அன்புடன் ஆச்சிக்கு...... (Lovable Grandma)



“என் தங்கங்களா................வாங்க............வாங்க..................”

சீருடை கூட மாற்றாமல் பள்ளியிலிருந்து நேராக விடுமுறைக்கு ஊருக்கு செல்லும் எங்களை கண்டவுடன், மாட்டுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்த கைகளோடு ஓடி வந்து பாதி அணைத்தும் அணைக்காமலும் முத்தமிடுவாள். எங்களை கண்டவுடன் அவள் முகத்தில் தெரியும் அவளின் சந்தோஷத்திற்கு முன், பள்ளி பருவத்தில் எங்களுக்கு “விடுமுறை” என்ற ஒற்றை வார்த்தை ஏற்படுத்திய உச்சக்கட்ட சந்தோஷம் கூட தோற்றுப்போகும்.

“ஏ பாணாங்குளத்தா...........பிள்ளைகள் வந்துருக்குல்ல. உன் வீட்டுல நிக்குற அந்த ரெண்டு கோழியயும் கொண்டாந்து விடு.”

விடுமுறை முடியும் வரை எங்கள் வீட்டு கோழிகள் மட்டுமல்ல, அக்கம் பக்கத்து நாட்டுக்கோழிகளும் எங்கள் வீட்டு அடுப்பில் வெந்து இரையாகிப் போகும். சக மனிதர்களின் பரஸ்பர புன்னகை கூட இலவசமாக கிடைப்பது அரிதாகி போன நகரங்களில் வளர்ந்த எனக்கு, அவளின் கட்டளைக்கு பறந்து வந்து தலையை கூட கொடுக்க காத்திருக்கும் பெட்டைக் கோழிகள் கூட வியப்பை தந்தது.

“இது என்ன??? எல்லாம் கொரிச்சிட்டிருக்கு. இந்த வயசுல பிள்ளைகள் எல்லாம் வயிறு முட்ட சாப்பிட வேண்டாமா. இன்னும் கொஞ்சம் போடுத்தா.......... ”

பிள்ளைகள் உண்ணும் அழகை ரசித்து பரிமாறும் என் அன்னையிடமே, இலையில் இன்னும் அதிகமாக போடச் சொல்லி அடம்பிடித்து, பின் வயிறு முட்டியதில் எழும்ப முடியாமல் தவிக்கும் எங்களை, கைகொடுத்து தூக்கிவிட்டு அழகு பார்க்கும் அவளின் அன்பு முன் அன்னை கூட பாசப் பரீட்சையில், இன்னும் சரியாக தேர்ச்சி பெறாத பிள்ளையாக தெரிவாள். அள்ள அள்ள குறையும் சட்டியை, அடுக்களைக்குள் எடுத்து சென்று, மீண்டும் நிரப்பி கொண்டு வந்து, பரிமாறி அன்னபூரணியின் கையில் சிக்கிய அட்சய பாத்திரமாகிப் போகும் எங்கள் வீட்டு பாத்திரம்.

“ஏட்டி உன் பிள்ளைகள வீட்டுல விட்டிட்டு வந்திருக்கியே. நீ இங்க வேலைய முடிச்சு போற வரை பட்டினியாதான கிடக்கும். இங்க கொண்டு வந்து விடு

சொந்த வீடு என்பதே கேள்விக்குறியாகிப் போன எங்கள் ஊரில், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அக்காவின் 4 பிள்ளைகளுக்கு மட்டும் இரண்டு வீடுகள். பகல் முழுதும் என் வீடு அவர்களுக்கும் வீடு. இரவு அவர்கள் வாழும் குச்சி வீடு அவர்களுக்கு மட்டுமே, எனக்கில்லை. என்றைக்காவது வரும் எங்கள் வீட்டு குழந்தைகளுக்காக போடப்பட்ட தொட்டில்கொக்கியில், தூலியிட்டு, வருடம் முழுவதும் உறங்கியது அந்த அக்காவின் கடைசிக் குழந்தை அதன் அன்னையின் ஆதரவோடு. என்னை அனுமதித்திருந்தால், குழந்தைகள் ஜாதிக்கென்று ஒரு கட்சியை ஆரம்பித்து, அதன் தலைவியாக அவளை நியமித்திருந்திருப்பேன்.

