டீக்கடை அரசியல் - எலக்டோரல் பாண்ட் (What is Electoral Bond)
யாராவது கேள்விப்பட்டு இருக்கீங்களா???
கேள்விப்படாதவங்க, அப்படின்னா என்ன?
எதுக்காக உபயோகப்படுத்துறாங்கனு அத பத்தின முழு விவரத்தையும்
இந்த பகுதில வாசிச்சு தெரிஞ்சீங்கன்னா வியந்து போயிடுவீங்க ! !!! பலவிதமா சட்ட
திருத்தங்கள் கொண்டு வந்து சர்ச்சைகள் கிளம்பிட்டு இருக்குற சூழ்நிலைல, சத்தமே இல்லாம ஒரு சட்ட திருத்தம் நடந்து, சிறப்பாக
செயல்படுதுனு தெரியுறப்ப சற்று திகைப்பா தான இருக்கும்!!!! மக்களுக்கு இருக்குற பிரச்சினையில, எதுக்கு
சொல்லி அவங்க மனச கஷ்டப்படுத்திகிட்டுனு நல்ல எண்ணத்துல, இருக்குற
அரசு சொல்லாம விட்டுருச்சா???? இல்ல, நாளபின்ன நமக்கும் உபயோகமாக இருக்க போறத, இன்னைக்கு
எதிர்ப்பு தெரிவிச்சு, வீணா கைய சுட்டுக்குவானேன்னு
எதிர்க்கட்சியும் பெருசு பண்ணாம அமுக்கமா இருந்துட்டானு ஒன்னும் புரியல ? ???
ஏன், என்னனு கேக்காட்டியும், On
The Go ல, நம்ம நாட்டு அரசியல்ல இதெல்லாம்
இருக்குனு தெரிஞ்சு வச்சுகிறதுல தப்பொன்னும் இல்லயே ! !!! அதுக்காவாவது
தெரிஞ்சுக்கோங்க ! !!!! புரிஞ்சுக்கோங்க ! !!!
உலகத்தின் பெரிய ஜனநாயகமாக இருக்கும் இந்தியாவில், பணம் இல்லாமல் அரசியலில்
ஜெயிப்பது கடினம் என்பது வருத்தத்திற்குரியது. பண பலத்தை அதிகரிக்க எல்லா காலங்களிலும்
அரசியல் கட்சிகள் தவறியதில்லை. கடந்த காலங்களில் பாஜக, வெற்றி பெற பல தந்திரங்களை பயன்படுத்தினாலும்,
பாஜகவின் முக்கிய வியூகமாக நான் பார்ப்பது அவர்களின் பண பலமே. விளம்பரங்கள், பொது கூட்டங்கள்,
மாநாடுகள் என்று பல விதத்தில் பணத்தின் தேவைகள் இருந்தாலும், மிக முக்கியமானது தேர்தல்
காலங்களில் ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணம். ஓட்டின் விலை தெற்கு மாநிலங்களை ஒப்பிட்டால்
வடக்கு மாநிலங்களில் குறைவுதான்.
அரசியல் கட்சிகளுக்கு தொழிலதிபர்களும், பணக்காரர்களும் பிரதிபலன் எதிர்பார்த்து
நன்கொடைகள் அளிப்பது வழக்கம். பெரும்பாலும், தங்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக
மாற்றும் முயற்சியில் இத்தகைய நன்கொடைகள் அளிக்கப்படுகின்றன. இந்த நோக்கத்தை அறிந்த
அரசு (கடந்த முறை ஆட்சியில் இருந்த பாஜக) எலக்டோரல் பாண்ட் என்னும் ஒன்றை 2018ன் தொடக்கத்தில் [Ref] அறிமுகம் செய்தது. எலக்டோரல் பாண்ட் ஒரு பதியா பத்திரம், எளிதாக சொல்வதென்றால் ரூபாய்
நோட்டு மாதிரி. இந்த பத்திரத்தை வங்கியில் கொடுத்தால் அதற்கு இணையான பணத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இதனால், நன்கொடையாக கொடுக்கப்படும் பணம், வங்கியின் வழியாக அரசியல் கட்சிகளிடம் சேரும்.
இதன்மூலம், பண பரிவர்த்தணை மற்றும் பணத்தின் மூலத்தை (source) கண்காணிப்பது அரசாங்கத்திற்கு
எளிதாக இருக்கும் என்று பாஜக அரசு கூறியது.
இந்திய குடிமக்கள் அல்லது இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் இந்த பத்திரத்தை
வங்கியில் வாங்கலாம். ஆயிரத்தில் தொடங்கி ஒரு கோடி வரை பத்திரம் கிடைக்கிறது [Ref]. இந்த
பத்திரம் SBIன் சில குறிப்பிட்ட கிளைகளில், ஒவ்வொரு காலாண்டு தொடக்கத்தின் (JAN,
APR, JUL, OCT) முதல் பத்து நாட்களில் மட்டுமே கிடைக்கும். பண மோசடிகளுக்கு இந்த பத்திரங்கள்
பயன்படுத்தப் படலாம் என்பதால், எல்லா நாட்களிலும் கிடைப்பதில்லை. எலெக்டோரல் பாண்டு
பதினைந்து நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். பதினைந்து நாட்களில் பத்திரத்தை வங்கியில்
கொடுத்து பணத்தை பெற தவறினால், அந்த நிதி தேசிய நிவாரண நிதியில் சேர்ந்துவிடும் [Ref].
