CAA சரியா தவறா (CAA is good or bad)

கடந்த சில மாதங்கள் தொடங்கி இன்று வரை தோராயமாக இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் CAAவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆதரிப்பவர்களில், எதிர்ப்பவர்களில் எத்தனை பேருக்கு CAAவை பற்றி தெளிவான கருத்து இருக்கிறது என்று தெரியவில்லை. சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவலாக பரவி வருகிறது. இந்த செய்தி பாதி உண்மையாகவும், பாதி பொய்யாகவும் இருப்பதே பெரும் பயத்தையளிக்கிறது. ஏனென்றால், "half truth is even more dangerous than a lie" னு சொல்வார்கள். பாதி உண்மை பொய்யை விட ஆபத்தானது.

எதற்காக மத அடிப்படையில் ஒடுக்கப்படும் சிறுபாண்மையினருக்கு மட்டும் குடியுரிமை கொடுக்கப்படுகிறது? அப்படியென்றால் மொழி, இன, போர் கொடுமைகளுக்கு உள்ளானவர்களுக்கும் குடியுரிமை கொடுக்கப்பதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது? CAA, இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்துக்களையும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கிவிடும். ஆதலால், இது நல்ல சட்டம் அல்ல என்று போராட்டம் நடைபெறுகிறது. கவலை தரும் செய்தி என்னவென்றால், இந்த போராட்டங்கள் சில உயிர் பலிகளையும், துப்பாக்கி சூடுகளையும் சந்தித்துள்ளது. தில்லியில், ஷாகீன் பாக் (SHAHEEN BAGH) ல் [Ref] நடந்த CAAக்கு எதிரான போராட்டம், சமீபத்தில் நடந்து முடிந்த தில்லியின் தேர்தல் வெற்றியை தீர்மானித்த காரணிகளில் ஒன்று என்றால், போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. எந்த நாட்டிலும் சட்ட திருத்தம் என்று வந்தால் போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம் தான். போராட்டக்காரர்கள் அமைதியாவதும், இல்லை போராட்டம் தொடர்வதும், அரசு  தன் மக்களுக்கு  திருத்தப்பட்ட சட்டத்தை விளக்குவதன் மூலம் ஒரு முடிவுக்கு வரும். 

இந்த பதிவில், CAA சட்டதிருத்தம் சரியா தவறா என்பதை நான் விவாதிக்கவில்லை. மாறாக, வேறு எந்த நாடாவது, மத கொடுமைகளால் பாதிக்கப்பட்டு தன் நாட்டிற்கு வரும் அகதிகளுக்கு குடியுரிமை கொடுத்துள்ளதா? மதம் ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்தியா தான் இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளதா? உலக நாடுகள் இந்தியாவின் CAA சட்டதிருத்தத்தை எதற்காக எதிர்க்கிறார்கள்? இதற்கான விடைகளை சில வரலாற்று குறிப்புகளோடு இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய ஐக்கிய ராஜ்ஜியம் புதிய குடியேற்ற கொள்கைகளை அறிவித்துள்ளது (இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஒன்று சேர்ந்துதான் ஐக்கிய ராஜ்ஜியம் என்று அழைக்கப்படுகிறது). தேர்தல் வெற்றிக்கு முன்பே தனது தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல, ஆங்கில மொழியில் தேர்ந்த தனது குடியேறிகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. மொழி அடிப்படையில் முன்னுரிமை அளிப்பது மட்டும் சரியா? அதேபோல், கடந்த வாரத்தில், எத்தியோப்பிய நாட்டிலிருந்து அகதிகளாக வந்த பல நூறு யூதர்களை இஸ்ரேல் வரவேற்றுள்ளது [Ref]. இஸ்ரேல், யூதர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்பது தெரிந்ததே. மத கொடுமைகளுக்கு ஆளாகும் யூதர்களை இஸ்ரேல் எப்பொழுதும் அரவணைக்க தவறியதேயில்லை. ஆனால், இதே வரவேற்பை வேற்று மதத்தை சார்ந்தவர்களுக்கு அளிப்பார்களா என்பது சந்தேகம் தான்.

