தில்லி சலோ - Unprecedented Farmer Protest
மூன்று விவசாய மசோதாக்களை திரும்ப பெற ஆகஸ்டில் தொடங்கிய போராட்டம் இன்றளவும் அதன் தன்மை குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது. அப்படி அந்த மசோதாக்கள் என்னதான் சொல்கிறது, எதற்காக இத்தனை எதிர்ப்புகள்? உண்மையில் விவசாயிகள் தான் இந்த போராட்டங்களை நடத்துகிறார்களா? இல்லை, ஆளுங்கட்சி சொல்வது போல சீனா மற்றும் பாகிஸ்தானின் தூண்டுதலால் நடக்கிறதா? விவசாயிகளை, காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று வர்ணம் பூச அரசாங்கம் நினைத்தது எதற்காக? நிராயுதபாணிகளான விவசாயிகளை தாக்கியபோது இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என்று உலக நாடுகள் கடுமையாக விமர்சித்தது ஏனோ?
விவசாயிகள்
தங்கள் நிலத்தில் கிடைக்கும் பொருட்களை மண்டிக்கு எடுத்து சென்று, அதை ஏலம் மூலம் விற்பனை செய்வார்கள். காய்கறிகள் மற்றும் பழங்கள் வந்து போகும்
மண்டியில், ஒவ்வொரு பொருளுக்கும் ஏலத்தின் தொடக்க விலையை அரசாங்கம் நிர்ணயிக்கும்,
இதைத்தான் குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum support price) என்று சொல்கிறார்கள். இந்த
விலை பெரும்பாலும் காகிதத்தில் தான் இருக்குமே தவிர நடைமுறையில் இருப்பதில்லை. ஆனால், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் விலையிலிருந்து சற்று மாறுபட்டாலும்,
பெரும்பாலான விவசாயிகள் நெல், கோதுமை, உருளை, வெங்காயம் போன்ற மொத்தமாக அறுவடை செய்யும்
பொருட்களை அரசாங்கத்திடமும் மண்டியிலும் விற்று பயனடைகின்றனர். இவ்வாறு இயக்கப்படும்
மண்டிகளிடம் மாநில அரசாங்கம் வரி வசூலிக்கிறது. சரி, இதற்கும் மசோதாவுக்கும் என்ன சம்பந்தம்னு
தோனுதா?
மசோதால என்ன சொல்றாங்கன்னா…
விவசாயிகள் தங்கள் பொருட்களை மண்டியில் மட்டுமல்ல வெளியிலும் விற்கலாம். வெளியில் விற்கப்படும்
பொருட்களுக்கு மாநில அரசிற்கு வரி செலுத்த தேவையில்லை, அதுமட்டுமல்ல, தனியார் நிறுவனங்களிடம்
தாங்கள் நினைக்கும் விலைக்கு பொருட்களை வெளியேயும் விற்று கொள்ளலாம். இதற்கு விவசாயிகள் எதற்கு
எதிர்ப்பு தெரிவிக்கனும்? இது நல்ல வாய்ப்புதானே? மண்டியில் ஏலம் குறைந்த விலைக்கு
போகுமா இல்லை அதிக விலைக்கு போகுமா என்று யூகித்தறியவேண்டிய அவசியம் இல்லை. பின்னர்,
அதிக விலைக்கு மண்டிக்கு வெளியே விற்க அரசாங்கம் ஏற்படுத்தித்தரும் வாய்ப்பை எதற்காக
விவசாயிகள் நிராகரிக்கின்றனர்? சற்று உன்னிப்பாக நோக்கினால் இதன் சூட்சமம் புரியும்.
அதிக விலை கிடைக்கிறது என்று தங்கள் பொருட்களை தனியாரிடம் வெளியே விற்க ஆரம்பித்தால்,
காலப்போக்கில் மண்டிக்கு வரும் பொருட்கள் குறைய நேரிடலாம். ஒரு காலக்கட்டத்தில், வருமானம்
இல்லாத மண்டியை நடத்துவதில் மாநில அரசிற்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று மண்டியை மூடிவிட்டால்,
கடைசியாக இருப்பது தனியார் மட்டுமே. எங்களை விட்டால் உங்களுக்கு வேறு வழியில்லை என்ற
ஒரு தருணத்தை ஏற்படுத்தி, பின்னர் தாங்கள் (தனியார்) நிர்ணயிக்கும், முன்பை விட குறைந்த,
விலைக்கே பொருட்களை விற்க விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.
மண்டி |
விவசாய தொழிலில் இன்றளவும் பன்னாட்டு நிறுவனங்கள் நேரடி முதலீட்டை ஏன் செய்யவில்லை என்று யோசித்தது உண்டா? நிலம் இருந்தால் தானே விவசாயம் செய்ய முடியும், ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் நிலத்தை தன் வசமாக்கிக்கொள்ள நம் அரசியலமைப்பில் வழி இல்லை. எப்படி இதை சாதிக்கலாம் என்று யோசிக்கும் சிலரின் பிரதிபலிப்பாக விளங்குவதுதான் இன்றைய அரசாங்கம். விவசாயிகளின் நிலத்தை எவ்வாறு கையக படுத்த முடியும்? ஒரு சின்ன கதை சொல்றேன். ஒரு கிராமத்தில ஒரு பண்ணையார் இருந்தார். சிறு குறு விவசாயிகளுக்கு பயிரிட கடனாக பணம் கொடுப்பார். அதுமட்டுமல்ல, பயிர் செய்ய விதையும், விதை செழிக்க உரமும், இடையில் வளரும் களைகளையெடுக்க மருந்தும் கொடுத்து விடுவார். அவரிடம் கேட்காமல் வெளியே வாங்கினால், செல்லமாக கோபமும் படுவார்.