உதாரணத்திற்கு, நீங்கள் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு கோடி நன்கொடையாக
கொடுக்க விரும்பினால், அதற்கு இணையான எலெக்டோரல் பாண்டை வங்கியில் வாங்கி, அதையே நன்கொடையாக
கொடுக்கலாம். முக்கியமாக பத்திரத்தில், உங்கள் சம்பந்தமான எந்த விவரங்களும் இருக்காது.
நன்கொடை பெறும் அரசியல் கட்சிகளுக்கும் உங்களை பற்றிய விவரங்கள் தெரியாது.
“உங்க மைண்ட் வாயிஸ் எனக்கு கேட்குது.. சும்மா கட்சினு ஒன்ன ஆரம்பிச்சு,
கட்சிக்கு நன்கொடையிங்குற பேர்ல எலெக்டோரல் பாண்ட் வாங்கி செட்டில் ஆயிடலாமே”. அங்கதான்
செக்!!! பத்திரத்தை பெற விரும்பும் அரசியல் கட்சிகள், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற
அல்லது நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சதவீத வாக்குகளாவது
பெற்றிருக்க வேண்டும்.
2017க்கு முன்பு இருந்த சட்டத்தின்படி, 20000க்கு குறைவாக வரும் நன்கொடையை
அரசியல் கட்சிகள் எந்த ஆதாரமும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம். பல அரசியல் கட்சிகள்
இந்த சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதனால், நன்கொடை பணத்தின் மூலத்தை
அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை சரி செய்வதற்கு, 2000க்கு மேல் நன் கொடையாக
வரும் பணத்தின் மூலத்தை அரசாங்கத்திற்கு தெரிய படுத்த வேண்டுமென்று அரசாங்கம் சில சட்டதிருத்தங்களை
கொண்டுவந்தது. இத்தகைய கடும் சட்டத்தைக் கொண்டு வந்த அதே அரசு, எலெக்டோரல் பாண்டையும்
கொண்டு வந்தது ஏன்??
ஒரு சட்டதிருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்பு, அந்த சட்டத்திற்கு தொடர்புள்ள
அமைச்சரவைகள் மற்றும் நிறுவனங்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். அப்படி, “எலக்டோரல் பாண்ட்” க்கு தொடர்புடைய ஆர்பிஐ மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை கேட்டபோது, இரு நிறுவனங்களும்
எதிர்த்துள்ளது [Ref][ Ref]. ஆனால் அரசாங்கமோ அதை கண்டுகொள்ளவில்லை.
இந்த பாண்டு அறிமுகமாவதற்கு முன்னால் நன்கொடை கொடுப்பதில் சில கட்டுப்பாடுகள்
இருந்தன.
1) வெளிநாட்டு நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க முடியாது
2) நன்கொடை பணம், மூன்று வருடங்களில் கிடைக்கும் சராசரி லாபத்தில் 7.5
சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது.
3) நிறுவனங்கள், நன்கொடை விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஆனால், மேலே சொல்லப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளிலும் இருந்து விலக்கு பெற்றது
“எலக்டோரல் பாண்ட்”. எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை கொடுக்கலாம், எந்த வரம்பும் கிடையாது.
MAY 2019 வரை நன்கொடையாக அரசியல் கட்சிகள் பெற்ற பணத்தின் மதிப்பு 6000 கோடி. பாண்டை
அறிமுகம் செய்த முதல் மாதத்தில் மட்டும் 222 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இதில்
பாஜக 95 விழுக்காடு பணத்தை கையகப்படுத்தியது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம்,
மத்தியபிரதேசம் தேர்தலில், “எலக்டோரல் பாண்ட்”, ஜேம்ஸ் பாண்டை போல விளையாடியது. கர்நாடகாவில் அரசு
அமைப்பதில் இழுபறி நிலவிய காலகட்டத்தில், சில சட்ட தளர்வுகளை அரசு அறிவித்தது. பத்து
கோடி மதிப்புள்ள பாண்டுகள் 15 நாட்களுக்கு மேலும் செல்லுபடியாகும் என்று அறிவித்தது. (இதற்கும்
சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசியதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை). மற்றும், நன்கொடை கொடுக்கும் விவரங்கள் தெரியாவிட்டால்,
நிறுவனத்தில் “ஷேர்” வைத்திருக்கும் ஒருவருக்கு நன்கொடையின் விவரங்கள் எப்படி தெரிய
வரும். நன்கொடை என்னும் பெயரில் பணத்தை அள்ளி கொடுத்து நிறுவனம் திவாலாகிவிட்டால் யார்
பொறுப்பு? அரசியல் கட்சிகளுக்கு, யார் நன்கொடை கொடுக்கிறார்கள் என்பதை மக்கள் தெரிந்து
கொள்வதில் அரசுக்கு என்ன தயக்கம்? “எலக்டோரல் பாண்ட்” டை எதிர்கட்சிகள் ஏன் வீரியத்தோடு எதிர்க்கவில்லை? வரும் காலங்களில் தாங்கள் ஆட்சி அமைத்தால் இது பயன்படும் என்று நினைத்ததோ என்னவோ!!
2019 தேர்லுக்கு முன்னால் பாஜக 1450 கோடிகளும், காங்கிரஸ் 383 கோடிகளும் “எலக்டோரல்
பாண்ட்” ன் மூலம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது [Ref].
Comments
Post a Comment