குடிமக்களாக இருப்பதற்கு CAA எதற்கு என் வம்சாவளியை கேட்கிறது?. மேலோட்டமாக பார்த்தால், இது இந்தியாவில் முளைத்த அதிசய சட்டம் போல தோன்றினாலும், பல நாடுகளில் இந்த சட்டத்தை கடைபிடிக்கிறார்கள். உதாரணமாக, UK, ஜெர்மனியில் தங்கள் வம்சாவளியை நிரூபித்தால், அந்த நாட்டின் பிரஜையாக ஆகலாம்.

நாட்டின் எல்லையை தாண்டி, வேற்றுமை இல்லாமல் அகதி என்று வரும் பிரஜையை எல்லா நாடுகளும் வரவேற்க, ஐக்கிய நாட்டு கூட்டமைப்பு வற்புறுத்தினாலும், யாரை நாட்டின் உள்ளே அனுமதிப்பது, யாருக்கு குடியுரிமை வழங்குவது என்று தனித்தனி சட்ட திட்டங்களை ஒவ்வொரு நாடுகளும் வைத்துள்ளது.

சிறுபாண்மை ரொஹிங்கிய முஸ்லிம்களை மியான்மர் துரத்திய போது எத்தனை நாடுகள் எதிர்த்தனர்? வங்காளதேசத்தை தவிர எத்தனை நாடுகள் அடைக்கலம் கொடுத்தனர்? அதேபோல், ஈராக், சிரியா மற்றும் வடஆப்பிரிக்கா அகதிகளை குடியேறிகளாக அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய ஹங்கேரி, போலந்து, செக் குடியரசு நாடுகளை எத்தனை நாடுகள் கேள்வி கேட்டனர்? ரஷ்யாவிலிருந்து மத அடிப்படையில், 1990களில் மதகொடுமைகளுக்கு உள்ளான யூதர்ளை எந்த நிபந்தனையும் இல்லாமல் அரவணைத்த அமெரிக்கா, ஹிட்லரின் ஆட்சியின் கீழ் அவர்கள் அழிக்கப்பட்ட போது, நிபந்தனையற்ற ஆதரவு தராதது ஏன்? [Ref] (அப்படியென்றால், ஐரோப்பிய யூதர்களுக்கு விளக்கெண்ணை, ரஷ்ய யூதர்களுக்கு நெய்யா? ஏன் இந்த பாகுபாடு?).

அமெரிக்காவின் USCIRF(மத சுதந்திரத்திற்கு என்று அமைக்கப்பட்ட அமெரிக்க ஆணையம்), தனது நாட்டு வரலாறு தெரிந்திருந்தும், இந்தியாவை மட்டும் விமர்சிப்பது ஏன்? தனது தோழைமை நாடுகளிலிருந்து மத கொடுமைகளுக்கு உள்ளான மக்களை குடியேறிகளாக இந்தியா வரவேற்பதில் USCIRF க்கு என்ன பிரச்சினை. எந்த நாட்டை அனுமதிப்பது, அந்த நாட்டில் எந்த சமூகத்தை அனுமதிப்பது போன்ற விஷயங்களில், உலக நாடுகள் பல தன்னிச்சையாக முடிவெடுத்துள்ள சூழலில் இந்தியாவை மட்டும் குறை கூறுவது ஏன்? பாகிஸ்தானில் மத கொடுமைகளுக்கு உள்ளான கிருஸ்தவர்களை மட்டும் சிவப்பு கம்பளம் விரித்து ஐரோப்பா, கனடா, அமெரிக்க நாடுகள் வரவேற்றது எந்த பிரிவில் சேரும்? இந்திய சட்ட திருத்தம் சரியா, தவறா என்று இந்தியர்கள் போராடுவது ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். ஆனால், பிற நாடுகள் விமர்சனம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. 


Comments

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

ஐரிஷ் பஞ்சம்

Bengal Famine

The Diary of Anne Frank

நைட்

அண்ணே! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா! Part 2

The Art of War

The Sixth Extinction: An Unnatural History

Sapiens: A Brief History of Humankind

schindler's list