தொற்று நோய்: விவசாய புரட்சியின் சாபமா? - 1918 Pandemic Disease Influenza
மனித வரலாற்றின் தொடக்கத்தில், மக்கள் சிறு சிறு குழுக்களாக நாடோடிகளாக
வாழ்ந்து வந்தனர். தங்களின் உணவிற்காக காடுகளில் மிருகங்களை வேட்டையாடினர். கிடைக்கும்
இறைச்சியை உண்டு முடித்த பின்னர், அடுத்த பொழுது உணவுக்கு மீண்டும் பயணப்பட்டனர். அவர்கள்
ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் தங்கியதில்லை. இதனால், சில சமயங்களில் கூட்டங்களிடையே நோய்கள் தொற்றினாலும், குழுவில் ஒருவர் அல்லது அனைவரையுமே கொன்று இருந்தாலும் கூட, வேறு குழுக்களுக்கு
பரவாமல் இருந்தது. மனிதர்கள் உணவை தேடி காடுகளில் தொலை
தூரம் செல்ல நேர்ந்ததால், செடி, கொடி மற்றும் கனி வகைகளை உண்ண தொடங்கினர்.
சில காலம் கடந்த பின்னர், உண்ண தகுந்த தாவரங்கள் எவை எவை என அனுபவத்தில்
அறிந்து, அரிசி, கோதுமை, தினை போன்ற தானியங்களை விவசாயம் செய்ய தொடங்கினர். இதனால், மக்களுக்கு உணவு தடையின்றி கிடைக்க தொடங்கியது. உணவு தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல்,
உற்பத்தி செய்த உணவுகளை சேமிக்கவும் தொடங்கினர். விவசாய புரட்சி, இதர துறைகள் உருவாக
காரணமாகவும் அமைந்தது. ஒரு பகுதி மக்கள், விவசாயத்திலிருந்து விலகி மருத்துவம், அறிவியல்,
பொறியியல், கலை என்று படிக்க தொடங்கினர். இப்படி வளர்ந்த பல துறைகள், மழை காலங்களை
கணித்தது, எந்த காலத்தில் பயிரிடலாம் என்று அறிவுரை வழங்கியது. எனவே, பல துறைகள் வளர்ந்ததில்
விவசாயத்திற்கும் பெரும் பங்கு உண்டு.
காடுகள், மலைகள் என்று இருந்த மக்கள், தண்ணீர் இருக்கும் இடங்களான ஆற்றின்
கரைகள் நோக்கி நகரத்தொடங்கினர். உலக வரலாற்றில் தோன்றிய முதன்மை நகரங்கள், சிந்து,
மஞ்சள், நைல், வைகை, டைக்ரிஸ் ஆகிய நதிகளின் கரைகளில் அமைந்திருப்பதே இதற்கு சான்று.
இவ்வாறு நகர்ந்த மக்கள், தங்களின் விவசாயத்திற்கு சில விலங்கினங்களை பழக்க தொடங்கினர்.
மேலும், நாடோடிகளாக திரிந்த மக்கள், ஒரே இடத்தில் தங்களின் விலங்கினத்தோடு (ஆடு, மாடு,
குதிரை, நாய், கோழி) வாழத்தொடங்கினர். இந்த காலக்கட்டத்தில் தான், மிருகங்களுக்கும்
மனிதர்களுக்கும் இடையே நோய்கள் தொற்ற ஆரம்பித்தது. சாதாரண நோயான ஜலதோஷம் குதிரையிடம்
இருந்தும், காசநோய் கால்நடைகளிடமிருந்தும், பிளேக் எலிகளிடமிருந்தும், தட்டம்மை நாய்களிடமிருந்தும், வந்ததாகக் கூறுகிறார்கள். இதில் இன்றைய கொரோனாவும் அடங்கும். கூடி வாழ ஆரம்பித்த காலத்தில் தான் இந்த நோய்கள் மனித குலத்திற்கு
அறிமுகம் ஆகியுள்ளது.
