வந்தார்கள் வென்றார்கள் - A review on pages with blood shower and treasury loot
2 லட்சம் பிரதி, 26வது எடிஷன் - என்று வாசிக்க
அழைக்கும் அட்டைப்படம், வந்தார்கள் வென்றார்கள் என்ற
வசீகரிக்கும் தலைப்பு, உள்ளே வண்ண வண்ண படங்கள், என்று அத்தனை அம்சங்கள் இருந்தாலும், உடனே வாசிக்க
தூண்டுற அளவுக்கு நான் புத்தகப் பிரியர் இல்ல. வருடங்கள் முன்னாடி, அரை டசன் புக்ஸ ஒரே மாசத்துல முடிச்சதா நியாபகம். அந்த திடீர் ஆர்வம்
எப்படி வந்தது? பின்னர் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்குற அளவுக்கு
ஒரேயடியான மறைவு ஏன்? எதற்குமான காரணத்தையும் ஆராய
விரும்புனது இல்லை.
இந்த
லாக்டவுன்ல நேரம் போகாதத மறைக்க "நானும் தான் வாசிப்பேன்னு" ஒரு நல்ல
புக்க தேடி புறப்பட்டேன். சரி நம்ம நாட்டோட பின்புலம் பத்தி, அங்க அங்க கேள்விபட்டிருப்போம். ஆனா, முழு வரலாறை இத
வாசிச்சா ஓரளவுக்கு தெரிஞ்சிக்கலாம்
என்ற ஆர்வம் தான் வாசிக்க வச்சுது. இருந்தாலும் ஒரு எரிச்சலோட தான் வாசிக்க
ஆரம்பிச்சேன். காரணம் புத்தகத்தோட தலைப்பு. “வந்தார்கள் வென்றார்கள்”.
எவன்
ஊர்ல வந்து எவன் வெல்லுறதுங்குற அந்த சின்ன எரிச்சல். கடைசி
பத்தி தந்த சின்ன ஆறுதல் தவிர, புத்தகத்த முழுசா வாசிச்சு
முடிச்சப்புறமும் இன்னும் அப்படியே தான் இருக்கு. அதையும் தாண்டி பிரமிக்க
வைக்கிறது, கதையில், சாரி, நிஜத்துல நடந்ததா சொல்லப்படுற நிறைய நிகழ்ச்சிகள்.
வந்த
அத்தனை பேரரசர்களின் குறிக்கோளாகவும், பெரும் கனவாகவும்
இருந்தது செல்வம் கொழித்த டெல்லியை ஆள்வதே !!! பானிபட் போர் முதல் உலகின் அழகான
கோட்டைகளுள் ஒன்றாக வர்ணிக்கப்படும் தென்னகத்தின் செஞ்சி கோட்டையை கைப்பற்றும்
போர் வரை, அனைத்து போர்களிலும் சிந்திய ரத்தத்தின் கறைகள் புத்தகம் முழுக்க தெளிக்கப்பட்டிருக்கிறது.
கஜினி முகமது ஒவ்வொரு முறையும் தோற்று, திரும்ப திரும்ப படையெடுத்து வந்தான்னு பள்ளிப்பாடத்துல சொல்லித் தந்தது எல்லாம் பொய்யாம். ஒரே தடவையாக கொட்டிக் கிடக்கும் செல்வத்தை எடுத்து செல்ல முடியாததால, தவணை முறையில் போர் தொடுத்த விபரீதம் தான் கஜினியின் அந்த பதினேழு படையெடுப்பும் என்ற உண்மையை போட்டு உடைக்கிறது இந்தப் புத்தகம்.
எவ்ளோ பணம்? எவ்ளோ காசு? அத்தனையும் எங்க போயிருக்கும் என்று யோசிக்குறதுக்குள்ள, அடுத்து அடுத்து ஒவ்வொருத்தரா படையெடுத்து வந்து, இந்தியாவின் செல்வத்த சுரண்டி (சரியாதான் வாசிச்சீங்க! கோயில்களும், மாளிகைகளும் முழுக்க தங்கமும், வைரமும், மாணிக்க கற்களும் இழைச்சு கட்டியிருக்க, அதக்கூட சுரண்டாம விடல. இண்டீசண்ட் ஃபெல்லோஸ்) தூக்க முடியாம தூக்கிட்டு போறத பாக்கும் போது, என்ன செய்ய முடியும் இனிமேல்? 1750க்குள்ள முகலாயர்களும், ஆஃப்கானிய அரசர்களும் பாதிக்கு மேல் சுரண்ட, மீதி பாதிய தான் அடுத்து வந்த ஆங்கிலேயர்கள் சுரண்டியுள்ளனர்.