“ஏல காக்கா.............உன் சைக்கிள கொண்டா...........தோப்பு வரை போகனும்

வயிற்றில் “குடல் வால்” அறுவை சிகிச்சை செய்து வந்து படுத்திருந்த நிலையிலும், சைக்கிளின் பின்னால் அமர்ந்து, தினம் தன் தோப்பில் விழுந்து கிடக்கும் தேங்காயை திருடு போகாமல் எடுத்து மோட்டார் ரூமிற்க்குள் பத்திரப்படுத்தும் அவள் விவேகம் எடுத்துரைத்தது, என் அப்பாவின் தற்போதைய நிர்வாக திறமையை. அழைத்துச் சென்ற சைக்கிள்காரனுக்கு 2 நாள் கறிக்கு தேங்காய் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், சிட்டாய் மிதித்து அழைத்து வருவான், அவளை பின்னால் வைத்து அமர்த்தியபடி.

“பிள்ளைகளா..................நீங்க போய் உக்காருங்க. இன்னைக்கு நான் அரைச்சு குழம்பு வைக்கேன்

பனங்கிழங்கை நாரில்லாமல் கிழித்து வைத்து, மகள்கள், மருமகள்கள் பேதமில்லாமல் எங்கள் அம்மாக்களை கொறிக்கச் சொல்லி, அவர்கள் பேசும் கதைகளை கேட்டுகொண்டே, அவள் ஒருத்தி வைக்கும் அன்றைய குழம்பு, எங்கள் வீட்டு அத்தனை அம்மாக்களின் கைமணமும் ஒன்றுசேர வைத்த குழம்பாகவே சுவைக்கும். அன்று தான் புரிந்தது என் அப்பா அடிக்கடி “சித்தி போல வையு, சித்தி போல வையு” என்று என் அம்மாவிடம் சொல்லும் காரணத்தை. ஆம், அவள் என் அப்பாவின் சித்திதான். என் ஆச்சியின் தங்கை. என் தாத்தாவின் இரண்டாவது மனைவி. அக்கா தன் தங்கையிடம் இன்றுவரை பேசிக்கொண்டதை நாங்கள் யாரும் பார்த்ததில்லை. அதற்காக, இவள் ஒருவரையும் வேற்று வயிற்று பிள்ளையாக வேறுபடுத்தி பேதம் கண்டதில்லை.

“அவ அப்பவே அப்படித்தான். எச்சிக் கையால காக்கா ஓட்ட மாட்டா..............என்ன வேணும்னு எங்கிட்ட கேளு தங்கம். நான் என் கையால செஞ்சு தாரேன்

அரங்கு வீட்டின் பரணில் தொங்கிக் கொண்டிருக்கும் பையில், போன தீபாவளிக்கு வந்திருந்த முறுக்கு, தட்டைகளை இந்த பொங்கலுக்கு எடுக்கவா, வேண்டாமா என பலமுறை யோசித்து, பின் ஒருவழியாக எடுத்து, விளையாடிக் கொண்டிருக்கும் எங்களை அழைத்து பொக்கிஷம் போல தருவாள் என் பெரிய ஆச்சி, அப்பாவின் அம்மா. இவளோ, முதல் நாள் செய்து வைத்த பலகாரம் அனைத்தும் ஒருநாளில் தீர்ந்துவிட, மறுநாளும் இரண்டு ஆட்களை துணைக்கு வைத்துக்கொண்டு முறுக்கு, அதிரசம் சுட்டெடுத்து, எங்களை மட்டும் இரண்டு நாள் தீபாவளி கொண்டாட வைப்பாள், என் சின்ன ஆச்சி. உருவில்லா கருப்பையில் என்ன இருதுருவங்களா இருந்திருக்க முடியும் என அக்காவும் தங்கையும் ஜனித்த விசித்திரத்தை, இன்றுவரை எந்த அறிவியலாலும் எங்களுக்கு புரிய வைக்க முடியவில்லை.

“குழம்பு அடுப்புல கொதிச்சிட்டு இருக்கு................... பெரியவன செத்த இருந்து சாப்பிட்டுட்டு போக சொல்லுத்தா

