மனித வரலாற்றின் தொடக்கத்தில், மக்கள் சிறு சிறு குழுக்களாக நாடோடிகளாக வாழ்ந்து வந்தனர். தங்களின் உணவிற்காக காடுகளில் மிருகங்களை வேட்டையாடினர். கிடைக்கும் இறைச்சியை உண்டு முடித்த பின்னர், அடுத்த பொழுது உணவுக்கு மீண்டும் பயணப்பட்டனர். அவர்கள் ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் தங்கியதில்லை. இதனால், சில சமயங்களில் கூட்டங்களிடையே நோய்கள் தொற்றினாலும், குழுவில் ஒருவர் அல்லது அனைவரையுமே கொன்று இருந்தாலும் கூட, வேறு குழுக்களுக்கு பரவாமல் இருந்தது. மனிதர்கள் உணவை தேடி காடுகளில் தொலை தூரம் செல்ல நேர்ந்ததால், செடி, கொடி மற்றும் கனி வகைகளை உண்ண தொடங்கினர். சில காலம் கடந்த பின்னர், உண்ண தகுந்த தாவரங்கள் எவை எவை என அனுபவத்தில் அறிந்து, அரிசி, கோதுமை, தினை போன்ற தானியங்களை விவசாயம் செய்ய தொடங்கினர். இதனால், மக்களுக்கு உணவு தடையின்றி கிடைக்க தொடங்கியது. உணவு தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல், உற்பத்தி செய்த உணவுகளை சேமிக்கவும் தொடங்கினர். விவசாய புரட்சி, இதர துறைகள் உருவாக காரணமாகவும் அமைந்தது. ஒரு பகுதி மக்கள், விவசாயத்திலிருந்து விலகி மருத்துவம், அறிவியல், பொறியியல், கலை என்று படிக்க தொடங்கினர்