கருப்பு – நிற வெறி: Racism at Doorstep

திராவிடன், ஆரியன் என்று அரசியல் பேசும் பதிவு அல்ல இது. நம் தினசரி வாழ்வில் நம்மை அறியாமல் நாம் பேசும் வழக்கு மொழியை பிரித்து ஆராயும் ஒரு முயற்சியே இந்த பதிவு. கருப்பர்கள் என்று சொல்வதில் மட்டும் இல்லை நிறவெறி. கருப்பை வெறுப்போடு ஒதுக்கும் ஒவ்வொரு அசைவுகளிலும் இருக்கிறது நிறவெறி. அண்மையில், அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாயிடு என்னும் கருப்பின இளைஞன் போலீசால் கொல்லப்பட்டதால், சமூக வலைத்தளங்களில் “BlackLivesMatter” என்ற ஹாஷ்டாக் பிரபலமானது. இந்த ஹாஷ்டாக்கை பதிவிட்டதில் எத்தனை பேர் தன் மகன்களுக்கு கருப்பு மருமகள்களை தேடுபவர்கள், எத்தனை இளைஞர்கள் தங்களுக்கு கருப்பு கேர்ள்ஃப்ரன்டை  தேடுபவர்கள் என்று தெரியவில்லை.

அழகு என்றாலே வெள்ளைத்தோல் என்று பல நூற்றாண்டுகளாக நம்பவைத்து விட்டனர். கடவுள் தொடங்கி, தங்கும் விடுதியின் வரவேற்பு பெண்கள் வரை வெள்ளைத்தோலை தேர்ந்தெடுக்கின்றனர். வெள்ளை என்றால் புனிதம் என்றும், கருப்பு என்றால் அபசகுனம் என்றும் பதிய வைத்தனர். இதில் உள்நோக்கம் உண்டா இல்லையா என்பது நிரூபிக்கப்படாவிட்டாலும், பல ஆன்மாக்கள் இந்த “வெள்ளை கருப்பு” அரசியலில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை. வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் பல சமயங்களில் “என்ன பையன் ரொம்ப கருத்துப்போயிட்டானு” சொல்வதுண்டு. அப்படின்னா கருப்பா ஆகுறது அவ்வளவு பெரிய குத்தமா?

விமான பணிப்பெண்களில் எத்தனை கருப்பு பெண்களை கண்டுள்ளீர்கள்? மிக குறைவு. ஏன் என்று எப்போதாவது யோசித்தது உண்டா? கருப்பாக உள்ளவர்கள் திறமை குறைந்தவர்கள், அவர்கள் மீது துர்நாற்றம் வரும், அவர்கள் அபசகுனத்தின் அடையாளம், அவர்களை பணிப்பெண்களாக வைத்தால் விமானம் ஓடாது, இல்லை கடலில் விழுந்துவிடும் என்று ஏதேனும் நிருபிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை. பின்னர் எதற்காக? அந்த வேலைக்கு அது தேவைப்படுகிறது என்று சொல்பவர்கள் இருக்கலாம். ஆனால், அது தான் உண்மையானு உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். விள்ம்பரத்தில் வரும் பெண்ணோ ஆணோ கருப்பாக இருந்து பார்திருக்கிறீர்களா? சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் பையன் விளம்பரத்தில் நடித்ததிற்கு எத்தனை விமர்சனம்? அவரின் அழகை விமர்சிப்பதில் எத்தனை வன்மம்?

குடும்பமே கருப்பா இருக்கும், ஆனா கருப்பு நிறத்தில் கார் வாங்க மாட்டாங்க. ஏன்னா, அது மங்களகரமான நிறம் இல்லையாம், அமரர் ஊர்தி மாதிரி இருக்குமாம். இதிலும் அரசியல் இருக்குமோ? கருப்பசாமிய கும்பிடுறவன் கொஞ்சம் பணம் வந்துட்டுனா, சாய்பாபா பக்கம் போயிடுறான். கோவணம் கட்டின முருகர விட நல்ல சிவப்பா இருக்குற சுப்ரமணியனை வீட்ல மாட்டுறான். கிராமத்துல கூட கோவில் கொடை வச்சாங்கனா, வாழை மட்டை, களிமண் கொண்டு உருவம் செய்து கடைசியா கொம்பமாடனையும், சுடலையையும் சந்தனத்தை பூசி சிவப்பாதான் காமிக்குறாங்க.

நம்ம ஊரு வள்ளலார் மாதிரி, கேரளத்தில் நாராயண குருக்கள். பேருல மட்டுந்தான் குருக்கள், ஏனா அவரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். ஒரு நாள் சிவனை அவர் அபிசேகம் செய்யும்போது, அதை மேல்சாதி நம்பூதிரிகள் எதிர்த்தனர். அதற்கு அவர், இது கீழ்சாதி மக்களின் சிவன், உங்களின் சிவன் அல்ல என்று பதிலளித்துள்ளார். அதுபோல, என்னோட சாமியும் என்ன மாதிரி கருப்புதான்னு ஏத்துக்காம, சிவப்பு தோல பார்த்து ஏமாந்துட்டோமே!!