சிறுபிராயத்தில், அவள் சேர்த்து வைத்த காசை எடுத்துச் சென்று செலவிட்டு திரும்பி வரும் என் அப்பாவிற்கு, தாத்தாவிடமிருந்து சுளீர் சுளீரென்று விழும் அடிகளில் பாதியை தன் முதுகில் வாங்கிக் கொள்வாளாம், தாத்தாவை தடுத்து நிறுத்தப்போய். விடுதியில் தங்கி படித்து விடுமுறைக்கு வீடு திரும்பும் அப்பாவிற்காக, வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னமே பெரிய போனிகளில், முறுக்கும் அதிரசங்களும் காத்திருக்குமாம். விளையாடி, உறவாடி, விடுதி திரும்பும் பொழுதும், பண்ட பரிவாரங்கள் படை சூழத்தான் புறப்படுவதுண்டாம். இன்றும், தன் பிள்ளைகள் யாரேனும் வந்துவிட்டால், அனுசமாய், அவசரமாய், அவள் குழம்பு வைத்துக் கொண்டிருக்கும் அரை மணி நேரத்திற்குள், “அன்று அவள் வாங்கிய அடிகளும், செய்து வைத்த பண்டங்களும்” என்று கதைப்புத்தகம் ஒன்று வாசிக்கப்பட்டிருக்கும் எங்களுக்கு, எங்கள் அப்பாக்களிடமிருந்து. எத்தனை முறை கேட்டும், நாங்களும் களைப்படைந்ததில்லை. அவர்களும் சொல்ல சளைத்ததில்லை.

“என்னம்மா இடியாப்ப மாவு, கழி மாவுனு சீட்டுல இருக்கு..........................”

கடைக்கு மசால் சாமான்கள் வாங்க எழுதி கொடுத்த சீட்டில், குறிப்பிட்டிருந்த உடனடி கழி, இடியாப்ப மாவு வகைகளின் பெயர்களைப் கண்டு தாத்தா திகைப்பதைப் பார்த்து நினைவு வந்தது, அவள் இருந்த வரை, இவ்வகை மாவுகள் அனைத்தும் எங்கள் வீட்டு உரலில் இடித்து உருவானது என்று. வீட்டு நிர்வாக அகராதியின் அனைத்து பக்கத்திலும் அவள் மட்டுமே அதிகாரம் செலுத்தி இருந்ததால், இன்று பாக்கெட்டுக்குள் இடப்பட்டு விற்கப்படும் இச்சரக்குகளின் இலக்கணம் கூட புதுமையாக இருந்தது போல, என் தாத்தாவிற்கு.


“நீ நல்லாரு........க்கனும்...............என் தங்கம்

வருடாவருடம் தீபாவளி, பொங்கல் என அனைத்து பண்டிகை நாட்களிலும் தாத்தாவிடம் திருநீறு பூசிவிட்டு, அவளிடம் பூச வரும் கால்களுக்கு, “கை நீட்டம்” கொடுக்க சில்லரைக் காசுகள் நிரம்பிய கிண்ணம் ஒன்று, நாங்கள் வரும் முன்னரே அவள் அலமாரியை அலங்கரித்துக் கொண்டிருக்கும். எங்கள் நெற்றிகளில் அழுந்த நீறிட்டு முத்தத்தோடு அன்று அவள் கொடுக்கும் இரண்டு ரூபாய்கள் என் அப்பாவிடம் கொடுக்கப்பட, அவை வாழ்த்திக் கொண்டிருக்கின்றன, அப்பாவின் அலமாரிக்குள் இருந்தபடி, அவளின் குரலோடு “நீ நல்லாருக்கனும்” என்று, இன்றும், எண்ணாயிரத்தை எட்டியபடி. வயதுக்கேற்ற வரவேற்றமாக, இறுதியாக இருநூறு ரூபாய் வாங்கியதாக நியாபகம்.

“பெரியவன் பிள்ளய கூப்பிடு..........”

இரண்டாவது முறையாக அவள் இருதயம் அடைப்பட்டு, இன்பா மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு, பேச திணறிக் கொண்டிருப்பவளிடம், எப்படி பேச என்று அவசரமாக கூட்டத்தோடு கூட்டமாக பார்த்துமட்டும் வந்தேன். வெளியே வந்த என்னை, “ஆச்சி.......உன்னத்தான் கூப்பிடுதாத்தா. போய் பாரு” என்றதும் உள்ளே சென்ற என்னைப்பார்த்து, பிரியும் உயிரை பிடித்து இழுத்து வைத்திருந்த வேளையிலும், தன் பேத்தியைப் பார்த்து, மெலிதாக சிரித்திருந்த அவள் உதடுகள் பார்த்தும், கைத்துணை இல்லாமல் நடந்து வந்து கட்டிலில் தன்னை தானே கிடத்திக் கொண்டதாக கூட வந்தவர்கள் வெளியே பேசிக் கொண்டதைக் கேட்டும் என் இதயம் என்னிடம் விழித்தது, இந்த இரும்பு இதயம் எங்ஙனம் அடைபட்டதென்று.