பத்மாவதி படம் பாத்துட்டு, கில்ஜி மாதிரி ஒருத்தன் உண்மையிலே இருப்பானானு தோனிருக்கு. அவன் ஒரு மிருக மன்னன். படத்துல காட்டப்பட்ட எதுவுமே, அவன் குணத்துல இல்லாம இல்லங்குறதும், மிகைப்படுத்தப்படலங்குறதும், படம் வருவதற்கு பல வருடங்கள் முன்னாடி எழுதிய இந்த புத்தகத்துல இருந்து புலப்படுது, அவனது அலி அடிமை உட்பட!!. ஆனா, நாட்ட என்னவோ நடுநிலையோட ஆண்டிருக்கான் என்பது ஆச்சர்யம் கலந்த உண்மை. அதைப்போல, தைமூர் போன்ற இன்னும் நிறைய அரக்க மன்னர்கள், கொடூரமா நம்ம நாட்ட கைப்பற்றி ஆண்டிருக்காங்கங்குறது கூடுதலாக கிடைக்கும் கசப்பான உண்மை.
பெருக்கெடுத்த
கள்ள நாணய புழக்கத்தை தடுக்க, முகமது-பின்-துக்ளக்
ஆட்சியின்போது, நாணய மதிப்பிழப்பு சட்டத்தை கொண்டு
வந்ததாகவும், அதனால் பலர் ஒட்டாண்டி ஆனதாகவும் சொல்லப்படுகிறது.
எங்கேயோ கேட்ட வார்த்தை? நம்ம Demonetisation ஏ தான். எல்லாரும் ஏறி விழுந்த குதிரையில, சாஸ்திரியாரும்
சருக்கி விழுந்தாராம் கதையா இருக்கு நம்ம மோடிஜி கதை.
மூன்று
நூற்றாண்டுக்கும் மேல், அத்தனை அரசர்கள் நம்ம நிலத்த முழுசா ஆண்டிருந்தாலும்,
முகலாய மன்னர்கள் மற்றும் ஆஃப்கானிய அரசர்கள் என்று தான்
குறிப்பிடத் தோணுதே தவிர, நம்ம நாட்டு அரசர்கள் என்று
பேச்சுக்கு கூட சொல்ல வராதப்ப, சோனியா காந்திய பிரதம மந்திரி
வேட்பாளரா நியமிக்க மறுப்பது ஏன்னு புரியுது.
பாபர், ஹூமாயுன், ஜஹாங்கீர், அக்பர்,
ஷாஜஹான், ஔரங்கசீப், எல்லாரும்
ஒரே வாரிசு வழி வந்த உறவுகள்னு ஹிஸ்டரிய ஒழுங்கா படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும். 10ஆம் வகுப்பு சமூக அறிவியலில் 75(least of all) என்பது
என்னோட ஹிஸ்டரி மார்க்கோட தனிப்பட்ட ஹிஸ்டரி. நடுவுல வரும் ஹூமாயுன் பத்தி
(அக்பரோட அப்பா), பத்து பக்கத்துக்கு மேல எழுதி இருந்தாலும்,
கதையாசிரியரே ஆகா, ஓஹோ என்று சொல்லாததுனால,
எனக்கும் இங்க பெருசா சொல்ல தோணல.
