இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby
பரீட்சை பேப்பர் முதல் திருமண பத்திரிக்கைகள் வரை, ‘உ’ னா என்ற பிள்ளையார் சுழியுடன் தான் இந்துக்கள் ஆரம்பிக்கின்றனர். பெரும்பாலான சமய இடங்களில்
முதல் மறியாதை கிடைக்கப்பெற்று அமர்ந்திருக்கும் இவரை கணபதி, விநாயகர், யானைமுகத்தோன்,
பிள்ளையார், கஜமுகன், விக்னேஸ்வரன் என்று பல பெயர்களில் அழைக்கின்றனர். இவரின் பிறப்பு
பற்றி பல கதைகள் இருந்தாலும், கலியுகத்தில் கூறப்படும் கதையை சுருக்கமாக பார்க்கலாம். பின்னர் அவரின் தோற்றம், மக்களிடத்தில் பிரபலமான கதை மற்றும் இவரின் பின்னால் இருக்கும் அரசியலையும் பார்க்கலாம்.
திருச்செங்காட்டங்குடியில் இருக்கும் வாதாபி விநாயகர் |
தமிழ்நாட்டின் முதல் கணபதியாக, திருவாரூர் மாவட்டத்தின் திருச்செங்காட்டங்குடியில்
இருக்கும் வாதாபி கணபதியை குறிப்பிடுகின்றனர்.
இவரின் வருகைக்கு பிறகு தான்
கணபதியின் உருவ வழிபாடு தமிழ்நாட்டில் பிரபலமானது. பல்லவ மன்னனின் படைத்
தலைவனான, சிறுதொண்டர் என்னும் பரஞ்சோதியார், வாதாபியை வென்று அங்கிருந்து
எடுத்து வந்த சிலை தான், வாதாபி கணபதி. இது கிபி 3ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை காஞ்சி பெரியவர், கணபதி பற்றிய தனது ஆராய்ச்சியில் மறுத்துள்ளார். ஏனென்றால்,
பரஞ்சோதியாரால் கொண்டு வரப்பட்ட சிலையின் வடிவமைப்பு அந்த காலத்து சாளுக்கிய சிலை வடிவமைப்பு
போல் இல்லாதது தான் காரணம். மேலும், அந்த சம காலத்தில் கிடைக்கப்பெற்ற வரலாற்று புத்தகங்களிலோ
கல்வெட்டுகளிலோ வாதாபி கணபதி குறித்த குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை.
இதை அடுத்து கிபி 6ம் நூற்றாண்டை சேர்ந்ததாக சொல்லப்படும் காரைக்குடியை
அடுத்துள்ள பிள்ளையார்பட்டி விநாயகர், தமிழகத்தில் தோன்றிய முதல் கணபதியாக இருக்கலாம்
என்று கணித்தனர்.
பிள்ளையார்பட்டி "குடவரை பிள்ளையார்" |
இங்கே பெரும்பான்மையாக வாழும் சமூகம், நகரத்தார் என்று சொல்லப்படும்
நாட்டுகோட்டை செட்டியார். இவர்கள் வாழ்ந்த பகுதியை “நகரம்” என்று அழைத்ததன் மூலம்
தான், மக்கள் கூடி வாழும் பகுதியை நகரம் என்று அழைக்கத் தொடங்கினர். வணிகத்தில் சிறந்து
விளங்கிய இவர்கள், தேசங்கள் தாண்டி தொழில் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நாடு
விட்டு நாடு பயணம் சென்ற இவர்கள், வெவ்வேறு நாட்டின் கலாச்சாரங்கள், உணவு பழக்கங்கள் மற்றும்
சமய நம்பிக்கைகளை தங்கள் சொந்த ஊரில் அறிமுகம் செய்தனர். மேலும், ஒவ்வொரு வீட்டின் வாசலிலும்
தவறாமல் பிள்ளையார் இருப்பதை பார்க்கும்போது, காரைக்குடிக்கும் பிள்ளையாருக்குமான தொடர்பு விளங்கும்.
முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனாவில் அறிமுகம் ஆனவர், விநாயகர். இதனால் தான் என்னவோ தீபாவளியை விட விநாயகர் சதுர்த்தியே அங்கு வெகு விமரிசையாக
கொண்டாடப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா |
வணிகத்திற்காக மகாராஷ்டிரா சென்ற செட்டியார்கள், அங்கிருந்து
கொண்டு வந்ததாக கருதப்படுபவர் தான் பிள்ளையார்பட்டி விநாயகர். அதுமட்டுமல்லாமல், வணிகத்திற்காக சென்ற
இடங்களில் எல்லாம், விநாயகரை வைத்து வழிபட்டதால், அனைத்து ஊர் மக்களிடத்திலும் விநாயகர்
வழிபாடு விரைவில் பிரபலமடைந்தது. தெருக்கு தெரு பிள்ளையார் கோவில் இருப்பது வணிகர்களின் உழைப்பால் தானோ?? மேலும், தொழிற்கூடங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என்று எங்கு பார்த்தாலும் விநாயகர் இருப்பதற்கு காரணம் வணிகர்களே.
அன்றைய அரசன் முதல் இன்றைய அரசாங்கம் வரை, எடுக்கப்படும் கொள்கைகள் அனைத்தையும் தொழிலதிபர்களிடத்தே விட்டுள்ளனர். அத்தகைய தொழிலதிபர்களிடம் சிக்கினால், அவர்களின் விளம்பர யுக்த்தியால், தெய்வமும் பிரபலமாகும் என்பதற்கு பிள்ளையார் ஒரு சாட்சி. சிவன் விநாயகருக்கு அளித்த முழுமுதற்கடவுள்
அங்கீகாரமானது, வணிகர்களிடத்தில் சேர்ந்ததால் இன்றுவரை தக்கவைக்கப்பட்டுள்ளது.
புராணக்கதைகளில் சொல்வது போல், யானை தலையும் மனித உடலும் சேர்வதற்கான வாய்ப்புகள்
இல்லை. விஞ்ஞான ரீதியில் இதை பார்ப்போமேயானால், சிவன் பார்வதியின் மகனை வெட்டிய போது,
எவ்வளவு “ப்ளட் லாஸ்” இருந்திருக்கும்? அறுவை சிகிச்சையை சீஃப் சர்ஜன் பிரம்மா எப்படி
செய்தார்? இப்படி விடை தேட ஆரம்பித்தால், புதிரே குழம்பிவிடும் என்பதால், நாம் இதை
விஞ்ஞான ரீதியாக பார்க்கப்போவதில்லை.
மிருக முகம் எதற்காக? கட்டுக்கதைகள் மற்றும் புராணக்கதைகளில் மனிதனுக்கும்,
மிருகத்துக்குமான நெருக்கம் அதிகமாக காணப்படுகிறது. வேட்டையாடி தனது வாழ்க்கையை கழித்த
கற்கால மனிதன், மிருகங்களை இரையாக மட்டுமல்லாமல், தனக்கு நிகராகவும் மதித்துள்ளான். இதனால் தான் அன்றைய மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பில் மிருகங்களின் பங்கை பார்க்க முடிகிறது. தோண்டி
எடுக்கப்பட்ட மனித எலும்புகளோடு மிருக எலும்புகளும் இருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்
கூறுவதை பார்த்தால், இது இறந்த நபரின் இறுதி சடங்கில் பலி கொடுக்கப்பட்ட மிருகமாக
இருக்கலாம். மேலும், அந்த கால கட்டத்தில் வாழ்ந்த சூனியக்காரர்கள்
மிருகங்களிடம் மிக நெருக்கமாக இருந்துள்ளனர். மிருகங்களிடம் பாடம் கற்றதாகவும், பல
நேரங்களில் தங்களை விட அறிவான உயிரினமாக மனிதர்கள், மிருகங்களை பார்த்ததாகவும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், இப்படி கற்ற பாடங்கள் மூலமும், நெருக்கத்தின் மூலமும் மனித நிலையை
தாண்டிய அடுத்த நிலைக்கு செல்ல முடியும் என்று நம்பியுள்ளனர்.
எதற்காக யானை முகத்தை தேர்வு செய்தனர்? யானை, வாழும் இடம் செழிப்பின் அடையாளமாகவும்,
காடுகளில் மற்ற மிருகங்களால் அச்சுறுத்தப்படாமலும், கூரிய அறிவுள்ள விலங்காகவும் குறிப்பிடுகின்றனர்.
எனவே, அறிவான யானை முகத்தையும் மனித உடலையும்
கொண்டு அன்றைய புராணங்களில் ஒரு பாத்திரத்தை படைத்திருக்கலாம். மிருக முகமும் மனித
உடலும் இன்று கேட்பதற்கு வினோதமாக தெரிந்தாலும், அன்றைய காலக்கட்டத்தில் சாதாரணமாக
இருந்திருக்கலாம். என்னதான் இருந்தாலும், அந்த காலகட்டத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையை யோசிச்ச ஆசிரியர் பாராட்டுக்குறியவரே!!
