இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?
உலகின் பெருவாரியான மக்களால் பின்பற்றப்படும் மதம் கிறிஸ்தவம். அதன் புனித
நூலாக இருப்பது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு. இந்த மதத்தின் மையப் புள்ளியாக
பார்க்கப்படுவது இயேசுவின் அற்புதங்களும், உயிர்த்தெழுதலும். நம்முடைய பாவத்தை கழுவ ஏசு
சிலுவையில் அறையப்பட்டு, பல துன்பங்களை அனுபவித்து, பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்
என்று இருபது நூற்றாண்டுகளாக மக்களால் நம்பப்படுகிறது.
அதுவே ஈஸ்டர் என்னும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
முதலாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாக நம்பப்படும் இயேசு, ஒரு போதனை குருவாக
இருந்துள்ளார். அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டு பலர், சீடர்களாக மாறினர். அந்த காலகட்டத்தில்
ஆட்சி செய்த ரோமானியர்கள் மற்றும் யூதர்கள், ஏசுவின் இந்த வளர்ச்சியை விரும்பவில்லை.
தலைவனாக தலை தூக்கினால், அன்று முதல் இன்று வரை அரசாங்கம் விரும்புவதில்லை என்பதற்கு இயேசுவும் ஒரு சாட்சி. இதனால், ஆட்சி செய்தவர்கள், இயேசுவின் மீது இறை பழி சுமத்தி, மரண தண்டனையாக சிலுவையில் அறைந்தனர்.
இயேசு உயிர் துறந்தார். அடக்கமும் செய்யப்பட்டார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
இந்த சம்பவத்தை விளக்கும் புத்தகமாக நம்மிடையே இருப்பது திருவிவிலியம் புதிய ஏற்பாடு. இது இயேசுவின் வாழ்க்கை முறை,
அற்புதங்கள், மற்றும் உயிர்த்தெழுதலை தெளிவாக விளக்குகிறது. இந்த புத்தகத்தின் முக்கிய பகுதிகளாக பார்க்கப்படுவது நான்கு நற்செய்திகளான, மாற்கு, மத்தேயு, லூக்கா மற்றும் யோவான். அந்நற்செய்திகளில்
அதன் ஆசிரியர்கள் தனித்தனியாக, இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை அவர்களது சொந்த நடையில்
எழுதியுள்ளனர். இந்த பதிவில் அவர்களை வரலாற்று ஆசிரியர்களாகவும், இயேசுவை நற்செய்திகளின்
கதாநாயகனாகவும் கொள்ளலாம். மேலும், நற்செய்திகள் முதன் முதலில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது
என்று கூறுகின்றனர்.
விருமாண்டி படத்தில் வருவது போல், இயேசுவின் வரலாற்றை வெவ்வேறு கோணத்தில் சொல்லியிருந்தாலும்,
இவர்கள் பதிவு செய்துள்ள செய்திகளில் வேறுபாடுகள் உள்ளன. நான்கு நற்செய்திகளில், பழமையானது
மாற்கு, இளமையானது யோவான். நான்கு நற்செய்திகளில், இந்த இரண்டு மட்டும்
தான், தனித்துவமாக பார்க்கப்படுகிறது. மீதம் உள்ள மத்தேயு மற்றும் லூக்காவின் பல பகுதிகள்,
மார்க்கின் பிரதியாக இருப்பதற்கு சான்றுகள் உள்ளன. எனவே பல வரலாற்றாசிரியர்கள், மாற்கு
மற்றும் யோவானின் நற்செய்திகளை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். மேலும், நற்செய்திகளின்
பெயர்களுக்கும் அதன் ஆசிரியர்களின் பெயர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும்
பதிவிடுகின்றனர்.
எளிமையான மனிதராக காட்டப்படும் இயேசு, தன் கைப்பட எழுதிய குறிப்புகள் போதனைகள்
என்று எதுவும் கிடைக்கவில்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை. மேலும் இயேசுவின் சீடர்கள்
அவரை பற்றி எழுதிய எந்த குறிப்புகளும் கிடைக்கவில்லை.
