சில்க் ரோடு பகுதி-1 – Intelligent Start-up Dark web Drug Business
2020
ல் சில மாநில அரசுகள் ஆன்லைனில் சரக்கு விற்பதற்கு ஆலோசனை செய்து வருகிறது. ஆனா, பத்து
வருஷத்திற்கு முன்னாடியே பலவகைப்பட்ட போதை பொருட்களை ஆன்லைன்ல விற்று, கோடிகள் சம்பாதித்து,
உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவனின் உண்மை கதைதான் இது. ஒரு ஹோட்டல் கூட இல்லாம,
உலகம் முழுவதும் இருக்கும் பெரும்பாலான ஹோட்டலை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் “OYO”
போல, தனக்குனு ஒரு சொந்த கார் கூட இல்லாம பெரும்பாலான வாடகை காரை தன் கட்டுபாட்டில்
வைத்திருக்கும் “UBER”, “OLA” போல, ஒரு பெட்டிக்கடை கூட இல்லாம உலகத்தில் பல அண்ணாச்சி
கடைகளை கட்டிக்காக்கும் “ALIBABA” போல, தள்ளுவண்டி சாப்பாட்டு கடை கூட இல்லாத “SWIGY”,
“UBER EATS”, “ZOMATO” , நாட்டுள உள்ள பல சாப்பாட்டு கடைகளை தங்கள் வசம் வைத்திருப்பது
போல, எல்லா மருந்தும் கொடுக்கிற “PHARMEASY” யிடம் மருந்துகடையே இல்லாதது போல, சந்துல
நின்னு விற்குறதுக்கு ஒரு கஞ்சா பொட்டலம் கூட இல்லாம, உலக போதை பொருள் சந்தையை தன் கட்டுக்குள் ஒருத்தன் வைத்திருந்தான் என்றால்,
ஆச்சர்யம் இல்ல தான். ஆன்லைன்ல சாதிக்க ஐடியா தான் வேணும், இருந்தா போதும் எல்லாம்
சாத்தியம். அப்படி உருவான ஒரு சட்ட விரோதமான “START-UP” தான், இந்த “SILK ROAD”.
அமெரிக்காவின்
டெக்சாஸ் மாகாணம், ஆஸ்டின் என்னும் ஊரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, இயற்பியல்
பட்டதாரியாக தேர்ச்சி பெற்று, பிற்காலத்தில் உலகமறிந்த போதைப்பொருள் வலைத்தளத்தை உருவாக்கியவன்.
அமெரிக்காவின் புலனாய்வுத்துறை, வருமானத்துறை, போதைப் பொருள் தடுப்புத்துறை என்று பலரின் கண்ணில்
மண்ணைத்தூவி தன் ராஜாங்கத்தை நடத்தியவன். இவனின் பெயர், ROSS WILLIAM ULBRICHT. எப்படி
தனது ராஜாங்கத்தை ஆரம்பித்தான், கம்ப்யூட்டர் பற்றிய அறிவு இல்லாமல் தனிமனிதனாக வலைத்தளத்தை
உருவாக்கிய பின்னணி, அவனின் காதல் வாழ்க்கை, அனுபவித்த மரண பயம், சம்பாதித்த கோடிகள்
என்று பலவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உலகமறிந்த
மனிதனாக வலம் வர வேண்டும் என்று எண்ணிய ரோஸ், விடுதலை, உரிமை, சுதந்திரம் என்று அடிக்கடி
பேசுவது வழக்கம். பட்ட படிப்பை முடித்த பின்னர், பல தொழில்களில் தோல்வியைத் தழுவி, கடைசியாக
புத்தக நிலையம் திறக்க நினைத்தான். இருந்தும், ஏனோ திருப்தி அடையவில்லை. தன் தனிப்பட்ட ஈடுபாடு, விருப்பத்திற்கு ஏற்ப ஒரு தொழிலை செய்ய நினைத்தான். கம்ப்யூட்டரில் மோகம் கொண்ட ரோஸ், இதுவரை யாரும் தொடாத ஒன்றை வடிவமைக்க திட்டம் தீட்டினான். அப்போது, போதை பழக்கத்திற்கு
அடிமையான இளைஞர்கள் போதை பொருட்கள் வாங்க செல்லும் இடங்களில் தாக்கப்படுவதும், பணத்தை பறி கொடுப்பதும், சில நேரங்களில் போலிசில் சிக்கி பல ஆண்டுகள் சிறைப்படுவதும்
என்று தன் அனுபவத்தில் நடந்த பல காட்சிகள், ரோஸின் மனதில் வந்து போயின.
சில்க்ரோடு வலைத்தளம். (கூகிள்ல தேட முயற்சி செய்யாதீங்க, வலைத்தளம் முடக்கப்பட்டுள்ளது) |
இவர்களுக்கு
உதவி செய்ய அமேஸான் போன்ற வலைத்தளம் ஒன்றை, போதை பொருட்கள் விற்க ஏன் வடிவமைக்க கூடாது
என்று யோசிக்க தொடங்கினான். என்ன ஒரு வித்தியாசம் என்றால், ரோஸின் அமேஸானில் கஞ்சா, கொக்கைன், ஹெராயின், ப்ரௌன் சுகர் எல்லாம் கிடைக்கும். இது சட்ட விரோதமானது என்று எப்பொழுதும் ரோஸ்க்கு தோன்றியதில்லை. தன் காதலி ஜூலியாவோடு வாழ்ந்து வந்த ரோஸ், தனக்கு தோன்றிய ஐடியாவை அவளிடம் பகிர்ந்து
கொண்டான். ஜூலியா தெய்வபக்தி கொண்டவள். ரோஸ் கூறியதை கேட்டு அதிர்ந்து போனாலும், ரோஸிற்கு
பக்கபலமாக இருப்பதாக கூறினாள். காலங்கள் ஓடின, ஆனால் வலைத்தளம் ஒரு சரியான வடிவம் பெறவில்லை.