அரசியல் ரீதியாக பார்ப்போமேயானால், யானை முகத்திற்கு ஒரு காரணம் உள்ளது. விநாயகர்
அறிமுகமான கி.பி ஆறாம் நூற்றாண்டில், மேல் சாதி மக்கள், கீழ் சாதியினரை தீட்டாக நடத்திய சாதிக் கொடுமை தலைவிரித்தாடியது. இதனால், தங்களை
சமமாக மதித்த பௌத்த மதத்தை தழுவ தொடங்கினர் கீழ் சாதியினர். அவர்களை பௌத்த மதமும் அரவணைத்தது. 500 – 700 ஆண்டுகளில், இந்து - பௌத்த கட்டமைப்புகள், கோவில்கள் வளர்ந்திருந்தன.
இருந்தும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழகத்தில் பிரபலமாக இருந்த பௌத்த மதம்
வீழ்ச்சியடைய தொடங்கியது. இதன் தாக்கத்தை எல்லோரா குகைகளில் பார்க்கலாம். புத்த
குகைகளை ஆக்கிரமிப்பு செய்த இந்து மதம், அங்கிருந்த யானைகளை உடைத்திருப்பதை பார்க்கலாம்.
எல்லோராவில் இருக்கும் தும்பிக்கை உடைந்த யானை |
ஏனென்றால் யானை, பௌத்தர்களின் நெருங்கிய விலங்கினம். அதுமட்டுமல்லாமல், பௌத்த மதத்தை வெற்றி கொண்டதை
குறிக்கும் விதமாக, பௌத்தர்களின் குறியீடான யானையை இந்துக்களின் குறியீடான சிங்கம்
தாக்குவது போல் சில சிலைகளையும் பார்க்கலாம்.
எல்லோராவில் யானையை தாக்குவதுபோல் இருக்கும் சிங்கத்தின் சிலை |
மேலும், பௌத்த மதம் சரிய தொடங்கியிருந்ததால், பௌத்தத்தை தழுவிய மக்களை இந்து மதத்திற்கு திசை திருப்ப வேலைகள்
நடந்தன. ஒன்றால் ஈர்க்கப்பட்ட ஒரு கூட்டத்தை, வேறொன்றால் ஈர்க்க வேண்டுமென்றால், அவர்கள்
எதனால் ஈர்க்கப்பட்டனரோ அதைப்போன்ற ஒன்றால் ஈர்ப்பதுதான் எளிதானதாக இருக்கும். புரியலையோ??
கோல்கேட் தன்னோட தொழிலை பெருக்க இலவசமா டூத்பிரஷ் குடுக்குதுனு வச்சிக்கோங்க, க்லோஸ்அப்பும் டூத்பிரஷ் தான் கொடுக்க முயற்சி பண்ணும். எதற்கென்றால், இலவசமாக முதலில் கொடுக்கப்பட்ட டூத்பிரஷ் மக்கள் மனதில் பதிந்து விட்டதால்!!!!
இதை அடிப்படையாக வைத்து மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க, பௌத்த மதத்தின் அடையாளமான அரச மரத்தையும், புத்தரின்
விலங்கான யானையையும் ஆயுதமாக எடுத்தனர், இந்துக்கள். அதனால்
தான், மக்கள் மத்தியில் பிரபலமான யானையை தலையாக கொண்டு ஒரு தெய்வத்தையும், அரச மரத்தை
அதன் வீடாகவும் உருவாக்கினர். இப்ப தெரியுதா எதுக்கு பிள்ளையார் அரச மரத்தடியில் இருக்கிறார்னு!!!
என்னதான் நடந்தாலும், கட்டுக்கதைகளும் விஞ்ஞானமும் இணையாக இன்றும் பயணிக்கதான் செய்கிறது. ஒன்றோடு ஒன்றை
ஒப்பிட்டு உண்மையை அறிய முற்பட்டால் குழப்பமே மிஞ்சும். ஆனால், தனித்தனியாக பார்த்தால், அதற்கென்று
பயன்கள் இருக்கத்தான் செய்கிறது. வளர்ச்சியை விஞ்ஞானம் கொண்டும், மக்களின் உணர்ச்சியை
கட்டுக்கதைகள் கொண்டும் சமநிலையில் கட்டுப்படுத்தி பல அரசியல் கட்சிகள் இன்றும் வெற்றி
பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
Comments
Post a Comment