ஆனா, அவர் பையன் அக்பர் பற்றி நிறைய சொல்லலாம். அக்பர் வயித்துல இருக்கும்போது, மன்னரான அவரோட அப்பா,
பெரிய படையோட போர் புரிந்து தோற்று, நிறைமாத
கர்ப்பிணியான மனைவிய கூட்டிட்டு ஏதோ பாலைவனத்து மன்னர்கிட்ட அடைக்கலம் தேடி
போனாராம். அந்த வறண்ட வனத்துல, கர்ப்பிணி மனைவிக்கு மாதுளை
சாப்பிட ஆச வர, எதிர் பக்கமா ஒருத்தர் மாதுளம்பழம்
வித்துட்டு வந்ததும், ஜஹாங்கீர் உன் வயித்துல வளர்வது அப்படி
யார்தான்னு சிலாகிச்சுக்கிட்டாராம். அதே சிலாகிப்போடு தான் அக்பர் இறுதி வரை
வாழ்ந்தாராம். Some people’s fate are written beautiful by birth. அக்பர் பற்றி சொல்ல அவ்வளவு விஷயங்கள் இருக்க, அவர்
அமைச்சரவைல இருந்த பீர்பால் பற்றி சொன்ன இரண்டு பக்கம் மனசுல நல்லா நிக்குது.
பீர்பால் நம்ம வடிவேல் -6.0 வர்ஷன். மென்ஷன் பண்ணிருக்குற
மைனஸ், 1600 ஆம் ஆண்டுக்கு பின்னோக்கி போறதுனால போட்ட குறியே
தவிர, பீர்பால் வந்து போகிற ரெண்டு பக்கமும், same
level humour guaranteed……
பாபர்
சொந்தமா, "பாபர் நாமா" என்கிற சுயசரிதை எழுதுற
அளவுக்கு படிச்சவர் என்பதும், அவரோட பேரன் அக்பர், எழுதப்படிக்கவே தெரியாதவர் மற்றும் விரும்பாதவர் என்பதும்
புத்தகத்திலிருந்து கிடைக்கும் தகவல். ஜாதி மத பாகுபாடின்றி, மக்கள மக்களா மட்டும் பாக்குற சாணக்கியத்தனம், அன்றைய
காலத்து பாபருக்கும், அக்பருக்கும் இருக்கையில, இந்த காலத்து பிஜேபிக்கு ஏன் இல்லாம போச்சுங்குற கேள்வி எழ தான் செய்கிறது.
இவங்கள
அடுத்து வந்த வாரிசான ஷாஜஹான், கலாரசிகன் என்பது அவர் கட்டிய
தாஜ்மஹால் ஒன்றே சாட்சி. ஆனா, நாடி நரம்பெல்லாம், ரசிச்சு வாழ்ந்த ஒருவரால மட்டும் தான் அப்படி ஒரு கட்டிடத்தை கட்ட
முடியும் என்பது பின்னாளில் வந்த வெள்ளைக்காரன் ஒவ்வொரு செங்கல்லா பெயர்த்து
எடுத்தாவது, தாஜ்மஹால அவனோட நாட்டுல கொண்டு போய்
நிறுவிரனும்னு துடிச்ச துடிப்புல இருந்து புலப்படுது. மகனால சிறைப்படுத்தப்பட்ட
நாட்களில், மகனிடம் தாஜ்மஹாலை பார்ப்பது போல் அறை அமைத்து தர
மனு விடுத்து, இறுதி மூச்சு விடும் சமயம் கூட, அவர் கண்கள் தாஜ்மஹால் இருந்த திசை பார்த்து மூடியிருந்ததாகவும்
சொல்லப்படுகிறது.
புத்தகத்தோட
ஆரம்பத்துல இருந்து இறுதி வரை கோஹினூர் வைரம் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு மன்னராக கைமாறுகிறது. கடைசியாக வைத்திருந்த மன்னர் டெல்லியை
சூறையாடிய பாரசீக மன்னன் நாதீர் ஷாவிடம் வசமாக சிக்கிக்கொள்ள, அவசர அவசரமாக மன்னர் வைரத்தை தலைப்பாகையில் மறைத்ததாகவும், அதை மோப்பம் பிடித்த பாரசீக மன்னன் தலைப்பாகையை மாற்றிக் கொள்வோமா என
சூசகமாக களவாடியதையும் பார்க்கலாம்.
மற்றொரு
விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக, மயிலாசனத்த சொல்றாங்க. வைரமும்
வைடூரியமும் பதிச்சு, தான் பதவி ஏற்க ரெடி பண்ணாராம்
ஷாஜஹான். கற்பனைக்கெல்லாம் அரசன் யா அவரு.
ஆனா
இவரோட பையன் ஔரங்கசீப் எளிமை விரும்பியாம். கஞ்சன்னு கூட வெளிப்படையாவே சொல்றாங்க.