ஏனென்றால், போலீஸ் வலையில் சிக்காமல், வலைத்தளத்தை நடத்துவது எப்படி? வலைத்தளத்தை ஆரம்பித்தாலும்,
அதை உலகிற்கு எவ்வாறு அறிமுகம் செய்வது? தன் வலைத்தளத்திற்கு மக்கள் வருவார்களா? அப்படியே
வந்தாலும், கையில் போதை பொருட்கள் எதுவும் இல்லாமல், வருபவர்க்கு, எதை விற்பனை செய்வது?
வாங்க விரும்பும் மக்கள், எப்படி பணம் செலுத்துவார்கள்? ஏன்னா, CASH ON DELIVERY ல கஞ்சா!... ஐயோ! வாய்ப்பே இல்லை. மேலும் வாங்கிய போதை பொருட்களை,
அவர்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி? என்று குழம்பி நின்றான்.
அமேஸான், ஈபே போன்று வெளிப்படையாக தன் வலைத்தளத்தை நடத்துவது சாத்தியமல்ல என்று புரிந்து கொண்டான்
(கேஷ் ஆன் டெலிவரில கேஷ் தம்மிடம் வருவதை, அரசாங்கம் என்றாவது ஒரு நாள் மோப்பம் பிடித்து விடும்
என்று யோசித்தான்). அவதார் படம் எடுக்க, தன்னோட ஸ்க்ரிப்டுக்கு தேவையான டெக்னாலஜி கிடைக்காம,
ஜேம்ஸ் கேம்ரூன் காத்திருந்த மாதிரி, ரோஸூம் காத்திருந்தான்.
இந்த
காலக்கட்டத்தில், ஆன்லைன்ல ஆர்தோவின் அறிமுகம் கிடைத்தது. ஆர்தோ, கம்ப்யூட்டர் அறிவு
பெற்றவன். ஆனால், ஜீனியஸ் இல்லை. இருந்தும் தன்னுடைய ப்ளானை ஆர்தோவிடம் சொல்ல, ஆர்தோக்கு தெரிந்த “TOR” என்னும்
ப்ரௌஸரை ரோஸிற்கு அறிமுகம் செய்தான். இது ஒரு DARKWEB BROWSER, நிலலுழக தாதாக்கள் மாதிரி.
போலீஸால் மட்டுமல்ல FBI நினைத்தாலும், இந்த ப்ரௌஸர்களை பயன்படுத்துபவர்களை கண்டுபிடிக்க
முடியாது என்று சுருக்கமாக ஆர்தோ கூறினான். (உங்களுக்கும் தெரிந்திருக்கும் முந்தைய இருள் வலை பதிவை வாசித்திருந்தீர்களானால்)
கேட்டதும்
குதூகலமடைந்த ரோஸ், தனது வேலையை மும்முரமாக தொடங்கினான். வலைத்தளத்தை உருவாக்க தேவையான,
FRONT-END, BACK-END, TOR, DATABASE என்று அனைத்தையும், ஆர்வ மிகுதியால், குறைந்த நாட்களில்
படித்து முடித்தான். அமேஸான், ஃபளிப்கார்ட், இபே போன்று, அனைத்தும் கிடைக்கும் ஒரு வலைத்தளத்தை தனிமனிதனாக உருவாக்குவது
அத்தனை எளிதல்ல. வலைத்தளத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் போதே, வலைத்தள விற்பனைக்கு தேவையான, போதை பொருட்கள்
கொள்முதல் பற்றி யோசிக்க தொடங்கினான். அந்த தொழிலில் தனக்கு யாரையும் அறிமுகம் இல்லாததால்,
தற்சமயத்திற்குத் தானே சில போதைச் செடிகளை வளர்க்க முடிவு செய்தான். ஊருக்கு வெளியே வீடு
ஒன்றை வாடகைக்கு எடுத்து, மேஜிக் மஷ்ரூம் என்னும் போதைச் செடியை, வளர்க்க தொடங்கினான்.
அண்மையில் ஆடை, ராஜாவிற்கு செக் போன்ற சில திரைப்படங்களில், இதைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
காலங்கள் ஓடின. வலைத்தளமும், மேஜிக் மஷ்ரூமும் வளர்ந்து தயார் நிலைக்கு வந்து நின்றது.
வலைத்தள திறப்பு விழா மட்டும் தான் பாக்கி.
டோர் பயன்படுத்தி வெப்சைட் தயார். ஆனால்,
விற்கும் பொருட்களுக்கு வாடிக்கையாளர்களிடம் பணத்தை எப்படி பெறுவது என தெரியாமல் இருந்த ரோஸிற்கு ஒரு மகிழ்ச்சி
தரும் செய்தி காத்திருந்தது. அதுதான், BITCOIN. (பிட்காயின் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இந்த லிங்கில் உள்ள பதிவை வாசிக்கவும்)
அடுத்த பதிவில்............. ரோஸின் வலைத்தளம் அமெரிக்க அரசாங்கத்திற்கு தெரியவர, ரோஸுக்கு வலை வீசியது அமெரிக்க புலனாய்வுத்துறை. இந்த கால இடைவெளியில் ரோஸுக்கு ஹாக்கர்ஸ் வழியாகவும் பிரச்சனை காத்திருந்தது.
Informative... Waiting for next article.
ReplyDelete