கருப்பு நாயகன், கருப்பு தங்கம், கருப்பு வைரம்னு திரைப்படங்களில் அழைக்கப்படும் சிலர், அந்த இடத்தை பிடிக்க எத்தனை அவமானங்களை சந்தித்திருப்பர்? இன்று வரையில் கருப்பு கதாநாயகி இல்லையே!!! அதுமட்டுமல்லாமல், கருப்பாக இருப்பவர்களை தாழ்வு மனப்பான்மையுடன் திரைப்படங்களில் காட்டுவதும், கதாநாயகனை சிவப்பாகவும், வில்லனைக் கருப்பாக காட்டுவதும், கிராமத்திலிருந்து வரும் பெண்களாக இருந்தால் அவர்களை கருப்பாகக் காட்டுவதும், ஒடுக்கப்பட்ட சாதி மக்களை கருப்பாக காட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது.

இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனத்தில் நான் படித்தபோது, என்னை காலு (ஹிந்தியில் கருப்பு) என்று வட நாட்டு நண்பர்கள் அழைப்பர். ஆனால், நான் அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இருந்தும், கருப்பின் பெருமையை அவர்களுக்கு சொல்வதுண்டு, சில நேரங்களில் விபரீத செல்ல சண்டையில் முடிந்ததும் உண்டு. ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், அத்தனை மெத்த படித்த மனிதர்கள் மத்தியிலும் “கருப்பு” உறுத்தலாகவே தெரிகிறது. அதுமட்டுமல்ல, எனது நண்பர், தான் ஒரு வெஜிடேரியன் என்று பார்டிகளில் அறிமுகம் படுத்தும்போது, பலர் அவரை நோக்கி, நீங்க வெஜிடேரியனா? பார்த்தா அப்படி தெரியலயேனு சொல்வார்கள். ஏன்னு புரியுதா? எனது நண்பர் கருப்பு நிறத்தவர். கருப்பு நிறமுடைய அனைவரும் மாமிசம் உண்பவர்கள், அவர்கள் காட்டுமிராண்டிகள் என்ற இந்த சமுகத்தின் பார்வை கவலைக்குறியது.

நம்ம ஊரு கிருஷ்ணர் ரொம்ப அழகா இருக்கிறார். ஆனா, உண்மையில் கிருஷ்ணரின் உருவத்தை வடநாட்டவரே தெளிவாக காட்டுகின்றனர். ராஜஸ்தானில், நார்த்வாடா என்னும் இடத்தில் மிக புகழ்பெற்ற கிருஷ்ணரை பார்த்தால், கருப்பா நம்ம ஊரு சொடலை மாதிரி இருக்கும். ஏன் இந்த கிருஷ்ணர் நம்ம ஊருல புகழ் பெறவில்லைனு யோசித்தது உண்டு. நம்ம ஆளு தான் கருப்பு, கடவுளுக்கு ஏற்ற நிறம் இல்லைனு முடிவு பண்ணிட்டானே!!

தெலுங்கு மன்னர்களால் நாம் ஆளப்பட்டபோது, வடக்கில் இருந்து பூசாரிகளையும், சமஸ்கிருதத்தையும், ஆடை கலாச்சாரத்தையும் (மடிசார்) கொண்டு வந்ததாக கூறுகின்றனர். சில நூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட அவர்கள், வெள்ளைத் தோல் உடையவர்களாக இருந்துள்ளனர். மற்றும் அவர்களின் அரசவையில் வடக்கிலிருந்து வந்த பலர் இடம்பெற்றனர். இவர்களும் வெள்ளை தோல் உடையவர்களாகவே இருந்தனர்.  காலப்போக்கில், பெரும்பாலான முக்கிய பதவிகளில் அவர்களின் ஆட்கள் அமர, வெள்ளை தோல் படைத்தவன் மேல் பதவிக்கு தகுதியானவன், கருப்பு தோல் படைத்தவன் கீழ் பதவிக்கு தகுதியானவன் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வளர்ந்தது. இன்றோ அவர்கள் இல்லை, ஆனால் விதைத்த விதை ஆழ வேர்விட்டு மரமாக நிற்கிறது.


நான் கருப்பு, என் மகன் கருப்பு, அதனால் என் வம்சம் கருப்பாக இருந்து விடக் கூடாது என்பதால் வெள்ளை தோலில் மருமகளை தேடுகிறேன் என்று சொல்லும் அப்பாக்கள் இருக்கும் வரை, 

கருப்பை ஒரு குறையாக தன் சந்ததிக்கு சொல்லிக்கொடுக்கும் மனோபாவம் இருக்கும் வரை, 

சிவப்பா இருப்பவன் அறிவாளி என்ற பிம்பத்தை நம்பும் வரை, 

கருப்பு சட்டை போட்டுட்டு கல்யாணத்திற்கு போறது அபசகுனம்னு சொல்ற வரை, 

நம்ம ஊரு வெள்ளை வெளிநாட்டுல கருப்புனு தெரியாத வரை,

கருப்பு ஐயரை பார்த்தா இவரு பிராமணன் மாதிரி இல்லையேனு சொல்லும் வரை,

ஆத்தா என்றால் கருப்பு, அம்பாள் என்றால் சிவப்பு என்ற கருதுகோள் இருக்கும் வரை,

குழந்தை கொஞ்சம் கருப்பு.. அவங்க தாத்தா மாதிரினு சொல்ற வரைக்கும் 

ஒவ்வொருத்தர் மனசிலும் நிறவெறி இருப்பதை மறுக்க முடியாது. 

Comments

Post a Comment

பிரபலமான பதிவுகள்

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

அபுதாபி

நைட்

ஐரிஷ் பஞ்சம்

லாக்டவுன் குமுறல்கள்

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Sapiens: A Brief History of Humankind

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?