அதனால் தான், இறந்த பின், தாஜ் மஹால் போன்ற
அமைப்புடன், கருப்பு சலவைக் கல்லால் கட்டப்பட்டிருக்க
வேண்டும் எனது கல்லரை என்ற ஷாஜஹானின் ஆணையை, அதெல்லாம்
வேண்டாம், தாஜ் மஹாலிலேயே இடம் இருக்கிறது என்று
செலவில்லாமல் மும்தாஜ் அருகிலேயே புதைத்து விட்டாராம் கஞ்சன் ஔரங்கசீப்.
ஷாஜஹான்
மும்தாஜ் காதலோடு சேர்த்து, ஜஹாங்கீர் நூர்ஜஹான் காதலும் புத்தகத்தில்
கதைக்கப்படுகிறது. பல மனைவிகள் இருந்தும் விதவைப் பெண்ணான மெஹருனிசாவை (பெயர்
அழகாக இருப்பதால் குறிப்பிடப்பட்டுள்ளது) திருமணம் செய்த பின்னர், அவள் ஆட்டிய கைப்பாவையாகவே செயல்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் முந்நூறு
ஆண்டுகளுக்கு முன்னர், மன்னரே விதவையைத் திருமணம் செய்ததால்,
"விதவைக்கு மறுவாழ்வு அளித்த மகாபிரபு", "மூடநம்பிக்கைகளை களைய வந்த கர்மவீரன்" என்று பாராட்ட தோன்றினாலும்,
மணந்த முப்பது மனைவிகளில், அவளும் ஒருத்தி
என்பதால், பாராட்ட வந்த வாயை மூடிக்கொண்டேன். அக்பரின்
ஜோதாவையும், ஷாஜஹானின் மும்தாஜையும் கூட 'பிரியமான மனைவி' என்பதற்கு பதில் 'மனைவிகளுள் பிரியமானவர் ' என்று குறிப்பிடுவது
தான் சரி.
பல
பகுதிகளில் வருகிற பல மன்னர்கள், ராஜ வாரிசாக பிறந்திருக்கவில்லை.
மன்னனாகும் கனவு புதைந்தவர்கள், கில்ஜி, பாபர், சத்ரபதி சிவாஜி உட்பட………..
வாசித்த
அத்தனை மொகலாயர்களுக்கும் இடையில், கம்பீரமாகவே வந்து
போறாங்க நம்ம நாட்டு வட தேசத்து ராஜபுத்திரர்கள். மராட்டிய சிங்கம் சிவாஜி கூட
ஔரங்கசீப் அரசுடனான மோதலில் எட்டிப் பார்த்து கொட்டத்தை அடக்கி விட்டுச்
செல்கிறார். ஆனால், சிங்கம் வந்து போன முழு நேரமும் கர்ஜித்துக்
கொண்டிருக்கவில்லை. பதுங்கியிருந்த நேரங்களும் உண்டு. பாய்வதற்கு அல்ல. பரலோகம்
சென்றுவிடாமல் இருக்க.
இடையிடையே
அரியணைக்கு அழகு சேர்த்து விட்டு செல்கிறார்கள், ஆண் அரசர்களுக்கு நிகராக வாள் சுழற்றி, எதிரிகள்
அஞ்சி நடுங்கும் அளவுக்கு போர் புரிந்து, வெற்றி வாகை சூடிய
ராணிகள் ரஸியா பேகம், மராட்டிய அரச வாரிசான தாரா பாய்
மற்றும் சில ராஜபுத்திர ராணிகள். ரஸியாவின் தந்தைக்கு பின் அரியணை ஏற இரண்டு ஆண்
வாரிசுகள் இருக்க, இக்கட்டான சூழ்நிலையிலும் தந்தை
பரிந்துரைத்தது ரஸியாவின் பெயரையே.