மண்ணோடு கலந்துவிட்ட நம் உயிரின் உண்மை:

மற்றொருமுறை மூக்கினுள் செறுகப்பட்டிருந்த குழாய்களும், அங்கங்கு குத்தப்பட்டிருந்த ஊசிகளும், அசைவற்ற அவளது உடலும் எங்கள் அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்திருந்ததுது. அவள் விழி மூடும் இடம், அவள் வாழ்ந்த வீடாக இருக்கட்டும் என்று ஊருக்கு குடும்ப மருத்துவரின் உதவியோடு அழைத்து வந்து கிடத்தப்பட, அவளோ ஊரின் வாசம் சுவாசித்த தெம்பிலும், மருத்துவத்தின் மகத்துவத்திலும், சில மணி நேரங்களில் அவள் விழி திறந்து எங்களின் விழிநீர் துடைத்துவிட்டிருந்தாள்.


“ இரு.........சாப்பிட்டுட்டு........... போ.........”

குடல் வரை இடப்பட்டிருந்த குழாயில், திரவமாய் மட்டுமே உணவு செலுத்திக் கொண்டிருந்த வேளையிலும், பார்க்க வருபவர்கள் அத்தனை பேரையும் அமரச் சொல்லி, அசைவு கொடுக்கும் தன் ஒற்றை கையை மட்டும் அசைத்து, தன் குரலில் ஒலி மறைந்து போயிருந்தும், காற்றைப் பேச துணைக்கு அழைத்துக்கொண்டு, சாப்பிடச் சொல்லும் அவள் பாங்கு நினைவு படுத்தியது, இருபது வருடங்கள் முன் இவள் இருந்த நாஞ்சிலில் எங்கள் தெரு மீன்காரி, காய்காரர் முதல்கொண்டு அனைவரும் இன்னும் இவள் கைமணம் மற்றும் கொடைகுணம் பற்றி பேசிக்கொண்டிருப்பதை. என் சித்தி மீன் வாங்கும் போது, மீன்காரி விற்கும் மீன்களை பார்ப்பதை விட, அவள் கூறும்

“அப்போ எல்லாம் உங்க ஆச்சி இருக்கும்போது தாயி ......................” என்று அவள் கூறும் கதைகளுக்காகவே காக்கை போல் ஓடிவருவேன்.

பனையும் பதனியும்:

ஊருக்குச் சென்றால் அதிகாலை ஒற்றைப்பனை பதனியும், அவள் கைகளாலேயே துகிலுரிக்கப்பட்டு கீறிய கரும்புத்துண்டுகளும், நாருரிக்கப்பட்ட பனங்கிழங்கும், தலை சீவப்பட்ட நுங்குகளும், அவித்த மஞ்சள் பனம்பழமும், தறித்த தவங்கொட்டை பருப்புகளும், இளநீரும் கொடுத்து, அவளின் மாலை அனைத்தும் மஞ்சளாக மயங்கும், எங்கள் விடுமுறை வளமாக கழிவதைப் பார்த்து. சின்ன வயதில் பதனீரின் அருமை தெரியாமல் வேண்டாம் என்று பிடித்த முரண்டுகளை கூட, ”கொஞ்சம் குடிச்சு பாரு என் தங்கம்.........” என்ற அவள் கெஞ்சல்கள் வென்று, இன்று தினம் குடிக்க பழக்கி விட்டிருக்கிறது ஊருக்கு சென்று விட்டால்.

கால்நடைப் பாசம்:

மாடுகளை குளிப்பாட்டச்சொல்லி, கூர்மையான கொம்புகளுக்கு வர்ணம் பூசி பார்த்து, நெற்றித்திலகமிட்டு, தொழுவத்தின் வாசலில் கோலமிட்டு பொங்கலிட்டு எங்களுக்கும் மாட்டுப்பொங்கல் கொண்டாட சொல்லிக்கொடுத்திருக்கிறாள்.

கோழிகளுக்கு பக் பக் சொல்லி நெல்மணிகள் சில தூவாமல் அவளின் அடுத்த பகல் புலர்ந்ததில்லை.