அதுபோக, அறுவடை முடிந்ததும், விளைந்த பொருட்களை சந்தை விலைக்கு தானே வாங்கியும் கொள்வார். பின்னர், தான் கொடுத்த கடன் போக மீதி பணத்தை விவசாயிகளிடம் கொடுத்துவிடுவார். இந்த காலத்துல இப்படி ஒருத்தரா? எவ்வளவு நல்லவர் என்று யோசிக்க தோன்றுகிறதா? விவசாயிகளின் துயர் துடைக்கும் விதமாக இதைத்தான் நம் அரசாங்கமும் விவசாய மசோதாவில் கூறியிருக்கிறார்கள். பின்னர் எதற்கு எதிர்ப்பு? ஒரு சின்ன மேட்டர் மிஸ் ஆயிட்டு!!
விளைப்பொருளை வாங்கும் பண்ணையார், அது தரமானதா என்று சரி பார்த்த பின்னரே வாங்குவார். “எவ்வளவு” தரமானது என்பதை பண்ணையார் தான் முடிவு செய்வார். ஒரு வேளை நம்முடைய பொருள் தரமற்றது என்றாலும், அடுத்த முறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பையும் தருவார். அதுமட்டுமல்ல, அந்த முறை பயிரிட பண உதவியும் செய்வார். இப்படி பத்து முறை உங்களுக்கு உதவிய பின்னரும் தரமான பொருளை தர தவறினால், நிலத்தை பண்ணையார் எடுத்துக்கொள்வார்!!!!!! அதன் பிறகு நிலம் உங்கள் பெயரில் இருந்தாலும், நிலத்தில் விவசாயம் பண்ணையார் தான் செய்வார். பண்ணையார “ஆண்ட பரம்பரைனு” சொல்லிடகூடாதுனு, நிலம் மட்டும் சும்மா உங்க பெயர்ல இருக்கும். இதுல கூடுதல் செய்தி என்னன்னா, முன்னாடி சொன்ன பண்ணையாரோட செல்லக்கோபம் தேவர்மகன் படத்தில் சொல்வது போல, அன்பா கவனிக்கிறதுனு நினைச்சீங்களா? அப்படி கவனிக்கிறது............ அதுபோக, ஆலமரத்துக்கு அடியில பஞ்சாயத்தை கூட்டி பண்ணையார்ட்ட நிலத்த வாங்கிரலாம்னு கனவு காணாதீங்க. அது நடக்கவே நடக்காது. இப்ப சொல்லுங்க பண்ணையார் நல்லவரா? இது தாங்க விவசாய மசோதாவும்!
சிஏஏ விஷயத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர்களை “ஆண்டி – இந்தியர்கள்” என்று பட்டம் சூட்டி ஓரளவு போராட்டக்காரர்களை சமாளித்த நேரம், கொரோனா வந்து பாஜாகவை காப்பாற்றியது. அதே பாணியில், இன்று போராட்ட களத்திலிருக்கும், இந்தியாவின் கோதுமை கிண்ணமென்று அழைக்கப்படும் பஞ்சாபின் சீக்கியர்களை, பிரிவினைவாதிகள், காலிஸ்தான்கள் என்று ஏதேதோ பட்டம் சூட்ட முயற்சி செய்தனர், ஆனால், பலிக்கவில்லை. ஏனென்றால், மெரினாவை நினைவுபடுத்தும் விதமாக பல நிகழ்வுகள் இங்கும் நடந்துள்ளது. முதல் முக்கியமான நிகழ்வு என்னவென்றால், அரசியல் சார்ந்த யாரையும் விவசாயிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. போராட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டது. நனைந்த உடையோடு இருந்த விவசாயிகளுக்கு, கம்பளி நிரப்பப்பட்ட ஒரு லாரி தரிசனம் தந்தது. அந்த கடும் குளிரிலும் ஒருவரும் கம்பளியை சீண்டவில்லை, ஏனென்றால் அதை அனுப்பியது ஒரு அரசியல்வாதி என்பதால். இன்றுவரை, பல விவசாய சங்கங்களின் குடையின் கீழ்தான் போராட்டங்கள் நடக்கிறது.
வரலாற்று சிறப்பு
வாய்ந்த ஒரு மசோதாவை எதற்காக அவசர அவசரமாக இயற்ற வேண்டும்? எதிர் கட்சிகளோடு விவாதித்து
இயற்றியிருக்கலாமே? மசோதாவை எதிர்க்கும் பட்சத்தில், விவசாயிகளின் விரோதிகள் எதிர் கட்சிகள்
என்று பிரகடனம் செய்து, விவசாயிகளின் (பெரும் சதவிகித) ஓட்டு வங்கியை தன் வசம் திருப்பியிருக்கலாமே?
மசோதாவை இயற்றும் முன் விவசாயிகளிடம் அறிமுகம் படுத்தியிருக்கலாமே? RSS யின் இயக்கமான
பாரதிய கிஸான் சங் எதற்காக விவசாயிகளை ஆதரிக்கின்றனர்? ஏதோ சரியில்லை, அது என்ன
என்பது ஆளுபவர்களுக்கு தெரியும். இருந்தும், இறங்கி வர ஏதோ தடுக்கிறது.
Comments
Post a Comment