கஜினி
படையெடுப்ப பத்தி சொல்லுறப்ப ஒரு முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேனே. அதே
சமயத்துல, தெற்கிலிருந்த ஒரு மன்னன், வட
நாட்டு அரசுகள அலேக்கா துவம்சம் செய்து அடிபணிய வச்சதும்
நடந்திருக்கு. நல்லவேளை, கஜினி அந்த அரசர் கண்ணுல படாம ஓரமா
போய்ட்டதாகவும் பேசிக்குறாங்க. அவர் பெயர் ராஜேந்திரச் சோழன். சோழனுக்கும் வேற
இடத்து மேல கான்சென்ட்ரேஷன் இருந்ததால, டேக் டைவர்ஷன்
பண்ணிக்க விரும்பலையாம்.
மகுடத்திற்காக
நடந்த அரசக் குடும்ப கொலைகள்,
சூழ்ச்சி
செய்து அரியணை ஏறிய அரச அடிமைகள்,
மது, மாது, ஓபியத்தால் ஆட்சி இழந்த பல ராஜ வாரிசுகள்,
இது
எதையும் துளியும் தொடாத ஔரங்கசீப்,
மகன்
உயிர் காக்க, தன் உயிர் எடுக்கச் சொல்லி இறைவனிடம் வேண்டும்
அன்புத் தந்தை பாபர்,
தந்தை
சொன்ன சொல்லைக் காப்பாற்ற, துரோகம் செய்த தமையன்களை தண்டிக்காமல் விட்டதால், பல போர்களை சந்திக்க
நேர்ந்த ஹூமாயுன்,
இந்து
மரபான உடன்கட்டை ஏறுதலுக்கு அன்றே தடைவிதித்த முஸ்லிம் மன்னர்,
இன்றும்
பயன்படுத்தப்படும் வங்கத்தையும் பஞ்சாபையும் இணைக்கும் ஷெர்ஷா (ஆஃப்கானிய அரசர்)
காலத்தில் போடப்பட்ட சாலைகள்,
ஜோக்குகள்
பிடிக்காத முகமது-பின்-துக்ளக்,
உள்பட...
வாசிக்கும்
அனைத்துப் பக்கங்களிலும் சுவாரசியம்.
இறுதியாக, பாரசீக மன்னர் எழுதிய கடிதத்திற்கு பதில் அனுப்பாத ஒரே காரணத்திற்காக, ஔரங்கசீப்பின்
பேரனான முகமது ஷாவை (கடைசியாக மயிலாசனத்தில் அமர்ந்த முகலாய மன்னர்) எதிர்த்து படை
திரண்டு வந்து சிறைப்பிடிக்க, டெல்லி மக்கள் திரண்டிருந்து
நாதிர் ஷா மீது, கற்கள் எரிந்தும் கெட்ட வார்த்தைகளால்
திட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க,.......................... (ஆரம்பத்துல சொன்ன மாதிரி, உங்களுக்கும் கொஞ்சம்
ஆறுதலா இருந்திருக்குமே)
பின்னர்
நடந்தது அனைத்தும் வரலாறே........................
இதுக்கு
மேல நான் எழுதுனா, 2506
பக்கங்கள் கொண்ட அக்பர் நாமா என்னும் சரிதையில் உள்ள முக்கிய
நிகழ்ச்சிகளை 20 பக்கத்தில் அடக்கிய ஆசிரியர் மாதிரி,
அவரோட இந்த 208 பக்கம் படைப்ப இருபது
பக்கத்துல முடிச்சுட்டதா என்னை பெருமைப் படுத்திருவாங்க, ஆதலால்,
இந்த உரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
சிறப்பான பதிவு..தொடரட்டும். வாழ்த்துகள்.
ReplyDeleteஅழகா எழுதியிருக்கீங்க... அந்தப் புத்தகத்த்தின்/சரித்திரத்தின் முக்கியமான பகுதிகளை ரத்தினச் சுருக்கமாய் கொடுத்திருக்கீங்க வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி.
Deleteஅருமையான புத்தக வாசிப்பு அனுபவக் கட்டுரை அக்கா. உங்கள் மொழியும் நடையும் இப்புத்தகத்தின் எழுத்தாளர் மதன் போலவே சுவாரசியமாக இருந்தது. நீங்களே சொன்னது போல புத்தகத்தின் பகுதிகளை எழுதாமல் புத்தகத்தின் நிறை, குறை, அதன் தாக்கம் போன்றவற்றை மட்டும் எழுதி புதியவர்களை வாசிக்க தூண்டுங்கள் அக்கா..
ReplyDeleteஅன்பும் நன்றியும்