அம்மா இல்லாத ஆட்டுக்குட்டிகளை தன் கட்டில் காலில் கட்டி வைத்து, பீங்கான் புட்டிகளில் ரப்பர் போட்டு, பால் அடைத்து புகட்டி ஆசை ஆசையாக வளர்ப்பாள். தன் அன்பு பேரன்கள் வந்தால் “தானும் வளர்க்கிறேன் பேர்வழி” என்று கூட்டு சேர்ந்து, சென்ற இடமெல்லாம் இழுத்துச்சென்று, அழுத்தி அரவணைத்து வருடத்துக்கு ஒன்று என இரண்டு, மூன்று ஆடுகள் அவள் கண் முன்னே இறந்தது கண்டு அவள் மனம் கணத்தாலும், பேரன்களிடம் முகம் கோணத்தெரியாமல், சிரித்து தன் முகவாட்டத்தை மறைப்பாள்.

“ஏய்யா இங்க வாங்க..................இது என் மூத்த மகன் வீடு..........”

அழைப்பு விடுத்தால் இரவெல்லாம் அருகில் அமர்ந்து ஆயிரமாயிரம் விஷயம் பேசி, அவள் கொடுக்கும் மிச்சர், காராசேவை கொறித்துக்கொண்டு காத்து கிடக்கும் அவள் ஊர் மக்கள் போல், எங்கள் வீட்டில் தங்கியிருந்த பத்து நாட்களிலும், வாசலில் அமர்ந்து கொண்டு, தானுண்டு தன் வேலையுண்டு என்று ரோட்டில் சென்று கொண்டிருப்பவர்களை அழைத்து கதைப்பேச முயற்சித்து தோற்றுப் போனதில், நகரம் அவளுக்கு நரகமாகிப்போயிருந்தது. அதன்பின்னர் யார் வீட்டிலும் இரண்டு நாட்களுக்கு மேல் தங்க அவள் தயாராயில்லை. இல்லையெனில், அவள் காலம் வரை கூடவே வைத்து அவள் அன்பில் இன்னும் கொஞ்சம் களித்திருந்திருப்பேனோ என்னவோ.


பட்டணத்துப் புளிய மரம்:

தன் மகன் வீட்டு முற்றத்தில் கவனிப்பாரன்றி நின்று கொண்டிருந்த புளிய மரத்தில், ஆள் வைத்து, புளி பறித்து, உடைத்து, பிரித்து, ஏழு மூடைக் கட்டி, தன் அத்தனை பிள்ளைகள் வீட்டிற்கும் அனுப்பி வைத்த சந்தோஷத்தில், நோயாளியாக சென்னைக்கு மருத்துவம் பார்க்கச் சென்ற அவளின் களைப்பு அனைத்தையும் கலைத்திருந்தாள். எங்கள் வீட்டு அம்மாக்கள் அனைவரும் அப்போது பக்கத்து வீடுகளில் குழம்பு பறிமாறி, அவள் அனுப்பிய பட்டணத்துப்புளி பெருமிதம் பேசிய நியாபகம் இன்றும் நினைவுகளாக புளிக்கிறது.

“நாச்சியா எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டாவ..............அதே காணும் ஐயா.........”

நாற்று நடவும், களை பறிக்கவும் வரும் வேலையாட்களுக்கு, இன்று வேளா வேளைக்கு விலைக்கு வாங்கி கொடுக்கப்படும் சாப்பாடு, காபி, பண்டங்களை விட, அன்று அவசரத்துக்கு வேலிகளில் படர்ந்திருக்கும் பிரண்டைகளை பிடுங்கி அரைத்த துவையலும், மீந்து போன தடியங்காயில் வேக வைத்த வெள்ளைபுளிக்கறியும் அத்தனை பேரின் ஒருநாள் வயிற்றுப் பசியை ஒருவேளை சாப்பாட்டில் நிரப்பிவிட்டிருக்கும், அவள் கையால் செய்யப்பட்டதால்.

வாங்கிய வயல்களும் களங்களும்:

வளம் குறைந்த நாட்களில், பால் விற்றும், மோர் விற்றும் அவள் சம்பாதித்திருந்த சனங்களின் தொடர்பால், சிறுக சிறுக அடைக்கப்பட்டது, அவள் வாங்கிப் போட்ட வயல் மற்றும் களங்களின் கடன்கள். வந்ததை விட வேண்டாம் என்று விளையாட்டாக அவள் விதைத்து போட்ட சொத்து, இன்று அட்டணக்கால் போட்டு அமர்ந்து மறுக்கின்றன கோடிகளோடு விலை போக.

