இன்னும் அதிகமாக தந்திருக்கிறது என்றார். நம்மூரில் இதே அயிட்டங்கள் தந்திருந்தால் கொஞ்சம் காஸ்ட்லி பெட்டிக்கடை போட்டிருக்கலாம். 


இது போக, கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ் ஆக வந்திருக்கும் சூழலில், அவர்களே கொரோனா காப்பகத்திற்கு அழைத்துச் செல்வது மட்டுமன்றி, சில நாடுகளுடனான கொரிய உடன்பாட்டில் இந்தியாவும் இருப்பதால், வந்த இந்தியர்களுக்கு கொரோனா தொற்றிருப்பின், அது தீவிரமாகும் வரை அன்சான் என்னும் ஊரில் இருக்கும் கொரோனா காப்பகத்தில் 14 நாள் தங்குமிடம் முதற்கொண்டு, மூன்று வேளை சத்தான கொரிய சாப்பாடு வரை எதற்கும் கட்டணம் கிடையாது. குவாரண்டைன் விதிகளை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஒரு மில்லியன் கொரியன் ஓன் பைனும் என்பது தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். 

 

வந்தது முதல் அனைத்தும் அருமையாக அமைந்து விட, அடுத்த 14 நாட்களுக்கு பொங்கியதும் தூங்கியதுமான தகவல் தான் என்பதாலும், என் சொந்த அனுபவங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருந்தால் மேலும் தூங்க வைத்து விடும் என்பதாலும், போன போஸ்ட் ரொம்ப பெருசு என்று சிலர் சந்தோஷப்பட்டுக் கொண்டதாலும்(அடுத்தவங்க சந்தோஷமா இருந்தா எனக்கு புடிக்காது கேங்க்ல நானும் ஒருத்தி என்பதாலும்) இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். கொரியாவில் ரசித்த கவனித்த விஷயங்களை அடுத்த தொடரில் பகிர்கிறேன்.......

Comments

Post a Comment

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

ஐரிஷ் பஞ்சம்

Bengal Famine

The Diary of Anne Frank

நைட்

அண்ணே! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா! Part 2

The Art of War

The Sixth Extinction: An Unnatural History

Sapiens: A Brief History of Humankind

schindler's list