இப்படி, வரலாற்றில் கோடிக்கணக்கில் காவு வாங்கிய “இன்ஃப்ளூவன்ஸா” என்னும் தொற்று நோயை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். “Influenza” இத்தாலிய மொழியின்
“Influenza coeli”ல் இருந்து வந்தது. அதற்கு “influence of the heavens”, “வான தேவதைகளின்
செல்வாக்கு” என்று பொருளாம் [REFERENCE]. இதிலிருந்துதான், சளிகாய்ச்சலுக்கான “ஃப்ளூ” “FLU” என்ற
வார்த்தையை ஆங்கிலேயர்கள் எடுத்ததாக கூறுகிறார்கள் [REFERENCE].
அமெரிக்காவின் கன்ஸாஸ் மாகாணம், ஹஸ்கல் கௌன்டி என்னும் ஊரிலிருந்து இந்த
நோய் தோன்றியதாக நம்பப்படுகிறது. இதை ஸ்பானிஷ் ஃப்ளு என்றும் அழைக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அதனால், நோயின் தன்மை, பரவல், பாதிப்பு என்று பல விஷயங்களை விலாவாரியாக செய்தித்தாள்களில் வெளியிட்டு
மக்களிடம் இந்த நோயை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கியது. இதனால் தானோ என்னவோ, இந்த
நோயை ஸ்பானிஷ் ஃப்ளூ என்று அழைக்கிறார்கள்.
பெப்ரவரி 1918 முதலாம் உலகப்போரில் ஜெர்மனியை
எதிர்த்து பல நாடுகள் ஈடுபட்டிருந்தன. இந்த நாடுகள், தங்கள் படை வீரர்களை ஆயிரக்கணக்கில் முகாம்களில் தங்க வைத்திருந்தனர்.
அப்படி, FORT RILEY என்னும் இடத்தில், ராணுவ
வீரர்கள் தங்கியிருந்த ஒரு முகாமின் பெயர் CAMP FUNSTON. இந்த முகாமிலிருந்து ஒரு வீரர்,
சொந்த ஊரான HUSKELL COUNTY க்கு விடுப்பில் சென்றார். அவர் செல்வதற்கு முன்பே இன்ஃப்ளூவன்ஸா
அவர் கிராமத்தை தாக்கியிருந்தது. இதை அறியாத வீரர், தனது விடுப்பை முடித்து முகாமிற்கு
திரும்பினார், தனியாக அல்ல, இன்ஃப்ளூவன்ஸாவோடு. இவரைப்போல், இன்னும் இரண்டு வீரர்களும்
விடுப்பை முடித்து இன்ஃப்ளூவன்ஸாவோடு முகாமிற்கு பெப்ரவரி 28ல் திரும்பியிருந்தனர்.
11 மார்ச்,1918, வீரர்களின் சமையல்காரர் ALBERT GITCHEL, டாக்டரிடம் சென்று
தனக்கு காய்ச்சல், தொண்டை கரகரப்பு, தலைவலி இருப்பதாக சொல்கிறார். அவர் முறையிட்டு
சில மணி நேரங்களில், வீரர்கள் பலர், தங்களுக்கும் அதே பாதிப்பு இருப்பதாக கூறினர். என்ன நடக்கிறது
என்று யோசிக்க கூட நேரம் தராமல், அடுத்த ஒரு வாரத்தில் ஐநூறு வீரர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அது மட்டுமல்லாமல், 48 வீரர்கள் இறந்திருந்தனர். அது ஒரு தொற்று நோயாக இருந்ததால்,
முகாமில் இருந்த வீர்ரகள் மத்தியில் பீதி கிளம்பியிருந்தது. சாதாரண காய்ச்சல், தலைவலி
என்று வரும் வீரர்கள் இறந்து போனதால், இந்த
இறப்பை பொது சுகாதார அதிகாரிகளுக்கு எவ்வாறு தெரிவிப்பது என்று மருத்துவர்கள் குழம்பியிருந்தனர்.
மேலும், குறுகிய இடத்தில் பல ஆயிரம் வீர்கள், ஏறத்தாழ 56,000 வீரர்கள், கூடியிருந்ததால்
இந்த நோயின் பரவல் வேகமாக இருந்தது. போரில் இறந்த வீரர்களை விட முகாம்களில், சுகாதாரம்
அற்ற சூழலில் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். சிறைச்சாலையில், ராணுவ முகாம்களில்
வரும் நோய்கள் வெளியே பரவாது என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இந்த நோய் குடிமக்களிடமும்
பரவியது.