எங்க ஊரு "தல":

நாங்கள் விளையாடி களைத்து தண்ணீர் குடிக்க வந்த இடைவேளையில், எங்கள் வீட்டுக்கூடத்தில் சிறு கூட்டத்துடன், ஆட்டுக்கார அண்ணன் கல்யாணம் நடந்து முடிந்து விட்டிருந்தது. அதுவரை தாத்தாவும் அப்பாக்களும் அடங்கிய ஆண்சமுதாயம் மட்டுமே தலைமை ஏற்க தகுதியானவர்கள் என்ற என் தற்குறித்தனம் தகர்த்தெறியப்பட்டது, அவள் தாலி எடுத்துக் கொடுக்க இவர்கள் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து. முதல் நாள் இரவு எங்களுக்கு விளையாட்டுக்கூடமாக இருந்த கொட்டகையும், விளையாட்டின் ஊடே ஆளுக்கொரு கவளம் உருட்டி கொடுத்த அவளும், கம்பீரமாக காட்சியளித்தனர் அடுத்த நாள், ஒரு கல்யாணம் முடித்த வைத்த கர்வத்தில்.

"என் தங்கத்துக்கு ஒரு குறையும் வராது........'

இளமையில் உழைப்புக்கும் முதுமையில் ஒவ்வாமைக்கும் பரிகொடுக்கப்பட்ட பின்பு, அவளது மண்டை ஓட்டில் மிச்சமிருந்த சொச்ச முடிகளை அள்ளி மயிற்க் கொடி சேர்த்து, சுற்றி செருகி பூ முடித்து வைத்தால் கூட, கொண்டையிட்ட என் இருகைகளையும் சேர்த்து பிடித்து முத்தம் கொடுத்தபடி கூறுவாள் மேற்சொன்ன வாக்கியத்தை, ஏதோ நான் கதாகாலட்சேபம் செய்து முடித்து திரும்பியது போல்..இன்றும் கவலைகள் எத்தனை சூழ்ந்தாலும் கலங்க விட்டதில்லை அவள் வாயார வாஞ்சையுடன் வாழ்த்திய வார்த்தைகளும், அது பொய்த்து விடாது என்ற நம்பிக்கையும். வருத்தம் ஒன்றுதான், அவள் வாழ்த்துக்களை வரவு வைக்காமல் விட்டுவிட்டேனே என்று. வைத்திருந்தால் வருடத்திற்க்கு ஐம்பது, நூறு தாண்டியிருந்திருக்கும். யாருக்கு அதிகம் என விளையாடி கலைந்திருப்போம்.




" இந்நேரம் ஆச்சி இருந்திருந்தா......"

சொர்க்கம் போய் சேர்ந்து சுவரில் சித்திரப்படுத்தப்பட்டு பல காலம் ஆன பின்னரும், சன்னமாக கூட சரியவில்லை அவளை பற்றிய எண்ணம் சொந்தங்களின் சிந்தனையில். எனது ஏகாந்தம் சிலதை வண்ண வண்ணமாய் வரைந்து நிறைத்திருக்கின்றன அவள் நினைவுகள். எங்கள் வீட்டினர் குணங்கள் பலதில் வாசமாக வீசி வித்திட்டிருகின்றன அவள் செயல்கள், சில பார்த்து வந்ததும், பல இரத்தம் வழி வளர்ந்ததும்.

அவள் செய்த இத்தனைக்கும் கட்டணமாக அவளுக்கு கப்பம் கட்டுகிறேன் இக்கதையினை.

Comments

  1. Native touch.. expecting similar stories...

    ReplyDelete
  2. Heart melt....
    Anaivaradhu mandilum neengadha oru achiii atchi seidhu kondu dan irukiral....
    Onaku oru koravum varadhu yen Thangam...

    ReplyDelete
  3. Enga ammachi neyabagam vanthuduchi. Romba nalla ezhuthirukinga. Chinna vayasu niyabagatha apdiye kamichitinga. Thanks and expecting more from you ..

    ReplyDelete
  4. Enga ammachi neyabagam vanthuduchi. Romba nalla ezhuthirukinga. Chinna vayasu niyabagatha apdiye kamichitinga. Thanks and expecting more from you ..

    ReplyDelete

Post a Comment

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

ஐரிஷ் பஞ்சம்

Bengal Famine

The Diary of Anne Frank

நைட்

அண்ணே! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா! Part 2

The Art of War

The Sixth Extinction: An Unnatural History

Sapiens: A Brief History of Humankind

schindler's list