இயேசுவை பற்றிய செய்திகள் அனைத்தையும் நற்செய்திகள் மூலமாகத் தான் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்த நற்செய்திகளின் நம்பகத்தன்மை மிக முக்கியமானது. இதன் ஆசிரியர்கள் எவ்வாறு எழுதினர். இதை எழுதுவதற்கு சேகரிக்கப்பட்ட
தரவுகள் பாரபட்சமின்றி இருந்திருக்குமா? ஏனென்றால், இன்று நடந்த ஒரு நிகழ்வை 60 வருடங்கள் கழித்து ஆவணப்படுத்த
நினைத்தால், கண்டிப்பாக அதில் பல திரிபுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.
நற்செய்திகளை எழுதியவர்கள் இயேசுவை சந்தித்தற்கான ஆதாரங்கள் இல்லை என்பதால், அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களிடம், இயேசுவை பற்றிய செய்திகள் சேகரிக்கப்பட்டு
எழுதப்பட்டதா??? இயேசுவின் இறப்பிற்கு பின், 35 முதல் 65 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட
இந்த நற்செய்திகளின் தகவல்கள் திரித்து தரப்படவில்லை என்பதற்கான சாத்தியங்கள் என்ன???
மேலும், இந்த நற்செய்திகளை எழுதிய நான்கு பேரும், நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் அல்ல.
இயேசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பற்றிய செய்தியை பரப்ப நினைத்தவர்கள்.
எனவே, இயேசுவின் அற்புதங்களை பெரிது படுத்தி சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதை எப்படி
நம்புவது?
இயேசுவைப் பற்றிய செய்திகளை, அனைத்து மக்களிடத்திலும் (அதாவது கிறிஸ்துவர்கள்
அல்லாத) சேகரித்தார்களா என்பதும் கேள்விக்குறியே! ஏனென்றால், இயேசுவை விரும்பும் நபரிடம்
அவரைப் பற்றி கேட்டால், உயர்வாகவே சொல்ல வாய்ப்பிருக்கிறது. இப்படி சேகரிக்கப்பட்டிருந்தால்,
அந்த தகவல்கள் பாரபட்சமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
எனவே இதை ஒரு நடுநிலை தகவலாக ஏற்றுக் கொள்ள இயலாது. உதாரணத்திற்கு, திமுக தொண்டனிடம்
ஸ்டாலின் நல்ல தலைவரா? என்று கேட்டால், சந்தேகத்திற்கு
இடமின்றி ஆம் என்ற பதில் வரும். அதே கேள்வியை, ஒரு அதிமுக தொண்டனிடம் கேட்டிருந்தால்?
உயிர்த்தெழுதல் என்பது சாதாரண நிகழ்வு அல்ல. இதை நம்ப வேண்டும் என்றால்,
அசாதாரண ஆதாரங்கள் தேவை. அறிவியல் ரீதியாக பார்ப்போமேயானால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுதல்
என்பது, ஒரு லட்சம் கோடி செல்கள், மீண்டும் இயக்க நிலைக்கு வருவதை குறிக்கும். மேலும்,
உறுப்புகளுக்கு இடையில் நடக்கும் சிக்கலான செயல்பாடுகளின் தொடக்கத்தையும் குறிக்கும். எனவே,
நாம் இதை அறிவியல் ரீதியாக பார்க்கப்போவதில்லை.
நற்செய்திகளில் இருக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்தே பார்க்கலாம். அடக்கம்
செய்யப்பட்டு மூன்றாம் நாள் அவரது உடல் காணாமல் போனதையும், நாட்கள் சில கழித்து அவரை
உயிருடன் பார்த்ததாக சொல்லும் மக்களின் சாட்சிகளையும், போதுமான ஆதாரமாக கொள்ளலாமா?
