கொரோனாவுக்கு (Corona) கோவிலா?
சீனாவில் கடந்த சில மாதங்களாக பல உயிர்களை பலிகொண்ட நோய்கிருமியின் (virus) பெயர் தான் “கொரோனா”. உலக நாடுகள் அதற்கான தடுப்பு
மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் நம் நாட்டு தெய்வீக விஞ்ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் கொரோனாவை எதிர்கொள்ள மருந்துகள் பலவற்றை மக்களிடம் பரப்பி
வருகின்றனர். மருந்தின் முக்கிய மூலப்பொருட்கள் மாட்டு சாணமும் மூத்திரமும்
(கெமிக்கல் காம்போ காம்ப்லெக்ஸா இருக்கே)!!!!. இந்து மஹாசபையின் தலைவர் சுவாமி
சக்கரபானி, சீன
அதிபருக்கு கொரோனாவை ஒழிப்பதிற்கு சில அறிவுரைகள் கொடுத்துள்ளார்.
- மாமிசம்
உண்பதையும் மற்ற உயிரினங்களை கொள்வதையும் தவிர்த்தல்,
- கொரோனாவுக்கு கோவில் கட்டி, வைரஸிடம்
பொது மன்னிப்பு கோருதல். (விட்டா தீ சட்டி எடுக்க சொல்வாங்க போல, நல்லவேளை கொரோனாவை தொட்டு கும்பிட சொல்லலை)
வளரும் நாடுகள், வளர்ந்த
நாடுகள் என்று பேதம் இல்லாமல், ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய
போலி அறிவுரைகள் மக்களிடம் பரப்பப்படுகின்றன. 2012 யில்
அமெரிக்கா ஒரு சூறாவளியால் பாதித்தபோது, ஆங்கில போதகர் ஜான்
மெக்டெர்னன், ஓரின சேர்க்கையை ஒபாமாவின் அரசு
அங்கீகரித்ததின் விளைவுதான் என்று குற்றம் சாற்றினார். அதைபோல், மத சார்பற்ற அமெரிக்காவை உருவாக்க நினைத்த சிலரின் பாவ செயலின் பலனாக தான்,
இரட்டை கோபுர தீவிரவாத தாக்குதல் நடந்ததாக மற்றொருவர் கூறினார்.
சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மும்பையின் முன்னால் காவல் ஆணையர்
சத்தியபால் சிங்க், ஐஐடி மாணவர்களை ராமாயணத்தில் வரும்
புஷ்பக விமானங்களை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதல் அவசியமென்று கூறினார்.
தொடர்ச்சியாக, நமது பிரதமர், விநாயகரின்
தலை ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் முன்னோடி என்று மற்றொரு உதாரணத்தை
புராணத்திலிருந்து கூறினார். புராணமாகவே இருந்தாலும் அது எப்படி ப்ளாஸ்டிக் அறுவை
சிகிச்சை??? தலை மாற்று (head transplantation) அறுவை சிகிச்சை என்றால் தானே பொருந்தும். இப்படி சமூகத்தில் உயர்ந்த
பதவியில் இருப்பவர்கள் பேசும்போதுதான் மெல்லிய பயம் நம்மில் எட்டிப்பார்க்கிறது.
தனிமனிதனின் மத நம்பிக்கை அவனை அல்லது அவளை சமூகத்தில் மேம்படுத்தும் என்றால்
வரவேற்கதக்கதே. ஆனால், நம்பிக்கை என்னும் துணியை யாரோ
ஒருவர்/பலரின் சுயநலத்திற்கு ஏற்ப தைத்து அதை இந்த சமூகத்துக்கு அணிய
நினைக்கும்பொழுது தான் விமர்சனம் எழுகிறது. இதற்கெல்லாம் மேலானது, திரிபுராவின் முதலமைச்சர், இன்டர்நெட்டும் (இணையம்) செயற்கைகோள் செய்தி
பரிமாற்றங்களும் மகாபாரதத்திலேயே இருந்தது என்று கூறியதுதான்.
கேள்வி கேட்காமல் சொல்லும் விஷயங்களை நம்பும் மன நிலையை மக்களிடம் உருவாக்க, பழக்க ஒரு பெரிய கூட்டம் வேலை
செய்கிறது. அதன் தொடக்க புள்ளிதான், கடவுள். கடவுளின் பயத்தை
மக்களிடம் விதைப்பதன் மூலம், ஒரு சமூகத்தில் மெதுவாக
மாற்றத்தை கொண்டுவருவது; சமூகத்தில் இருக்கும் புராண
கதைகளில் வரும் நிகழ்வுகளை, கதாபாத்திரங்களை இன்றைய
அறிவியலோடு எந்த ஆதாரமும் இல்லாமல் ஒப்பிட்டு கூறுவது; யாரேனும்
இதை தவறு என்று சொன்னால் அவர்களை மத எதிரிகளாக சித்தரிப்பது என்று பல யுக்திகளை
அந்த கூட்டம் கையாளுகின்றன. இத்தகைய நிகழ்வுகள் எல்லா மதங்களிலும் பாகுபாடின்றி
நடைமுறையில் உள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது விளையாட்டாக தெரிந்தாலும்,
மக்கள் பகுத்தறிவோடும், தர்க்கம் செய்தும் ஒரு
விஷயத்தை புரிந்து கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர் என்பது மட்டும்
தெளிவாகிறது. நம்பிக்கை வைப்பது தவறில்லை, அதே நேரம் அந்த நம்பிக்கையை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி,
ஆய்வு முடிவுகளை கட்டுரைகள் மூலம் சமூகத்திற்கு அளிக்கும்போது
ஆரோக்கியமாக இருக்கும். வெளி நாடுகளில் நம்மை கேலி செய்பவர்களுக்கும் இது ஒரு
பாடமாக இருக்கும்.
Comments
Post a Comment