எப்பொழுதும் போல, மருத்துவர்கள் இது ஒரு சாதாரண காய்ச்சல் என்றே நினைத்தனர்.
ஆனால், பாதிக்கப்பட்ட நோயாளிகள் 18லிருந்து 30 வயதிற்குள் இருந்ததால் மருத்துவர்கள்
சந்தேகம் அடைந்தனர். ஏனென்றால், அதுவரை காய்ச்சலுக்கு பெரியவர்கள், குழந்தைகள் மட்டுமே இறந்து பார்த்திருந்த மருத்துவர்களுக்கு இளைஞர்களின் இறப்பு புதியதாக இருந்தது. எதனால், இந்த
நோய் வருகிறது என்று ஆராய்ந்த பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அதில் சிலர், கிராமபுறங்களில்
இருக்கும் பறவை, பன்றி,குதிரை பண்ணைகளிலிருந்து வந்திருக்கலாம் என்று கணித்தனர்.
ஒருபுறம் நோய். மறு புறம் போர்.
ஜெர்மனியை எதிர்த்து போரிட அமெரிக்க வீரர்கள் பீரங்கிகள், துப்பாக்கிகள்,
குண்டுகள் மற்றும் தங்களுக்கே அறியாமல் பயங்கர ஆயுதமான இன்ஃப்ளுவென்ஸாவையும் எடுத்துச்
சென்றனர். இதன் விளைவு பயணத்தின் போதே பலர் பாதிக்கப்பட்டனர், சிலர் இறந்தனர். ஐரோப்பவை
சென்றடைந்து ஒரே வாரத்தில், ஜெர்மனியை ஆக்கிரமித்தது அமெரிக்கப் படை அல்ல, இன்ஃப்ளுவென்ஸா.
இரு தரப்பு வீரர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். முடிவாக போரில், இன்ஃப்ளுவென்ஸா
வென்றது. ஐரோப்பவை மட்டுமல்ல போரில் பங்கு பெற்ற அப்பிரிக்க மற்றும் ஆசிய வீரர்களால்
இந்த நோய் இரு கண்டங்களிலும் பரவியது.
ஒரு ரவுண்டு வேட்டையை முடித்த கையோடு, ஆகஸ்டு மாதத்தில் இன்ஃப்ளுவென்ஸா அமெரிக்காவில் மீண்டும் நுழைந்தது. கடந்த முறையை விட இந்த
முறை நோயின் வீரியம் அதிகரித்திருந்தது. கொத்து கொத்தாக மக்கள் இறந்தனர். சுடுகாட்டுத்
தொழிலை தவிர பல தொழில்கள் முடங்கின. பல குழந்தைகள் அனாதையாகி நின்றன. பள்ளிக்கூடங்கள்,
சமுதாய கூடங்கள் அனைத்தும் மருத்துவமனையாக மாற்றப்பட்டன.
மருத்துவர்களும், பொது சுகாதார
அதிகாரிகளும் நோயை தடுக்க கடுமையாக பாடுபட்டனர். மருந்துகள் இல்லாததாலும், நோயின் காரணிகள்
தெரியாததாலும், மருத்துவர்கள் செய்வதறியாமல் நின்றனர். ஆனால், பொது சுகாதார அதிகாரிகளோ மக்களை
சுத்தமாக இருக்க அறிவுறை கூறினர், உணவிற்கு முன்னர் கை கழுவ வற்புறுத்தினர், வெயிலில்
தங்கள் உடம்பை வெளிப்படுத்த கூறினர். தெரிந்தோ தெரியாமலோ இவர்களின் செயல்பாடுகள் நோயின் பரவலை குறைத்தது. அதை தொடர்ந்து வந்த கோடைகாலம்
முற்றிலுமாக நோயை விரட்டியது. இருபத்தைந்து ஆணடுகள் கடந்து, 1944ல் இந்த நோய்க்கு தடுப்புமருந்தை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
OMG ! 1918 - 1944 ?.
ReplyDelete