இறப்பு, மறுபிறப்பு மட்டுமல்ல, கிறித்துவர் அல்லாதவர்களிடம் இருந்து ஒரு நூற்றாண்டிற்கு
இயேசு பிறப்பு பற்றிய பதிவும் இல்லை. திட்டமிட்டு மறைத்திருப்பார்களோ? அந்த சம காலத்தில்
வாழ்ந்த சில அறிஞர்கள் FLAVIUS JOSEPHUS(யூத வரலாற்று ஆசிரியர்) இரண்டு முறை இயேசுவை
குறிப்பிடுகிறார். PLINY மற்றும் TACITUS (ரோம வரலாற்று ஆசிரியர்கள்) இயேசுவை குறிப்பிட்டாலும்
கிறிஸ்துவத்தை மூட நம்பிக்கையென்று விலக்கினர். கடைசியாக நம்மிடம் ஆதாரமாக இருப்பது
பாலின் (PAUL) கடிதங்கள், மற்றும் நற்செய்திகள் மட்டுமே!!!
சிலுவையில் அறைதல் ஒரு கொடூரமான தண்டனை. இயேசுவிற்கு
வழங்கியது போல், பலருக்கும் வழங்கப்பட்டிருந்தது. தண்டனை பெற்ற பல ஆயிரம் நபர்கள் இறந்த
பின்னர், சிலுவையிலேயே விடப்பட்டனர். அப்படியென்றால், இயேசுவின் உடலை அடக்கம் செய்ய
சிறப்பு அனுமதி கிடைத்தது எப்படி? அப்போது ஆட்சி செய்த பிளேட் (PILATE) என்னும் அரசன்
சிறப்பு அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே நாமும் நம்பலாம். அடக்கம் செய்த கல்லறை
வட்டக்கல்லால் மூடப்பட்டது என்று நற்செய்திகளில் கூறப்படுகிறது. ஆனால், இயேசு வாழ்ந்த
காலகட்டங்களில், கல்லறைகள் சதுர கற்களால் மூடப்பட்டதற்கான
ஆதாரங்கள் உள்ளன. அப்படி என்றால், வட்டக்கல் எப்படி வந்தது? நற்செய்திகளின் ஆசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டது தான் இந்த வட்டக்கல். இதனை இயேசுவின் காலத்திற்கு தகுந்தாற்போல்
மாற்றி எழுதியுள்ளனரா?
மூன்றாம் நாள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உடல் காணாமல் போனதை மூன்று
பெண்கள் பார்த்ததாக ஒரு நற்செய்தியும், இரண்டு பெண்கள் என்று மற்றொரு நற்செய்தியும்,
கருத்துகளில் மாறுபடுகிறது. அதுமட்டுமல்லாமல்,
கல்லறைக்கு பாதுகாவலர்கள் இருந்ததாக மத்தேயு கூறுகிறது, ஆனால், மற்ற மூன்று நற்செய்திகளும்
அதைப் பற்றி குறிப்பிடவில்லை.
ஜெருசலேம் மற்றும் கலிலியில், அற்புதங்கள் பல செய்த இயேசுவை பற்றிய குறிப்புகள்
எதுவும் இல்லை. அதை ஆண்ட ரோம அரசர்கள், எதிரியாக கருதிய இயேசுவைப் பற்றி எந்த குறிப்பும்
எழுதாமல் விட்டது ஆச்சரியமாக உள்ளது. இயேசுவின் மீது யூதர்களுக்கும், ரோமானியர்களுக்கும்
அத்தனை விருப்பம் இருந்ததாக தெரியவில்லை. அப்படி இருக்க அவர் இறந்து, பின்னர் உயிர்த்தெழுந்தார்
என்னும் செய்தி அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்காது. அதிருப்தி அடைந்திருப்பர்.
ரூபிக்கான் ஆற்றை கடந்த சீசரின் நிகழ்வை பதிவு செய்த இவர்கள், இயேசுவின் உயிர்த்தெழுதலை பதிவு செய்யாமல் விட்டது ஏனோ?
மக்களிடத்தில் சேகரிக்கப்பட்ட செய்திகளை கொண்டு நற்செய்திகள் தொகுக்கப்பட்டதாக
கருதுவோமேயானால், அந்தக் கால அவர்களின் வாழ்க்கை முறையை, சமய நம்பிக்கையை, மற்றும்
மூட நம்பிக்கையை கருத்தில் கொள்வது முக்கியமானது. ஏனென்றால், அன்றைய காலத்தில், உபவாச
நேரத்தில், நாக்கில் ஊறும் எச்சிலை காது மற்றும் கண் நோய்களை குணப்படுத்தவும், காட்டு
பன்றிகளின் சிறுநீரை மருந்தாகவும், கெட்ட வார்த்தைகளில் திட்டினால் பேய்கள் ஓடியதாகவும்
பல மூட நம்பிக்கைகள், மற்றும் நியாயப்படுத்த முடியாத நம்பிக்கைகள் மக்கள் மத்தியில்
இருந்துள்ளது. இத்தகைய மக்கள் கூறும் இயேசு பற்றிய தகவலில், மூடநம்பிக்கைகள் இடம்பெற்றிருக்காது என நம்புவது ஆச்சரியமான ஒன்றே.
தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது, இரண்டு ரொட்டி துண்டுகளை ஆயிரம் பேருக்கு
பங்கிட்டது, குஷ்டரோகத்தை குணப்படுத்தியது, முடக்குவாதத்தை சரி செய்தது, பார்வையற்றோரை
பார்க்கச் செய்தது போன்ற அதிசயங்களை இயேசு தான் முதன் முதலில் செய்தாரா? அல்லது அவருக்கு
முன்னர் இத்தகைய அதிசயங்கள் நடந்து உள்ளதா?
APOLLONIUS, இயேசுவின் சம காலத்தை சேர்ந்தவர், கண் தெரியாதவர்களுக்கு பார்வை
அளித்ததிலிருந்து, முடக்குவாதம் சரி செய்யப்பட்டது வரை, இயேசு செய்த அதிசயங்களை இவரும்
நிகழ்த்தியுள்ளார். இவர் மட்டுமல்ல, இவருடன் சேர்ந்து ரோம அரசரான, VESPASIAN ம் இத்தகைய
அதிசயங்களை செய்துள்ளார்.
இயேசு, LAZARUS யை உயிர்த்தெழ செய்தது போல. ELIJAH என்னும் ஒருவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஓர்
விதவையின் மகனை உயிர்தெழ செய்தார். இதுபோல, APOLLONIUS, EMPEDOCLES & ELISHA போன்றவர்களும்,
கடவுளாக நம்பப்பட்ட AESCLEPIUS மற்றும் ISIS யும் பலரை உயிர்த்தெழ செய்துள்ளனர்.
ELIJAH நூறு நபர்களுக்கு சில ரொட்டி
துண்டுகளை பகிர்ந்தளித்ததோடு, அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரம் ஒன்றையும் ஒரு பெண்மணிக்கு
கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை மட்டும் ஆதாரமாக எப்படி ஏற்றுக்கொள்வது? கண்டிப்பாக
ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இயேசுவின் அதிசயங்களையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
ELIJAH செய்த அதிசயங்களையும் ஒப்பிடுகையில்,
மிக அதிக அளவில் வேறுபட்டதாக தெரியவில்லை. பின்னர், இயேசுவை மட்டும் அதிசய மனிதராக
பார்ப்பது ஏன்?
இதனால் மேலே பார்த்த மூட நம்பிக்கைகளும், உயிர்த்தெழுதல், நோய்களை குணமாக்குதல்
போன்ற அதிசயங்களும் மக்கள் மத்தியில் வழக்கத்திற்கு மாறானதாக கருதப்படவில்லை. இதனால்,
அவர்கள் தெய்வமாக பார்த்த இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தி அவர்களை நம்ப வைத்திருக்கும்.
இத்தகைய மக்களிடம் சேகரிக்கப்பட்ட இயேசுவின்
உயிர்த்தெழுதல் பற்றிய தகவல்கள், நம்பத்தகுந்தவையா?
மேலும் 15 ஆம் நூற்றாண்டு வரை கைகளால் பிரதி எடுக்கப்பட்ட பழைய ஏற்பாட்டில்
பல தவறுகள் நடந்திருக்க வாய்ப்புக்கள் இருக்கிறது. பார்த்து எழுதும்போது வரும் மனித
பிழைகள் இயல்பானதே. 1500 ஆண்டுகளில், இரண்டு லட்சத்தில் இருந்து நான்கு லட்சம் பிழைகள் நடந்திருக்கலாம் என்று கணிக்கின்றனர். இதனால், முதலில் எழுதப்பட்ட நற்செய்திகள், மாற்றமில்லாமல்
இன்றளவும் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவே.
கிரேக்கத்தில் இருந்து லத்தீன் மொழியில் 382 CE ஆம் ஆண்டில் நற்செய்திகள் மொழிபெயர்க்கப்பட்டது.
பின்னர், 1200 வருடங்கள் கழித்து முதல் கிரேக்க அச்சகப் பதிப்பு வெளியானது. இதில்,
லத்தீன் பதிப்பில் சொல்லப்பட்ட "திரித்துவம்" என்னும் கருத்து, கிரேக்க பதிப்பில் இருந்ததற்கான
குறிப்பேதுமில்லை. மேலும், மாற்கு நற்செய்தியின்
கிரேக்க கையெழுத்து பிரதியில், உயிர்த்தெழுதலுக்கு பின் இயேசுவின் தோன்றுதல் பற்றிய செய்திகள்
எதுவும் இல்லை. இதை வைத்து பார்த்தால், முதல் கையெழுத்து பிரதியில் இயேசு உயிர்த்தெழுதல்
பற்றிய செய்தி இல்லாமல் கூட இருந்திருக்கலாம். ஏன் இதை சொல்கிறேன் என்றால், இயேசுவால்
ஈர்க்கப்பட்ட ஒரு பக்தன் உயிர்த்தெழுதலை, கையெழுத்துப் பிரதியில் எழுதும்போது சேர்த்திருக்கலாம். இதே போல், மகாபாரதத்தில் “துகிலுரித்தல்” கூட பின்னர் சேர்க்கப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள்
கூறுகின்றனர். கூடுதலாக, லசாரசை உயிர்த்தெழ வைத்தது மற்றும் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய
செய்திகள் யோவானில் மட்டும் இருக்கிறது. மற்ற நற்செய்திகளில் குறிப்பிடவில்லை. யோவான் மட்டுமே இயேசுவை தெய்வீகமாக பார்த்தவர்
என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மனித குல வரலாற்றில், அறிவியல் கொண்டு நிரூபனம் ஆகாத பல நிகழ்ச்சிகள்,
நம்பிக்கையின் அடிப்படையில் இன்றளவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. உண்மையில் நடந்ததாக எழுதப்படும் ஒரு விஷயம் உண்மையாகவே
இருப்பினும், அது ஆண்டுகள் கடந்து, பல பதிப்புகள் கடந்து வரும்போது, பிழையின்றியோ, உண்மைத்துவம் மாறாமலோ வருவதற்கான சாத்தியங்கள் குறைவு.
What is your opinion??
ReplyDeleteanna, then what about Ramar, Shiva, and Allah...?
ReplyDeleteAlso, there is no scientific proof for them... right.
நம்பிக்கை ஒரு மிகப்பெரிய ஆயுதம். ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விஷயத்தை நம்புவது உண்டு. அந்த நம்பிக்கை அவனை வளர்ச்சி பாதையில் இட்டு செல்லும் போது, அதற்கான ஆதாரங்களை அவன் ஒருபோதும் தேடுவதில்லை. தேட முற்படுபவனையும் அவன் நம்புவதில்லை.
Delete